மேலும்

நீர்மூழ்கிக்கு அனுமதி மறுப்பு– சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நழுவல்

geng-shuangசீன நீர்மூழ்கிக் கப்பல் சிறிலங்காவில் தரித்துச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் உரிய பதில் அளிக்காமல் நழுவியுள்ளார்.

சீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மே 14, 15ஆம் நாள்களில் கொழும்பு துறைமுகத்தில் தரித்துச் செல்வதற்கு சீனா அனுமதி கோரியதாகவும் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் பீஜிங்கில் நேற்று நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங்கிடம் இதுதொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.

அடுத்தவாரம் கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி தரித்துச் செய்வதற்கு அனுமதி மறுத்திருப்பதாக சிறிலங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீனா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதா என்று முதலில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், இந்த செய்தியை இப்போது தான் பார்த்தேன். இதுதொடர்பாக விரிவான தகவல்களை தேசிய பாதுகாப்பு அமைச்சிடம் கேட்க முடியும். சீனாவும் சிறிலங்காவும் பாரம்பரியமான நட்புறவைக் கொண்டுள்ளன. நாம் அரசியல், வர்த்தக, கலாசார, இராணுவ ஒத்துழைப்பை பேணி வருகிறோம், என்று பதிலளித்தார்.

இதையடுத்து. இந்த மாதத்தில் சீன நீர்மூழ்கியின் பயணம் இடம்பெறாது என்று அறிக்கைகள் கூறுகின்றன. எதிர்காலத்தில்,  சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கடற்படை சிறிலங்காவின் துறைமுகங்களுக்குச் செல்வது தொடர்பாக சிறிலங்கா தரப்புடன் பேசுவதில் சீனா இன்னமும் ஆர்வத்துடன் உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், இந்தக் கேள்வி தொடர்பான மேலதிக தகவல்களை தேசிய பாதுகாப்பு அமைச்சிடம் எழுப்புமாறு உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். சிறிலங்காவும் சீனாவும் நட்புறவைப் பேணுகின்றன என்பதை இப்போது கூறுகிறேன்.” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *