மேலும்

சுன்னாகம் படுகொலை – 6 சிறிலங்கா காவல்துறையினருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

gavelசுன்னாகம் காவல் நிலையத்தில் சந்தேக நபரான இளைஞன் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில், காவல்நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 சிறிலங்கா காவல்துறையினருக்கு தலா 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 25ஆம் நாள் மேற்படி கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. சந்தேக நபர் என்று கைது செய்யப்பட்ட சிறீஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞன் சிறிலங்கா காவல்துறையினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட பின்னர் இரணைமடுக் குளத்தில் சடலம் வீசப்பட்டது.

சான்றுப்பொருட்களை மீட்கச் சென்றபோது, சந்தேக நபர் தப்பிச் சென்றதாகவும், பின்னர் அவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அப்போது காவல்துறை கூறியிருந்தது.

எனினும், வழக்கு விசாரணையின் போது, மரணமான இளைஞனுடன் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில், இந்தக் கொலை தொடர்பாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் சுன்னாகம் காவல்நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த சிந்தக பண்டார உள்ளிட்ட காவல்துறையினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியினால் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிந்தக பண்டார உள்ளிட்ட 6 சிறிலங்கா காவல்துறையினரும் குற்றவாளிகள் என்றும் அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் மற்றும் தலா 2 இலட்சம் ரூபா நட்டஈடும் செலுத்த வேண்டும் என்றும்  நீதிபதி தீர்ப்பளித்தார்.

தண்டப்பணத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையையும், நட்டஈட்டை செலுத்தத் தவறினால்  ஒரு ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனையையும் அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்றாவது மற்றும் 8ஆவது எதிரிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *