மேலும்

விடுதலைப் புலிகளை அழிக்க ஆலோசனை வழங்கிய கே.பி.எஸ்.கில் மரணம்

????????????????????விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்காவின் முன்னைய சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கிய, இந்தியாவின் பஞ்சாப் மாநில முன்னாள் காவல்துறை பணிப்பாளர் கே.பி.எஸ்.கில் நேற்று காலமானார்.

சிறுசீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று பிற்பகல் மரணமானார்.  இறக்கும் போது வயது 82 ஆகும்.

பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் எனப்படும் தனிநாடு கோரி நடத்தப்பட்ட சீக்கியர்களின் போராட்டத்தை கொடூரமான முறையில் ஒடுக்கியவர் கே.பி.எஸ்.கில்.

1991-93 காலப்பகுதியில் தனிநாடு கோரும் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இவரது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்த இவர், மற்றொரு தரப்பினரால் கிளர்ச்சி ஒடுக்கும் நிபுணராகவும் மதிக்கப்பட்டு வந்தார்.

இதனால் இவரை குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, சிறப்பு பாதுகாப்பு ஆலோசகராக நியமித்திருந்தார். சட்டீஸ்கர் அரசாங்கமும் இவரது பாதுகாப்பு ஆலோசனைகளைப் பெற்றிருந்ததது.

2000ஆம் ஆண்டு மே மாத நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும், ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மேற்கொண்டு சந்திரிகா அரசாங்கத்தை திணறடித்திருந்த நேரத்தில், கேபிஎஸ். கில் அவசரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

சந்திரிகா அரசாங்கம் இவரை கொழும்புக்கு அழைத்து, விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான ஆலோசனைகளை பெற்றிருந்தது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் தனக்கு தனிப்பட்ட முறையிலேயே அழைப்பு விடுக்கப்பட்டிந்தது என்றும் இதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பில்லை என்றும், கே.பி.எஸ் கில் அப்போது கூறியிருந்தார்.

அதேவேளை, இவர் விடுதலைப் புலிகளால் பூகோள பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று எச்சரிக்கும் வகையில் பல்வேறு கட்டுரைகளையும் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *