மேலும்

ஜெனிவா உரையில் காலஅவகாசம் கோராத சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

Mangala-unhrc (1)ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் தருமாறு பகிரங்க கோரிக்கையை விடுக்கவில்லை.

2015 ஒக்ரோபரில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் கால அவகாசம் கோரும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்னர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று உரையாற்றும் போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர 18 தொடக்கம் 24 மாத கால அவகாசத்தை கோருவார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தனது உரையில், மேலதிக காலஅவகாசம் வழங்குமாறு கோரிக்கை எதையும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் முன்வைக்கவில்லை.

சிறிலங்கா அரசாங்கத்தினால் கடந்த 15 மாதங்களில் சிறிலங்கா அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், அடுத்து எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் சுருக்கமாக விபரித்திருந்தார்.

உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்கும் சட்ட வரைவு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சித்திரவதைகள் தொடர்வதான குற்றச்சாட்டுகளை தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், இந்தவிடயத்தில் அரசாங்கம் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

சித்திரவதைகளைத் தடுப்பது தொடர்பாக வெளிநாடுகளிடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

அத்துடன் நல்லிணக்க செயல்முறைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து, முன்னேற்றகரமான- ஒற்றுமையான சமூகத்தை உருவாக்கி சமூக பொருளாதார அபிவிருத்தியின் உச்சத்தை தொட முடியும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *