மேலும்

போர்க்குற்ற வழக்கை எதிர்கொண்டுள்ள ஜெனரல் ஜெகத் ஜயசூரிய எங்கே?

Brazil Sri Lanka War Crimesபிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளில் போர்க்குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா தூதுவர் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, பிரேசிலை விட்டு வெளியேறி விட்டதாக, ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இறுதிக்கட்ட போரின் போது, இடம்பெற்ற படுகொலைகள், சித்திரவதைகள், காணாமல் போதல்களுக்கு பொறுப்பாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் இராணுவத் தளபதியும், பிரேசிலில், சிறிலங்காவுக்கான தூதுவராகப் பணியாற்றியவருமான ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக நேற்று முன்தினம் பிரேசிலியாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் தலைமையிலான மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த போர்க்குற்ற வழக்கை தாக்கல் செய்துள்ளன.

ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, பிரேசிலில் இருந்து கொண்டு, ஆஜென்ரீனா, கொலம்பியா, பெரு, சூரினாம், சிலி ஆகிய நாடுகளுக்கான சிறிலங்கா தூதுவராகவும் பணியாற்றி வந்தார்.

Brazil Sri Lanka War Crimes

சிறிலங்கா தூதரகம் – பிரேசிலியா

இதனால், பிரேசிலில் மாத்திரமன்றி, கொலம்பியாவிலும், அவருக்கு எதிராக நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஏனைய நாடுகளிலும் வழக்குகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெனரல் ஜெகத் ஜயசூரிய எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, கடந்த ஞாயிற்றுக்கிழமையே பிரேசிலை விட்டு வெளியேறிவிட்டதாக, பிரேசிலின் நீதித்துறை அதிகாரிகள் தமக்குத் தெரிவித்ததாக, இந்த வழக்குத் தொடுத்துள்ள சட்டவாளர்  கார்லோஸ் காஸ்ரெசானா பெர்னான்டஸ், ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை எனவும் ஏபி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *