மேலும்

சிறிலங்காவில் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளில் இந்தியாவுக்கு உள்ள கடப்பாடுகள் – ‘தி ஹிந்து’

the_hinduகடந்த வாரம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு தனது மூன்றாவது பயணத்தை மேற்கொண்ட போது, புதுடில்லியில்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்தச் சந்திப்பானது ஜனவரி 2015ல் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்பானது மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றது என்பதற்கான சான்றாக அமைகின்றது. இவ்விரு நாடுகளின் தலைவர்களும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஊடாக பொருளாதார மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாகவும், சிறப்பு பொருளாதார வலயங்களுக்கு சக்தி மற்றும் கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நீண்ட கால ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

அதிகாரம் மிக்க அதிபரான மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியுற்ற பின்னர், சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் கோட்பாடானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்புக் கரிசனைகளை மையப்படுத்தியதாகவும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அக்கறை காண்பிக்காத நிலையும் காணப்படுவதானது உண்மையில் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல.

இந்த அடிப்படையில், இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளுக்கும் பரஸ்பர சமரசங்களை எட்டுவதற்கு முக்கிய பங்காற்றக் கூடிய சிறப்புத் திட்டங்கள் தொடர்பாக இரு நாடுகளின் பிரதமர்களும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர். சிறிலங்காவின் வரலாற்றில் ஒருபோதுமில்லாதவாறு தற்போது அதிகரித்துள்ள சீனாவின் பிரசன்னத்தை முறியடிப்பதற்காக இந்தியாவானது சிறிலங்காவில் தனது திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என்பதை உணர்ந்துள்ளது.

இந்த வகையில், இந்தியா தற்போது திருகோணமலை மீது தனது கவனத்தைக் குவித்துள்ளது. சிறிலங்காவின் கிழக்கு மாகணத்தில் அமைந்துள்ள திருகோணமலையில் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது உருவாக்கப்பட்ட பெற்றோலிய சேமிப்பு மையத்தை மீண்டும் புதுப்பிப்பதுடன் இந்த இடத்தைச் சூழவும் கட்டுமான வசதிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் இந்தியாவும் சிறிலங்காவும் உடன்பட்டன.

இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான விரிவாக்கப்படும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உறவுநிலையான வரவேற்கத்தக்கதாகும். அத்துடன் இது அயல் நாடுகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.  ஆனால் இவ்விரு நாடுகளும் இலங்கைத் தீவு மீதான பாரம்பரிய அரசியல் விவகாரங்களைப் புறந்தள்ளக் கூடாது.

தமிழ்,  முஸ்லீம் மக்கள் வாழும் இலங்கைத் தீவின் கிழக்கு மற்றும் வடக்குப் பிரதேசங்களில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இங்கு இன்னமும் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்பவில்லை. இந்நிலையில் இந்தியாவானது சிறிலங்காவுடன் இவ்வாறான அரசியல் விவகாரங்களைப் பேசுவதில் ஆர்வம் காண்பிக்காது இருக்கக்கூடாது.

சிறிலங்காவில் காணாமற் போன தமது உறவுகள் தொடர்பாகவும் தமது நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருப்பது தொடர்பாகவும்  பதிலளிக்க வேண்டும் எனக் கோரி பல நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனைத்துக் குடிமக்களுக்கும் அரசியல் உரிமைகள் வழங்கப்படுவது புதிய அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்படும் என அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வாக்குறுதி வழங்கிய போதிலும் இன்னமும் இது நிறைவேற்றப்படவில்லை.

சிறிலங்காவின் அரசியல் பிரச்சினையில் நீண்ட காலமாக சமரசவாளராச் செயற்படும் இந்தியா, தற்போது சிறிலங்காவில் தொடரும் அரசியல் சார் பிரச்சினைகள் தொடர்பாக நெருக்கமான கண்காணிப்புக்களை மேற்கொள்வதுடன் கவனத்திற் கொள்ளப்படாத பல்வேறு விடயங்களையும் கருத்திற் கொள்வதன் மூலம் புனிதமானதொரு உறவைக் கட்டியெழுப்புவதில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டும்.

சிறிலங்காவின் அபிவிருத்திக்காக 2.6 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதாக இந்தியா வாக்குறுதியளித்துள்ள அதேவேளையில், போரால் பாதிக்கப்பட்ட வடக்கின் பிரதான வாழ்வாதாரத் தொழில்களாகக் காணப்படும் விவசாயம் மற்றும் மீன்பிடி போன்றவற்றை மேம்படுத்துவதை முன்னுரிமைப்படுத்த வேண்டும்.

இவ்விரு நாடுகளின் மீனவர்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தும் பாக்குநீரிணை எல்லை விவகாரத்தைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிலங்கா கடல் எல்லைக்குள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பாக சிறிலங்கா வாழ் தமிழ் மீனவர்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைக்கு இந்தியாவின் மத்திய அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.

போரின் அழிவடைந்த மற்றும் செயலிழந்த பல்வேறு தொழிற்சாலைகளை மீளவும் இயங்க வைப்பதில் இந்தியா கவனத்தைச் செலுத்துவதுடன் இதற்காக முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும். சிறிலங்காவில் சீனாவின் பிரசன்னம் அதிகரிப்பது தொடர்பான புதுடில்லியின் கவலையை நியாயப்படுத்த முடிந்தாலும் கூட, சீனாவின் செயல்களின் ஊடாக சிறிலங்காவை மதிப்பீடு செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும்.

சிறிலங்காவானது தான் விரும்பும் எந்தவொரு நாட்டுடனும் தொடர்பைப் பேணுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளது. ஆகவே இந்தியாவானது சிறிலங்காவை  தனக்குச் சமமான பங்காளி நாடாகக் கருதி உறவைப் பேணும் போது இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது மேலும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பு உருவாகும்.

வழிமூலம்       –  தி ஹிந்து  (ஆசிரியர் தலையங்கம்)
மொழியாக்கம் – நித்தியபாரதி

ஒரு கருத்து “சிறிலங்காவில் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளில் இந்தியாவுக்கு உள்ள கடப்பாடுகள் – ‘தி ஹிந்து’”

  1. Arinesaratnam Gowrikanthan says:

    “ஐயோ பாவம்”, ‘த ஹிந்து’- சாத்தானுக்கு வேதமோதுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், கம்போடியாவின் பொல் பொர் இயக்கத்தையும் ஒரே தராசில்வைத்து ஆசியாவின் மோசமான பாசிஸ இயக்கம் என வகைப்படுத்திய சாத்தான் வேதமோதுகிறது எனவும் கொள்ளலாம். ஆனால், இவ்விடத்தில் சாத்தானுக்கு வேதமோதுகிறது என்பதே பொருந்தும். சிங்கள பேரகங்கார வாதத்திற்கு அரசியல் ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிவரும் இந்துத்துவ அரசுக்கு வேதமோதப்படுகிறது. என்னவென்று?– இலங்கையை பொருளாதார ரீதியில் உங்கள் வேட்டைக்காடாக ஆக்கிக் கொள்வதில் எந்தத்தவறுமில்லை. ஆனால், அங்குள்ள உங்களால் வஞ்சிக்கப்பட்ட தமிழ் ‘சகோதரர்களின்’ அவலக் குரலையும் செவிமடுங்கள். பாவம் அவர்களுக்கு ஏதாவது பிச்சைபோடத் தயங்காதீர்கள். புண்ணியம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *