மேலும்

நோர்வே தமிழ் 3இன் தமிழர் மூவர்-2017 – இளைய பல்துறை ஆளுமையாளர்கள் மதிப்பளிப்பு

norway-tamil-3 -2017 (1)Entrepreneurship எனப்படும் துறையில் மிக இளவயதில் (19) தடம்பதித்து வரும் மயூரன் லோகநாதன், மருத்துவரும் உலகளாவிய சுகாதாரம் மற்றும் எயிட்ஸ் நோய்த்தடுப்பு சார்ந்து மிகுந்த ஈடுபாடு உள்ளவரான ஆரணி மகேந்திரன், தமிழ் பாரம்பரிய வாத்திய இசைவடிவங்களுடன் மேற்கத்திய இசைவடிங்களை இணைத்து புத்தாக்க இசைப்படைப்புகளை வழங்கி வரும் மீரா திருச்செல்வம் ஆகியோருக்கு 2017ஆம் ஆண்டுக்கான தமிழ் 3இன் தமிழர் மூவர் விருது வழங்கப்பட்டுள்ளது.

நோர்வே தமிழ் இளையோர்கள் மத்தியில்,முன்மாதிரியாகவும் (Role models)  உந்துதலாகவும் கொள்ளக்கூடிய இளையோர்களை அடையாளம் கண்டுமதிப்பளிக்கும் செயற்பாட்டினை 2015ஆம் ஆண்டிலிருந்து நோர்வே தமிழ் 3 வானொலி முன்னெடுத்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான இளைய ஆளுமையாளர்களுக்கான மதிப்பளிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.05.17) இடம்பெற்ற தமிழ் 3 இன் சங்கமம் நிகழ்வில் இடம்பெற்றது.

நோர்வேயின் பலபாகங்களிலிருந்தும் பரிந்துரைகள் கோரப்பட்டு,கிடைக்கப்பெற்ற பரிந்துரைகள், 5 பேர் கொண்ட நடுவர் குழுவினால்,ஆராயப்பட்டு,விவாதிக்கப்பட்டு ஆளுமைகள் விருதுக்குத் தெரிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது.

மருத்துவர் சுசில்குமார் ஆறுமுகம் தலைமையில், சட்டவாளர் பிரசாந்தி சிவபாலச்சந்திரன், கவிஞர் தியாகேஸ்வரி நாதன், ஊடகவியலாளர் ராஜன் செல்லையா, ஊடகவியலாளர் ரூபன் சிவராஜா ஆகிய ஐவர் கொண்ட நடுவர் குழுவினால் விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

norway-tamil-3 -2017 (2) norway-tamil-3 -2017 (3)

norway-tamil-3 -2017 (4)norway-tamil-3 -2017 (5)நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் வெளிநகரங்களிலிருந்து கல்வி சார்ந்தும் பல்வேறு துறைகள் சார்ந்த,கலைசார்ந்த தகைமையும் முன்மாதிரியாகக் கொள்ளக்கூடியவர்களுமான பல இளைய ஆளுமைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

நடுவர் குழுவின் தலைவராகபணியாற்றிய மருத்துவர் சுசில்குமார் ஆறுமுகம் மற்றும் சட்டவாளர் பிரசாந்தி சிவபாலச்சந்திரன்  ஆகியோர் மதிப்பளிப்பு நிகழ்வினை நெறிப்படுத்தினர்.

சங்கமம் நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியரும் சென்னைப் பல்கலைக்கழக அரசறிவியல் மற்றும் பொதுநிர்வாகத்துறைத் தலைவருமான இராமு மணிவண்ணன், கவிஞரும் நடன ஆசிரியருமான கவிதாலட்சுமி, இசையமைப்பாளர் நாதன் கிறிஸ்தோபர் ஆகியோரினால் முறையே மயூரன் லோகநாதன், ஆரணி மகேந்திரன் மற்றும் மீரா திருச்செல்வம் ஆகியோருக்கான விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இளையவர்கள் தான் ஒருசமூகத்தினுடைய எதிர்கால வளங்களாக உள்ளனர்.   புதிய சிந்தனைகளும் ஆளுமையும் கொண்டவர்களாக அவர்கள் விளங்குகின்றனர். அவர்களுக்கு உரிய வழிகாட்டலும் உந்துதலும் அவர்களின் எதிர்காலத்தினைச் சிறந்தோங்கச் செய்யும் எனும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டு வருவதாக தமிழ் 3 தெரிவித்துள்ளது.

நோர்வே தமிழ் இளையவர்களுக்கு மட்டுமல்ல, ஏனைய புலம் பெயர் நாடுகளின் இளையவர்களுக்கும் இவ் அடையாளப்படுத்தலும் மதிப்பளிப்பும் உந்துதலாக அமையுமென்று தமிழ் 3 வானொலி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் 3 இன் தமிழர் மூவர் – 2017 இற்குத் தெரிவாகி மதிப்பளிக்கப்பட்ட ஆளுமையாளர்கள் பற்றிய தெரிவுக்குழு நடுவர்களின் விளக்கம்

மயூரன் லோகநாதன்:

norway-tamil-3 -2017 (6)நோர்வேயில் பிறந்து வளர்ந்த இவர் இப்போது தொழில் முயற்சியை ஆரம்பிப்பதற்கு இளையோர்கள் எவ்வகையில் முயலலாம், நோர்வே தொழில் முயற்சியில் என்னென்ன புதிய அணுகுமுறைகளைக் கையாளலாம்  என பிரபலமான சமூகத்தளங்களில், கருத்தரங்குகளில் பேசி வருகின்றார்.

இவர்  தனது சிறுவயதிலேயே எம்மில் பலர் படிப்பிற்குரியதொரு துறையாக அனேகமாகத் தேர்ந்தெடுக்காத ஒரு துறையினைத் தனது துறையாகத் தெரிந்தெடுத்துள்ளார். Entrepreneurship என கூறப்படும் துறையே இவரது துறை. அண்மையில் கூட நோர்வேஜிய இளவரசர் கோகோன் (Håkon); மற்றும் நோர்வேப் பிரதமர் கலந்து கொண்ட கருத்தரங்கில் இவர் ஒரு முக்கிய பேச்சாளராக இருந்துள்ளார். பத்தாம் வகுப்பில் பயிலும் போதே உயர்வகுப்பு பாடங்கள் பதின்மூன்றைப் பயின்றுசித்தியடைந்த இவர் உயர்தரக் கல்வி பயிலும்போதே மாணவர்கள் ஆசிரியர்கள் பயன்படுத்துகின்ற ஒரு பொதுவான கணணித்தளம் Learningplatform; ஒன்றை தனது சகமாணவர்களுடன் உருவாக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

Minerva Schools at KGI எனப்படும் அமெரிக்காவின் San Fransiscoவில்உள்ள இலகுவில் அனுமதி கிடைத்துவிடாத ஒரு பல்கலைக்கழகத்தில் (Business andComputer Science) வர்த்தகவியலும் கணினித்துறையும் பயின்று வருகின்றார்.

நோர்வேயில், இந்தப் பூகோளம் எதிர்நோக்குகின்ற,வறுமை,சூழல் மாசடைதல் போன்ற சவால்களை எவ்வாறு தீர்க்கலாம் எனஆராய Young SustainableImpact;  எனப்படும் ஒரு நிறுவனத்தினை நிறுவி உலகம் பூராவுமேயுள்ள வல்லமையுள்ள இளைஞர்களை ஒரு தளத்தில் சந்தித்து ஆராயவுள்ளார் இவர். நோர்வேயைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல நாடுகளிலும் பல கருத்தரங்குகளிலும் உரையாற்றி வரும் இவர் நோர்வேயின் நம்பிக்கை நட்சத்திரமாகவுள்ளார்.

ஆரணி மகேந்திரன்:

norway-tamil-3 -2017 (7)Global Health உலகளாவிய சுகாதாரம், நோய்த்தடுப்பு செயற்பாட்டில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். மருத்துவராகத் தொழில் புரியும் இவர் நோர்வேயில் உள்ள வைத்தியர்கள் இணைந்து செயற்படுகின்ற MedHum எனப்படுகின்ற உதவியமைப்பின்  தலைவராக இருந்தவர். ஆபிரிக்காவில், குறிப்பாக மொசாம்பிக் நாட்டிலே தாய்மார்களிடமிருந்து சிசுக்களுக்கு எயிட்ஸ் நோய் பரவுகின்றமையினைத் தடுப்பதற்கான முக்கியமானதொரு செயற்திட்டத்தில் ஆர்வத்துடன் தலைமை தாங்கிச் செயற்பட்டவர். இவருடைய தலைமைதாங்கும் இயல்பு இந்தத் திட்டத்தின் வெற்றிக்குக் காரணமாகவிருந்துள்ளது.

தனது வைத்தியக்கல்வியை தொடரும் காலத்திலும் மாணவப் பருவத்திலும் பல பொதுஅமைப்புக்களில் ஈடுபட்டுத் தன்னார்வத்தொண்டில் ஈடுபாட்டுடன் இருந்துள்ளார் இவர். Nansen Freds senter  இல் இவரின் பங்களிப்பு மற்றும்  மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பில் இவர் காட்டிய ஈடுபாட்டினை குறிப்பிட்டுச் சொல்லலாம். உலகத்தின் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான வளங்களின் பரம்பலில் உள்ள சமச்சீரற்றதன்மை,அதிலும் வறிய பகுதியில் உள்ள மக்களிற்கு மருத்துவ உதவிகள் கிடைக்க வேண்டுமென்பதில் ஈடுபாடாயுள்ள வைத்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீரா திருச்செல்வம்:

norway-tamil-3 -2017 (8)தனது குழந்தைப் பருவத்திலேயே இசையில் ஈடுபாடு காட்டி வந்திருக்கின்றார். புல்லாங்குழல் இசையினை வழமையானதொரு மேடையில் இசைத்துக்காட்டி விட்டு திருப்தி கொள்ளும் அணுகுமுறை இவரிடம் இருந்ததில்லை. மாறாகஆழமான தேடலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கின்றார் இவர். தமிழ் பாரம்பரிய புல்லாங்குழல் இசையினை உரியவடிவத்தில், கேட்பவர்களை மெய்மறக்க வைக்கும் வகையில் வழங்கி வந்திருக்கிறார். ஒரு  இசைவடிவத்தினை எவ்வாறு ஏனைய வாத்தியங்களுடன் இணைத்துப் புதுமைசெய்யலாம் என்கின்றஆர்வத்துடன் செயற்பட்டு வந்திருக்கின்றார்..

தமிழ் பாரம்பரிய இசையினை மேற்கத்திய இசையுடன், குறிப்பாக நோர்வேஜிய இசைவிற்பனர்களுடன் இணைந்து வழங்குவதில் ஆழமான ஈடுபாடுகாட்டியுள்ளார். Fusion எனப்பாடும் இசை இணைவு இவரின் ஒரு தவமாகவே இருந்து வந்துள்ளது. பேர்கன் நகரிலேவாழ்ந்து வரும் இந்த வெற்றியாளர் தனது சகோதரியுடனும் ஏனைய இரு நோர்வேஜியர்களுடனும் இணைந்து இசைக்குழு ஒன்றை (9 Grader Nord) அமைத்து புதுமைகள் பலபடைத்து வருகின்றார்.

பன்னாட்டு இசை அமைப்பாளர்களுடன் இணைந்து பயணிக்கும் இவர் அவாவி நிற்பது ஒரு முற்போக்கு இசைவடிவத்தை. இசையென்பது ஒரு கட்டுக்குள் நிற்காமல் புதிய பல வடிவங்களை தேடிப் பிரவாகிக்கும் ஒரு நதி என்கிற ஆர்வத்துடன் ஒரு படைப்பாளியாக வளர்ந்து வருகின்றவர். நுண்மூல உயிரியல் துறையில் தனது உயர்கல்வியினைத் தொடர்ந்து வருகின்றார். விளையாட்டுத்துறையிலும் இயற்கையுடனும் ஈடுபாடான இவர், வலைபந்தாட்டத்திலும் நோர்வேஜிய தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கெடுத்துள்ளார்.

எழுத்தில்: – ராஜன் செல்லையா,  ரூபன் சிவராஜா

ஒளிப்படங்கள்: வாகீசன் தேவராசா

2 கருத்துகள் “நோர்வே தமிழ் 3இன் தமிழர் மூவர்-2017 – இளைய பல்துறை ஆளுமையாளர்கள் மதிப்பளிப்பு”

  1. Sie.Kathieravealu says:

    Encouraging the “Youngsters” is a great service toto encorage them to serve humanity.

  2. arni narendran says:

    Congratulations to NorwayTamil3 FM in recognising the young talent in the dispora, these Buddig Stars are taking the diaspora Tamil community to the next level- wishing them all success. Greetings to all from Mumbai.

Leave a Reply to arni narendran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *