மேலும்

8 இலங்கை மாலுமிகளுடன் எண்ணெய்க் கப்பல் கடத்தப்பட்டது

Aris 13சிறிலங்கா மாலுமிகளுடன் இந்தியப் பெருங்கடலில் பயணித்த எண்ணெய்க் கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களினால், கடத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் இலங்கை மாலுமிகள் எட்டுப் பேர் இருந்தனர் என்று சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.

டிஜிபோட்டி கடல் பகுதியில் நேற்று இந்த எண்ணெய்க் கப்பல் கடத்தப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்காவில் உள்ள மீட்டு ஒருங்கிணைப்பு நிலையத்துக்கு,  பிரெஞ்சு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் சமிந்த வலகுலுகே தெரிவித்தார்.

முன்னதாக இந்தக் கப்பல் சிறிலங்கா கொடியுடன் பயணித்துக் கொண்டிருந்தது என்று தகவல் வெளியான போதிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான இந்தக் கப்பல், கொமரோஸ் தீவு கொடியுடன் பயணித்துக் கொண்டிருந்தது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் .இந்தக் கப்பலில் எட்டு இலங்கையர்கள் இருந்தனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Aris 13

Aris 13 என்ற பெயருடைய இந்த எண்ணெய்க்கப்பல், இரண்டு அதிவேகப் படகுகளில் சென்ற கடற்கொள்ளையர்களால் டிஜிபோட்டிக்கும், சோமாலியாவுக்கும் இடையில் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டுக்குப் பின்னர், சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட முதல் வணிகக் கப்பல் இதுவாகும். இந்தக் கடத்தலில் எட்டு கொள்ளையர்கள் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய கடற்படையின் விமானம் ஒன்று, கப்பல்களின் பயணத்தை கண்காணித்துக் கொண்டிருந்த போது, என்ன நடந்தது என்பதை கண்டறிந்துள்ளது.

கடத்தப்பட்ட கப்பலில் இருந்து அபாய அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், பின்னர் அதன் வழிகாட்டல் பொறிமுறை செயலிழந்து விட்டது.  தற்போது இந்தக் கப்பல், சோமாலியாவின் கலூலாவில் உள்ள புன்ட்லான்ட்ஸ் ஆலூலா என்ற இடத்தில் நங்கூரமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *