மேலும்

வடக்கு- கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது – ஜெய்சங்கர் கைவிரிப்பு

S.Jaishankarவடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், நேற்றுக்காலை பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

இந்தப் பேச்சுக்களில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வாக்குறுதியை, 1987ஆம் ஆண்டு இந்தியா வழங்கியது என்றும், அதனை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்றும்  சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படாது என்ற வாக்குறுதியையும் இந்தியா கொடுத்தது. இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 2006ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட போது இந்தியா அதற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை.  இந்த விவகாரத்தில் இந்தியா தெளிவான  அக்கறை இழந்து விட்டது என்று அவர் கூறியிருந்தார்.

அதற்கு இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், “1987ஆம் ஆண்டு இருந்த நிலைமை இப்போது மாறி விட்டது, கொழும்பில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது பல்வேறு வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனினும், ஏனைய எல்லா விவகாரங்கள் குறித்து பேசும் போதும், வடக்கு, கிழக்கு இணைப்பை பணயம் வைக்கக் கூடாது.

தமிழர்கள் இதனை உயிர்ப்புடன் வைத்திருந்தால் இந்தியா அதனை கருத்தில் கொள்ளாது, எனினும், சிறிலங்கா அரசுடனான பேச்சுக்களில் இதுபற்றி கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்” என்று பதிலளித்துள்ளார்.

அத்துடன், இந்திய – சிறிலங்கா உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாக நடைமுறைப்படுத்த முடியாது.

இந்த உடன்பாட்டை தடம்புரளச் செய்வதற்கு விடுதலைப்புலிகள் ராஜீவ்காந்தியை படுகொலை செய்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியும், இந்த உடன்பாட்டை கண்டித்தது.

இந்த உடன்பாட்டுக்கு எதிரானவரான மகிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு தெரிவு செய்யப்படுவதை விடுதலைப் புலிகளும் எதிர்பார்த்திருந்தனர். இவற்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *