முள்ளிவாய்க்கால் தேவாலயம் அருகே நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு
முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எட்டாவது ஆண்டு நினைவு நாளான இன்று, முள்ளிவாய்க்கால் கிழக்கு தேவாலயம் அருகே, நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறிலங்கா காவல்துறையினர் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றின் அடிப்படையில், நேற்றுமாலை முல்லைத்தீவு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஏ அறிக்கைக்கு அமைவாக, குறித்த இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு செய்வதனால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் தேசிய பாதுகாப்புக்கும், சமாதானத்துக்கும் பங்கம் ஏற்படுத்தும் எனக்கருதி, முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில், எந்த நிகழ்வையும் நடத்தக் கூடாது என, பாதிரியார் இராஜேந்திரன் எழில்ராஜன் உட்பட அனைவருக்கும், குற்றவியல் நடைமுறைக் கோவை பிரிவு 106ற்கு இணங்க 14 நாட்களுக்கான இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம் விதிப்பதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாலயப் பகுதியில் இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நினைவுக் கற்களை நாட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. இதுதொடர்பாக அருட்தந்தை எழில்ராஜன் நேற்றுமுன்தினம் இரவு முல்லைத்தீவு காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, நினைவுக் கற்களை நாட்டும் நிகழ்வைத் தடுக்கும் வகையிலேயே முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சிறிலங்கா காவல்துறையினர் நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.
எனினும், இந்தத் தடை உத்தரவு தேவாலயப் பகுதிக்கு மாத்திரமே பொருந்தும் என்றும், முள்ளிவாய்க்காலில் ஏனைய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடையில்லை என்றும், சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.