மேலும்

கொழும்பில் நாளை தொடங்குகிறது இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு

Indian Ocean Conference 2017இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு-2017 கொழும்பில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தலைமையிலான உயர்மட்டக் குழு புதுடெல்லியில் இருந்து கொழும்பு வரவுள்ளது.

சுமார் 35 நாடுகள் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கு சிறிலங்கா பிரதமரின் செயலகமான அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

இதில், சிறிலங்காஅதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட  25 பேச்சாளர்கள் உரையாற்றவுள்ளனர்.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, முன்னேற்றம், செழிப்பு என்ற தொனிப் பொருளில், புதுடெல்லியைத் தளமாக கொண்ட இந்தியா பவுண்டேசன் அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தலைமையில், வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெயசங்கர், தொடருந்து துறை அமைச்சர் சுரேஸ் பிரபு உள்ளிட்ட குழுவினர் பங்கேற்கின்றனர்.

அமெரிக்காவின் சார்பில், தெற்கு மத்திய ஆசியாவுக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் தலைமையிலான உயர்மட்டக் குழு பங்கேற்கிறது.

பங்களாதேஸ், ஜப்பான், நேபாளம், மொறிசியஸ், வியட்னாம் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் மட்டக் குழுக்களும், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஜேர்மனி, கென்யா, தென்கொரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகள் மட்டக் குழுக்களும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளன.

அதேவேளை, அழைப்பு பேச்சாளர்களின் பட்டியலில் சீன பிரதிநிதிகள் எவரும் இடம்பெறவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் அமைச்சர் சாகல ரத்நாயக்க, கொழும்பில் உள்ள சீன தூதுவர் சீனாவின் பிரதிநிதியாக பங்கேற்பார். பல்வேறு சீன அமைப்புகளும் இதில் கலந்து கொள்கின்றன என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *