மேலும்

வடக்கின் புதிய அமைச்சர்களாக ஜி.குணசீலன், சிவநேசன் – முதலமைச்சர் பரிந்துரை

CM-NPCவடக்கு மாகாணசபையின் புதிய அமைச்சர்களாக, மருத்துவ கலாநிதி ஜி.குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சர் மருத்துவ கலாநிதி சத்தியலிங்கம் பதவி விலகியதை அடுத்து, அந்தப் பதவிக்கு வேறெவரும் நியமிக்கப்படவில்லை.

அதேவேளை, ரெலோவின் கோரிக்கைக்கு அமைய, போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரனை அமைச்சர்கள் வாரியத்தில் இருந்து நீக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம், முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்றுமுன்தினம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

எனினும், டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கை தொடர்பாக, சட்டமா அதிபர் திணைக்களத்திடம், ஆளுனர் ரெஜினோல்ட் குரே சட்ட ஆலோசனைகளை கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு அமைச்சுக்களுக்கு தற்போது பொறுப்பாக இருப்பது யார் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், சுகாதார அமைச்சராக, மன்னார் மாவட்டத்தில் இருந்து வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட மருத்துவ கலாநிதி ஜி.குணசீலனை நியமிக்குமாறு ஆளுனருக்கு, முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இவர் ரெலோவின் சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், புளொட்டின் சார்பில் போட்டியிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில், இருந்து மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட சிவநேசனையும், அமைச்சராக நியமிக்குமாறு, வடமாகாண ஆளுனருக்கு, முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.

வடமாகாணசபை உறுப்பினர், விந்தன் கனகரத்தினத்துக்கு, எழுதியுள்ள கடிதம் ஒன்றில், மருத்துவ கலாநிதி ஜி.குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகிய இருவரையும் அமைச்சர்களாக நியமிக்க ஆளுனருக்கு பரிந்துரைத்திருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ரெலோ தமது சார்பில் விந்தன் கனகரத்தினத்தை, அமைச்சர்கள் வாரியத்தில் இணைத்துக் கொள்ளுமாறு முதலமைச்சரிடம் கோரியிருந்தது.

எனினும், ரெலோவின் கோரிக்கையை புறக்கணித்து, விட்டு மருத்துவ கலாநிதி குணசீலனை சுகாதார அமைச்சராக நியமிக்க முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.

இது, ரெலோவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிருப்தியை வெளியிட்டு ரெலோ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, ரெலோவின் பரிந்துரையை தாம் திட்டமிட்டு புறக்கணிக்கவில்லை என்றும், சுகாதார அமைச்சராக துறை சார்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதாலேயே குணசீலனை நியமிக்க முடிவெடுத்துள்ளதாகவும், விந்தன் கனகரத்தினத்தை தமது அமைச்சுடன் இணைந்து செயற்பட அழைத்துள்ளதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், ரெலோ பொதுச்செயலர் சிறீகாந்தாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், வட மாகாணத்தின் புதிய அமைச்சர்களாக, சிவநேசனும், மருத்துவ கலாநிதி குணசீலனும் பதவியேற்பது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *