மேலும்

போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் – அமெரிக்க ஊடகம்

சிறிலங்காவில் 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்ததால் இந்த நாட்டில் வாழ்ந்த ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டனர். நான்கு பிள்ளைகளின் தாயாரான காசிப்பிள்ளை ஜெயவனிதா, உள்நாட்டு யுத்தம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களின் முன்னர் அதாவது மார்ச் 2009ல் தனது குடும்பம் எவ்வாறான அவலத்தைச் சந்தித்தது என்பதை விபரித்தார்.

போர் வலயத்தில் அகப்பட்டுத் தவித்த ஆயிரக்கணக்கான குடும்பங்களில் காசிப்பிள்ளையின் குடும்பமும் ஒன்றாகும். காசிப்பிள்ளையும் இவரது 17 வயது மகளான ஜெறோமியும் எறிகணைத் தாக்குதலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடிக்கொண்டிருந்த போது, ட்ரக் வாகனம் ஒன்று இவர்களுக்கு அண்மையில் வந்தது. அதில் இராணுவச் சீருடை அணிந்த ஆண்கள் சிலர் ட்ரக் வாகனத்திலிருந்து வெளியே பாய்ந்ததுடன் காசிப்பிள்ளை ஜெயவதனியையும் அவரது மகளையும் ட்ரக் வாகனத்திற்குள் தூக்கி எறிந்தனர். ஏற்கனவே அந்த ரக் வாகனத்தில் சில குடும்பங்கள் அச்சத்துடன் காணப்பட்டனர்.

‘இப்போது இந்த வாகனத்திலிருந்து நாங்கள் வெளியே பாய்வோம். நான் இந்த வீதியில் இறக்க விரும்புகிறேன்’ என ஜெறோமி கூறியதை காசிப்பிள்ளை நினைவுபடுத்தினார். ‘கவலைப்பட வேண்டாம். நான் இருக்கும் போது உனக்கு ஒன்றும் நடக்காது’ என ஜெறோமியிடம் காசிப்பிள்ளை தெரிவித்திருந்தார். ஒரு சில நிமிடங்களின் பின்னர், ட்ரக் வாகனத்திலிருந்த இராணுவச் சீருடை அணிந்த ஆண்கள் காசிப்பிள்ளையையும் அதிலிருந்த இன்னொரு தாயாரையும் வாகனத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டனர். அதன் பின்னர் தனது மகளை இதுவரை எங்குமே காணவில்லை என காசிப்பிள்ளை தெரிவித்தார்.

Kasipillai Jeyavanitha

யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பின்னர் 2015ல் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்ட போது காசிப்பிள்ளையும் நம்பிக்கையுடன் காத்திருந்தார். சிறிசேனவின் புதிய தலைமை மீது காசிப்பிள்ளை போன்றவர்கள் அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர். பொருளாதாரத்தை முன்னேற்றுவதாகவும், சட்ட ஆட்சியை மீளவும் நிலைநிறுத்துவதாகவும், போரின் போது காணாமற் போன பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதாகவும் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கினார்.

ஆனால் சிறிசேன அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இவரின் அரசாங்கத்தின் மீதான காசிப்பிள்ளை போன்றவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது குறைவடைந்து வருகிறது.

சிறிலங்காவில் சுற்றுலாத்துறை அபிவிருத்தியடைந்து வருகின்ற போதிலும் பெருமளவான மக்களின் வருவாயில் முன்னேற்றம் காணப்படவில்லை. சிலருக்கு எதிராக ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும், காணாமற் போனவர்களின் உறவுகளுக்கு நீதி வழங்கப்படவில்லை. இந்த நிலை நீடிக்குமானால் அதிகாரத்துவம் மிக்க தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் வன்முறைப் போராட்டம் ஒன்று இடம்பெறுவதற்கான நிலை உருவாகலாம்.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து, காசிப்பிள்ளை காணாமற் போன தனது மகளான ஜெறோமியின் ஒளிப்படத்தைத் தாங்கியவாறு பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ஏனைய 60 பெண்களுடன் இணைந்து காசிப்பிள்ளையும் காணாமற்போன உறவுகள் தொடர்பில் தகவல் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி உண்ணா விரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார். காணாமற் போனோர் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும், சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரியும் வடக்கில் குறிப்பாக முன்னாள் போர் வலயத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

போரின் போதும் போர் முடிவடைந்த பின்னரும் காணாமற் போன தமது உறவுகள் தொடர்பாக காசிப்பிள்ளை போன்ற பலர் பல்வேறு சம்பவங்களைப் பதிவு செய்துள்ளனர். படுக்கையில் கிடந்த தமது கணவன்மார்கள் இராணுவத்தினரால் கூட்டிச் செல்லப்பட்ட சம்பவங்களையும், வெளியில் சென்ற போது காணாமற் போன தமது சகோதரர்கள் தொடர்பாகவும் இவர்கள் கூறினர். இவ்வாறான ஆர்ப்பாட்டங்களின் போது பெரும்பாலான பெண்கள் அமைதியாக உள்ளதுடன் இவர்கள் தமது அன்புக்குரியவர்களின் ஒளிப்படங்களைத் தமது கைகளில் தாங்கியவாறும் உள்ளனர்.

காசிப்பிள்ளையின் முகமும் உணர்விழந்து காணப்பட்டது. ஆனால் ஜெறோமியைப் பற்றிக் கதைத்த போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியது. ‘நான் எனது மகளை இழந்து விட்டேன். ஒவ்வொரு நாளும் அல்ல ஒவ்வொரு நிமிடமும் நான் அவளை நினைத்து வருந்துகிறேன். எனது மகள் மலர்ச்சி மிக்க பண்பைக் கொண்டவள். ஆசிரியராக வரவேண்டும் என்ற இலக்குடன் வாழ்ந்தாள். பாடசாலை முடித்து விட்டு வீடு வந்தவுடன் எமக்கு உதவுவாள்’ என காசிப்பிள்ளை கூறினார். காணாமற் போனவர்களின் உறவுகளைப் போலவே காசிப்பிள்ளையும் தனது மகள் சிறிலங்கா அரசாங்கத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் உயிருடன் உள்ளாள் என நம்புகிறார்.

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது எத்தனை பேர் காணாமற் போயுள்ளனர் என்பதைக் கணக்கிடுவது சாத்தியமற்ற போதிலும், 100,000 பேர் வரை காணாமற் போயிருப்பார்கள் என அனைத்துலக மன்னிப்புச் சபை கணக்கிட்டுள்ளது. ஈராக்கிற்கு அடுத்ததாக உலக நாடுகளில் காணாமற் போனோர் அதிகம் என அறிக்கையிடப்பட்டுள்ள இரண்டாவது நாடாக சிறிலங்கா உள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தமானது  பௌத்த மதத்தைப்   பின்பற்றும் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் இந்துமதத்தைப் பின்பற்றும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கும் இடையில் இடம்பெற்றது. சிறிலங்காவானது பிரித்தானியாவின் கொலனித்துவத்திற்குள் உட்பட்டிருந்த போது, பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்கம் போன்றவற்றில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அதிகம் காணப்பட்டது.

ஆனால் 1948ல் சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர், சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிறிலங்கா அரசாங்கத்தால் பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. சிங்கள மொழி மட்டும் என்கின்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் பௌத்தர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கக் கூடிய விதமாக நாட்டின் அரசியல் யாப்பில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இவ்வாறான சில காரணங்களே தமிழ் மக்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தக் காரணமாகியது. சிங்களவர்களின் அதிகாரத்துவ நடவடிக்கை காரணமாக வடக்கு கிழக்கானது தமது தாயகபூமி என்பதால் இதனைத் தமக்கான தனிநாடாகத் தருமாறு கோரி தமிழ் மக்கள் யுத்தத்தை ஆரம்பித்தனர். இந்த யுத்தமானது தமிழ்ப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக தமிழ்ப் புலிகளால் 13 சிறிலங்கா இராணுவ வீரர்கள் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து 1983ல் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிங்களவர்களால் தாக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டனர்.

இந்த யுத்தத்தின் ஒரு வடிவமாக புலிகள் அமைப்பால் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் சிறிலங்காவின் அதிபர் ஒருவரும், இந்தியாவின் பிரதமர் ஒருவரும், பல ஆயிரக்கணக்கான சிங்களவர்கள், முஸ்லீம்கள் மற்றும் தமக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் எனக் கருதப்பட்ட தமிழ் மக்களும் கொல்லப்பட்டனர். தாம் எதிரியின் கையில் உயிருடன் பிடிபடும் போது சயனைட் அருந்தி சாவைத் தழுவுதல் என்பது புலிகள் அமைப்பின் மரபாகக் காணப்பட்டது.

யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு முடியும் வரை சிறிலங்கா அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு எதிராக பல சித்திரவதைகளை மேற்கொண்டது. குறிப்பாக பலவந்தக் காணாமற் போதல்கள், சித்திரவதை போன்றன தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டன. தமிழ் மக்கள் பலர் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டனர். இறுதியில் 2009ல் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் புலிகள் அழிக்கப்பட்டனர். இந்த யுத்தத்தில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக மகிந்த ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டது.

போரின் இறுதியில் வடக்கிற்குள் செல்வதற்கான அனுமதி எந்தவொரு ஊடகவியலாளர்களுக்கும் வழங்கப்படவில்லை. ஆனால் 40,000 வரையான பொதுமக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என ஐ.நா மதிப்பிட்டது. போர் தவிர்ப்பு வலயம் சிறிலங்கா அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், இங்கு தஞ்சம் கோரிய பொதுமக்கள் மீதும் இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். சரணடைந்த புலி உறுப்பினர்களை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன் படுகொலை செய்தனர். ஆனால் ராஜபக்சவின் விசுவாசிகள் இராணுவத்தினரின் மீறல்களை விமர்சிக்கவில்லை.

இவ்வாறான பல்வேறு மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் ராஜபக்சவிற்கு மீது சுமத்தப்பட்ட போதிலும் ராஜபக்ச எதற்கும் அஞ்சவில்லை. 2015ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற போது இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. ராஜபக்சவின் அரசியற் கட்சியைச் சேர்ந்த மைத்திரிபால சிறிசேன இவரது அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியிருந்தார். மைத்திரிபால சிறிசேன பல்வேறு சிறுபான்மைக் கட்சிகளினதும், இரு பெரும் சிங்களக் கட்சிகளைச் சேர்ந்த மிதவாத அரசியல்வாதிகளினதும் ஆதரவுடன் அதிபராகினார். பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் வெற்றி பெற்ற சிறிசேன, இன்னமும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

காணாமற் போனோருக்கான அலுவலகம் ஒன்றை அமைத்தல் உட்பட பல்வேறு விடயங்களை அமுல்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் 18 மாதகால அவகாசம் வழங்கப்பட்டது. வடக்கு கிழக்கில் சுயாட்சியை நிறுவுவதற்கு அனுமதிக்கும் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை மேற்கொள்வதாகவும் போரின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவதாகவும் சிறிசேன வாக்குறுதி வழங்கிய போதிலும் இன்னமும் இவை நிறைவேற்றப்படவில்லை.

தனது சொந்த அதிகாரத்தை மட்டுப்படுத்துவதற்கான நகர்வை முதற்தடவையாக சிறிசேன மேற்கொண்டிருந்தார். அத்துடன் அரசாங்கத்தின் முக்கிய துறைகள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கும் இவர் அனுமதித்தார். பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் மக்கள் தற்போது தமது அரசாங்கத்தை எவ்வித அச்சமுமின்றி விமர்சிப்பதற்கான நிலை தற்போதைய ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சில முன்னேற்றங்கள் எட்டப்பட்ட போதிலும், நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை விரைந்து முன்னெடுப்பதில் சிறிசேன ஆர்வம் காண்பிக்கவில்லை. இவரது சில நகர்வுகள் இவர் தனது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது. அத்துடன் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை உள்வாங்குவது தொடர்பான கருத்துக்களை மறுதலித்தே சிறிசேன தனது கருத்துக்களை முன்வைக்கிறார்.

இதுமட்டுமல்லாது யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இராணுவக் கட்டளைத் தளபதிகளைப் பாதுகாக்கும் விதமாகவும் இவரது கருத்துக்கள் அமைந்துள்ளன. ‘தான் எல்லாவற்றையும் மக்களுக்கு வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக சிறிசேன முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் இவர் தற்போது முற்றிலும் வேறுபட்ட ஒருவராக மாறிவிட்டார். இவருக்கென எந்தவொரு அரசியல் உறுதிப்பாடும் கிடையாது. தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் எதையும் வழங்க முன்வராது’ என வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்காகப் பணியாற்றும் பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளரான சரீன் சரூர் தெரிவித்துள்ளார்.
(தொடரும்)

வழிமூலம்       – U.S.News
ஆங்கிலத்தில்  – Devon Haynie
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *