மேலும்

போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் : பாகம் -2

Kasipillai Jeyavanithaசிறிசேன 2015 அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது பரப்புரை செய்த துண்டுப்பிரசுரங்களை காசிப்பிள்ளை தனது ஆர்ப்பாட்டத்தின் போது வைத்திருக்கிறார். சிறிசேனவைச் சூழ வெள்ளை நிற பாடசாலைச் சீருடையுடன் சிவப்பு நிற கழுத்துப் பட்டி அணிந்தவாறு சில பெண் பிள்ளைகள் நிற்கும் ஒளிப்படத்தையும் காசிப்பிள்ளை வைத்திருந்தார்.

அதில் நிற்கும் ஒரு பெண்பிள்ளை இவரது மகளான ஜெறோமி போலுள்ளதாகவும் காசிப்பிள்ளை தெரிவித்தார். ஜெறோமி காணாமற் போனதன் பின்னரே இந்த ஒளிப்படம் எடுக்கப்பட்டதாக காசிப்பிள்ளை உறுதியாகக் கூறுகிறார்.

சிறிசேன அதிபராவதற்கு முன்னர் இவர் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்திருந்த காலத்தில் ஒருபோதும் தனது மகளான ஜெறோமி படித்த பாடசாலைக்கு வருகை தரவில்லை என காசிப்பிள்ளை கூறினார். அவ்வாறு அவர் வந்திருந்தாலும் கூட, தனது மகள் சிவப்பு நிற கழுத்துப்பட்டியைக் கொண்ட பாடசாலையில் ஒருபோதும் கற்கவில்லை என காசிப்பிள்ளை தெரிவித்தார்.

காசிப்பிள்ளை ஒரு தடவை சிறிசேனாவைச் சந்தித்து தனது மகள் தொடர்பான விபரத்தைக் கூறியபோது விரைவில் மகளைக் கண்டுபிடித்துத் தர உதவுவதாக சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் இதுவரை அதிபர் சிறிசேனாவிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என காசிப்பிள்ளை கூறினார். தனது மகளைப் போன்ற பலர் இன்னமும் சிறிலங்கா அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்கின்ற உண்மையை ஏன் அதிபர் சிறிசேனா ஏற்றுக்கொள்ளவில்லை என்பது காசிப்பிள்ளைக்கு இன்னமும் புரியாத ஒன்றாகவே உள்ளது.

‘சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அரசாங்கம் எந்தவொரு நீதிமன்றங்களையும் நடத்த முடியாது. ஏனெனில் அவர்கள் சிறுவர்கள் என்பதால் அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் நீதிமன்றங்களை அரசாங்கம் வைத்திருந்தும் எவ்வித பயனுமில்லை. எமது பிள்ளைகள் கொல்லப்பட்டிருந்தால், அரசாங்கம் அவர்களின் எலும்புகளையாவது காண்பிக்க வேண்டும்’ என காசிப்பிள்ளை தெரிவித்தார்.

Kasipillai Jeyavanitha

அதிபர் சிறிசேனா மீது காசிப்பிள்ளை வைத்திருந்த நம்பிக்கையும் தற்போது குறைவடைந்து விட்டது. தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதில் சிறிசேன மீது காசிப்பிள்ளை சிறிதளவான நம்பிக்கையை மட்டுமே தற்போது கொண்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்கள் தமது பொறுமையை இழந்து வருகின்றனர்.

காணாமற் போனோர் என்பது தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள அதேவேளையில், இவர்கள் பொருளாதார ரீதியில் சவால்களைச் சந்தித்து வருகின்றனர். சிங்கள பேரினவாத இராணுவம் தற்போதும் வடக்கு கிழக்கில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்கள், விடுதிகள் போன்றவற்றையும் நடத்தி வருகின்றது. அத்துடன் போரின் போது இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. தமது வாழ்வாதாரத் தொழில்களை சிறிலங்கா இராணுவத்தினர் தற்போது மேற்கொள்வதால் தமது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி பெருமளவான தமிழ் மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் தற்போது வேறு பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையிலுள்ளனர். போரின் போது கணவன்மார்களை இழந்த பெண்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் மற்றும் ஏனைய சலுகைகளைப் பெறமுடியாத நிலையில் வாழ்வதாகவும் இவர்கள் தொழிலிடங்களில் பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாவதாகவும் சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

ராஜபக்ச காலத்தில் நிலவியதைப் போலவே தற்போதும் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்துள்ளதால் தொடர்ந்தும் தாங்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாகி வருவதாக தமிழ் மக்கள் கூறுகின்றனர். தமிழ் மக்களுக்குச் சொந்தமான கிராமங்களில் போர் நினைவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்கள் வாழும் இடங்களில் பௌத்த விகாரைகள் புதிதாக அமைக்கப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பணியாற்றிய பெண் மற்றும் ஆண் உறுப்பினர்கள் தற்போதும் கண்காணிக்கப்படுகின்றனர். இதனை சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கூட ஏற்றுக்கொண்டுள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த போதிலும் எவ்வித அரசியல் சுயாட்சி மற்றும் பொருளாதார உதவிகள் மற்றும் நீதி போன்றன மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர் என சாரூர் தெரிவித்தார். இந்த நிலை தொடர்ந்தும் நீடித்தால் இன்னமும் பத்து ஆண்டுகளில் மீண்டுமொரு யுத்தம் தொடங்கும் என இவர் எதிர்வுகூறுகிறார்.

சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதில் ஒரு அணியினர் சிறிசேனவிற்கு ஆதரவாகவும் மறு அணியினர் ராஜபக்சவிற்கு விசுவாசமாகவும் செயற்படுகின்றனர். தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை உருவாக்குதல், அனைத்துலக நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குதல் போன்றவற்றுக்கு ராஜபக்ச அணியினர் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான எதிர்ப்புக்கள் சிறிசேன பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ராஜபக்ச மீண்டும் அதிபர் பதவியில் அமரமுடியாது. ஆகவே இவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்சவை மீண்டும் அதிபராக்குவதற்கான திட்டம் ராஜபக்ச தரப்பிடம் உள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோத்தபாய ராஜபக்ச மீது போர் மீறல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர் மூத்த ஊடகவியலாளர்கள் மற்றும் தமது அரசாங்கத்தை விமர்சித்தவர்களைப் படுகொலை செய்தமை போன்ற பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே கோத்தபாய அதிபர் பதவிக்கு வருவதில் சில இடர்பாடுகள் காணப்படும்.Alan Keenan

‘மீண்டும் அதிகாரத்துவ ஆட்சி சிறிலங்காவில் இடம்பெற்றால், சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைத்த பலர் தண்டிக்கப்படுவர்’ என அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் சிறிலங்காவிற்கான மூத்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.

‘சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பான வாக்குறுதிகள் எவ்வித தெளிவான நோக்கையும் கொண்டிருக்கவில்லை. இவர்கள் இது தொடர்பாக தெளிவான நோக்கைக் கொண்டிருந்தால் நாட்டில் சாதகமான, சுயவலுவூட்டல் சுழற்சியில் இந்த நாட்டை ஆட்சி செய்திருந்திருக்க முடியும்’ என அலன் கீனன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து வாக்குறுதிகளையும் சிறிலங்கா நிறைவேற்ற  வேண்டும் என சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர்,  சிலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மை சிங்கள இனத்தவர்களால் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதுடன் இவர்களால் நல்லிணக்கத்தை உருவாக்குவதாகக் கூறிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டது. ஆகவே இதனைச் செயற்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும், ஆனால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் பல்வேறு யுத்த மீறல்களில் ஈடுபட்டதால் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சிங்கள சமூகம் எதிர்ப்பைக் காண்பித்து வருவதாகவும் இது நல்லிணக்கத்திற்கு இடையூறாக உள்ளதாகவும்  சிறிலங்காவின் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர் ஜெகன் பெரேரா தெரிவித்தார்.

‘இது ஒரு ஜனநாயக அரசாங்கமாகும். ஆகவே மக்கள் ஏற்றுக்கொள்வதை மட்டுமே இவர்களால் செய்ய முடியும். போரால் பாதிக்கப்பட்ட கம்போடியா, பங்களாதேஸ் மற்றும் ஆர்ஜென்ரீனா போன்ற நாடுகள் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் படி, குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்’ என பெரேரா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களின் சொந்த நிலங்களைப் பெறுவதற்கும், பொருளாதார வாய்ப்புக்களைப் பெறுவதற்கும், காணாமற் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்குமான உதவிகள் தற்போது வழங்கப்பட வேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி போன்றன சற்றுத் தாமதமாகலாம் எனவும் இனப்பாகுபாடுகள் கடந்து, போரின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை சிங்களவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.mano ganesan

‘என்னுடைய அறிவின் படி, காணாமற் போனவர்கள் எவரும் உயிருடனில்லை. இரகசியத் தடுப்பு முகாங்கள் இருப்பதாக நான் நம்பவில்லை’ என தேசிய ஒருங்கிணைப்பு கலந்துரையாடலுக்கான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

காசிப்பிள்ளை தனது கையில் வைத்திருக்கும் தனது மகள் என அடையாளப்படுத்தும் துண்டுப்பிரசுரம் தொடர்பாக வினவியபோது, சிலவேளைகளில் நம்பிக்கை கூட பொய்த்து விடுவதாகவும், தமது உறவுகளை அடையாளம் காண்பதில் தவறுகள் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் உள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரானது சிறிலங்கா அரசாங்கம் காணாமற் போனோர் தொடர்பாகக் கண்டுபிடிப்பதற்கு அழுத்தத்தை வழங்கும் என காசிப்பிள்ளை நம்பியிருந்தார். ஆனால் இந்த நம்பிக்கை கூட தற்போது பொய்த்து விட்டது. சிறிலங்கா அரசாங்கம் நீதியை நிலைநாட்டுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் மேலும் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் தற்போதும் காணாமற் போன தமது உறவுகள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் எனக் கோரி காசிப்பிள்ளையும் ஏனைய தாய்மார்களும் காணாமற் போன தமது உறவுகளின் ஒளிப்படங்களைக் கையில் ஏந்தியவாறு போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.

‘எமது பிள்ளைகளை எமக்குக் காண்பிக்காவிட்டால் நாங்கள் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம். நான் நல்ல செய்தியுடனேயே வீட்டிற்கு வருவேன் என எனது குடும்பத்திடம் கூறியுள்ளேன்’ என கடந்த ஒரு மாதமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காசிப்பிள்ளை தெரிவித்தார்.

வழிமூலம்     – U.S.News
ஆங்கிலத்தில் – Devon Haynie
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *