மேலும்

ரஷ்யாவுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவாக்குவதில் சிறிலங்கா ஆர்வம்

kapila Waidyaratneரஷ்யாவில் நடக்கும் ‘இராணுவம்-2017’ என்ற அனைத்துலக பாதுகாப்பு கண்காட்சி, அனைத்துலக ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்.

‘இராணுவம்-2017’ என்ற அனைத்துலக இராணுவ- தொழில்நுட்ப கண்காட்சி, ரஷ்யாவின் அலபினோ இராணுவ பயிற்சி மைதானம், குபின்கா விமான ஓடுதளம், தேசப்பற்று அவை மற்றும் மொஸ்கோ பிராந்திய கண்காட்சி மையம் ஆகியவற்றில் நேற்று ஆரம்பமானது.

உலகின் பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு குழுக்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. சிறிலங்கா தரப்பு குழுவுக்கு பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன தலைமை தாங்குகிறார்.

கண்காட்சியில் பங்கேற்றுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ரஷ்யாவின் ஸ்புட்னிக் நாளிதழிடம் கருத்து வெளியிடுகையில்,

“ ரஷ்யாவிடம் உள்ள ஆயுதங்களைப் பார்வையிடுவதற்காக வந்திருக்கிறோம். ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்கிய அனுபவம் சிறிலங்காவுக்கு உள்ளது.

இங்கு வந்திருப்பது நல்ல வாய்ப்பாகும். இந்த கண்காட்சி மிகவும் சுவாரசியமாக உள்ளது. நாள் இதுவரை பார்த்திராத கேள்விப்பட்டிராத கண்காட்சியாக மட்டுமல்ல, நாம் சில அறிவுகளை பெற்றுக் கொள்ளவும், அனைத்துலக ஒத்துழைப்பை விரிவாக்கவும் இது உதவும்.

ரஷ்யாவின் போர்க்கப்பல்களில் சிறிலங்கா ஆர்வம் கொண்டிருந்தது. அது தொடர்பாக கலந்துரையாடப்படுகிறது. இந்த நேரத்தில் நாங்கள் கப்பல்களை வாங்குகிறோம். அது பற்றிய பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

தீவிரவாத முறியடிப்புத் தொடர்பாக, ரஷ்யாவின் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளவும், ஏனைய நாடுகளிடம் பகிர்ந்து கொள்ளவும், அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவும் சிறிலங்கா விரும்புகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *