மேலும்

அமெரிக்க உதவியுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டது எப்படி?

Adm. Jayanath Colombageநான்காவது கட்ட ஈழப்போரில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அமெரிக்காவின் உதவியுடன் எவ்வாறு சிறிலங்கா கடற்படையினால் மூழ்கடிக்கப்பட்டன என்ற தகவல்களை சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களை சிறிலங்கா கடற்படை அழிப்பதற்கு, ஆயுதக் கப்பல்கள் நடமாடும் இடத்தை அடையாளப்படுத்தும், முக்கியமான செய்மதிப் படங்களை அமெரிக்கா எவ்வாறு வழங்கி  உதவியது என்று சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே, அண்மையில் வெளியிட்டுள்ள Asymmetric Warfare At Sea: The Case of Sri Lanka என்ற நூலில்  குறிப்பிட்டுள்ளார்.

நான்காவது கட்ட ஈழப்போரில் சிறிலங்கா கடற்படை கடலில் வெற்றி பெறுவதற்கும், சிறிலங்கா இராணுவம் தரைப் போரில் வெற்றியைப் பெறுவதற்கும், சிறிலங்கா விமானப்படை சுட்டுவீழ்த்தப்படும் ஆபத்து பற்றிய அச்சமின்றி தரை இலக்குகளை தாக்குவதற்கும் இந்த ஆயுதக் கப்பல்களின் அழிப்பு உதவியாக அமைந்தது.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல  பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு, கலாநிதிப் படிப்புக்கான ஆய்வுக்காக அட்மிரல் கொலம்பகே சமர்ப்பித்திருந்த இந்த ஆய்வு,  அமெரிக்கா புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டது, போரை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்ச அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்தது, புலிகளின் தலைவர் பிரபாகரனையும், அவரது சகாக்களையும்  பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு கொண்டு செல்ல முயன்றது என்று, சிங்களத் தேசியவாதிகள் மத்தியில் பொதுவாக உள்ள கருத்தை, ஒழிப்பதற்கு உதவுகிறது.

“மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களின் அழிவு புலிகளின் ஆயுத மற்றும் வெடிபொருட்கள் வழங்கல் வலைப்பின்னல்களை முடக்க உதவியது. தரையில் போர் வலயத்தில் சுற்றிவளைப்பு ஆபத்தில் இருந்து புலிகள் தப்பிப் பிழைப்பதற்கு இந்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்கள் முக்கியமான பங்கை வகித்தன.

சிறிலங்காவில் சமச்சீரற்ற தரைப் போர் நடந்து கொண்டிருந்த போது,  விடுதலைப் புலிகள், ஆட்களையோ, துப்பாக்கிகளையோ பயன்படுத்தாமல்,  ஆட்டிலறிகள் மற்றும் மோட்டார்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, தாக்குதல்களை நடத்தி வந்தனர்.

மரபுவழி இராணுவங்கள் பொதுவாக தமது வெடிபொருட்களைப் பயன்படுத்துவதில் வழக்கமாக கடைப்பிடிக்கும் கட்டுப்பாட்டை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை.

“இராணுவத்தினர் ஒரு எறிகணையை வீசினால், நாம் 20 எறிகணைகளை வீசுவோம்  ஆட்டிலறி, மோட்டார்கள் மூலம் நாம் அதிகளவு எறிகணைகளை வீசுவோம்” என்று முன்னாள்  கடற்புலியான சீலன் என்பவர், கூறினார்.

விடுதலைப் புலிகளின் கடுமையான எறிகணைத் தாக்குதல்கள், சிறிலங்கா இராணுவத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியது.  ஆட்டிலறி மற்றும் மோட்டார்களினால் எமது தரப்புக்கு கடுமையான இழப்புகள் ஏற்பட்டன. இது 50 வீதத்துக்கும் அதிகம் என்று நான் நினைக்கிறேன் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

இதனால் விடுதலைப் புலிகளின் ஆயுத மற்றும் வெடிபொருள் வழங்கலை சிறிலங்கா கடற்படை துண்டிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக மாறியது.

விடுதலைப் புலிகள் தமது வெடிபொருட்களை அனைத்துலக  கடற்பரப்பில் பிரதான கப்பல் பாதைகளுக்கு அப்பால் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில், சேமித்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட போது, அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான  பூகோள போரை  பயன்படுத்தி, அமெரிக்கத் தூதுவர் மற்றும் அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகரிடம் உதவி கோரப்பட்டது.

இந்த மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை தாக்குவதற்கு, சிறிலங்கா கடற்படை கையாளும் உத்திகள் மற்றும் முறைகள் குறித்து பரிசீலித்த பின்னர், இலக்குகள் தொடர்பான தேவையான தகவல்களை வழங்க அவர்கள் இணங்கினார்கள்.

எனினும், எந்தவொரு அப்பாவி கப்பலையோ அல்லது சிவிலியன் கப்பலையோ நாம் தாக்கக் கூடாது, 100 வீதம் புலிப் போராளிகள் இருந்தால் மட்டுமே, அதனை தாக்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை அமெரிக்கத் தரப்பு கோரியது. மீண்டும் நடைமுறைகளை விளக்கிய பின்னர், அவர்கள் திருப்தியடைந்தனர். நாம் அவர்களுக்கு வழங்கிய பிரதேசத்தை மையப்படுத்தி செய்மதியை நிலைப்படுத்தினர்.

2007 செப்ரெம்பர் மாதம் ஒரு நாள், எமக்கு ஒரு புலனாய்வு அறிக்கை கிடைத்தது, அந்தப் பகுதியில்  சந்தேகத்துக்குரிய சில கப்பல்களை அமெரிக்கர்கள் கண்டறிந்துள்ளதாக அந்த அறிக்கை கூறியது.

ஆனால் அப்போது சிறிலங்கா கடற்படைக்கு ஒரு பெரும் சவால் எழுந்தது.  அந்தளவு தூரத்தை எவ்வாறு சென்றடைவது, தரித்து நிற்பது, மீண்டும்  தளம் திரும்புவது எவ்வாறு என்ற வினா எழுந்தது.

போதுமாளனவு எரிபொருள், உணவு, ஆயுதங்களை கப்பலில் ஏற்றிச் செல்ல வேண்டும். சிறிலங்கா கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் பயன்படுத்திய நிலையிலேயே வாங்கப்பட்டவை. அவை பழையவையாக இருந்ததால்,  நீண்டநாட்கள் பயணிப்பதால் சிக்கல்கள் வரலாம்.

கடற்கொந்தளிப்பினால், பழுதுகளும் ஏற்படலாம்.  விடுதலைப் புலிகளுக்கு தகவல் கசிந்து விடும் என்பதால்,  வெளிநாட்டுத் துறைமுகங்களில் எரிபொருள் மீள் நிரப்புவது குறித்து யோசிக்கப்படவேயில்லை.

கடல் அமைதியாக இருக்கும் போது ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் இறக்கப்பட்டு, தேவைப்படும் போது, விநியோகங்களை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டன.

பாரிய கலிபர் பீரங்கிகளோ,  கப்பல்களுக்கு எதிரான ஏவுகணைகளோ ஆழ்கடல் ரோந்துப் படகுகளில் இல்லாத நிலையில், அவற்றில் உள்ள ஆயுதங்களையே பயன்படுத்துவதென் முடிவு செய்யப்பட்டது. இவற்றுக்குத் துணையாக சிறப்பு படகு படையணியின் படகுகளை  ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களில் ஏற்றிச் செல்லவும் திட்டமிடப்பட்டது. விடுதலைப் புலிகளின் கப்பல்களை எடுத்து வர இந்தப் படகுகள் அனுப்பப்படவிருந்தன.

சண்டைக்கான இறப்பர் படகுகளில்  விடுதலைப் புலிகளின் கப்பல்களை நெருங்கிச் சென்று ஆர்பிஜி தாக்குதல் நடத்தி மூழ்கடிப்பதெனவும் திட்டமிடப்பட்டது.

2007 செப்ரெம்பர் 10ஆம் 11ஆம் நாள்களுக்கு இடையில், விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்கள் அழிக்கப்பட்டன. 2007 ஒக்ரோபர் 17ஆம் நாள், இன்னொரு கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

முன்னதாக, 2006இன் தொடக்கத்தில்  சிறிலங்காவின் தென்கிழக்கில் கல்முனைக்கு அப்பால்,  விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டிருந்தது. 2007ஆம் ஆண்டு தொடக்கத்தில் மற்றொரு கப்பல்  சிறிலங்காவின் தென்பகுதியில் தெய்வேந்திர முனைக்கு அப்பால் மூழ்கடிக்கப்பட்டது.

வெற்றிகளுடன் தளம் திரும்பிய கடற்படைக்கு, மேலும் கடலுக்குள் சென்று இது போன்ற  கப்பல்களை வேட்டையான வேண்டும் என்ற ஊக்கம் கிடைத்தது. 1500 கடல் மைல்களுக்கு, இந்தோனேசியா வரை  அவர்கள் சென்றிருந்தனர். ஆனால், இது போன்று துணிகரமாகச் செயற்படுவதற்கு பயனுள்ள புலனாய்வுத் தகவல் தேவைப்பட்டது. எனவே, 2007இல் அமெரிக்காவிடம் புலனாய்வுத் தகவல்கள் கோரப்பட்டன.

கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளரின் தகவல்களின் படி, அழிக்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில்,  புலிகள் பெருமளவிலான 152 மி.மீ, 130 மி.மீ, 122 மி.மீ ஆட்டிலறி குண்டுகளையும், 120 மி.மீ மோட்டார் குண்டுகளையும் ஏனைய வெடிபொருட்களையும் ஏற்றி வைத்திருந்தனர்.

2007 செப்ரெம்பரில் அழிக்கப்பட்ட MV Koshia கப்பலில், 29,000 ஆட்டிலறி குண்டுகள் இருந்தன. இலத்திரனியல் போர்முறை மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள், உயர்வலு வெளியிணைப்பு இயந்திரங்கள், நீரில் பயணிக்கும் ஸ்கூட்டர்கள், நீச்சல் பயன்பாட்டுக்கான வாகனங்கள், ரேடர்கள், புவிநிலைகாட்டிகள், ஏனைய போர்த் தளபாடங்களையும் விடுதலைப் புலிகள் இழந்தனர்.

MV Matsushima கப்பலில், டோபிடோக்கள், குண்டு துளைக்காத வாகனங்கள், இலகு ரக விமானம், மற்றும் தொன் கணக்கான வெடிபொருட்கள், ஆட்டிலறிக் குண்டுகள் என்பன ஏற்றப்பட்டிருந்தன.

மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களின் அழிப்பு அனைத்துலக அளவில் புயலை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், சிறிலங்கா கடற்படை புலிகளின் ஆயுதக்கப்பல்களையே அழித்தது,  சிவிலியன் கப்பல்களை தாக்கவில்லை என்று உலகம் அறிந்திருந்தது” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு கருத்து “அமெரிக்க உதவியுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டது எப்படி?”

  1. Gowrikanthan says:

    அமெரிக்காவின் உண்மை முகத்தை அறிந்து கொள்ள இத்தகவல் உதவுகிறது. இலன்ங்கையின் தேசிய இனச்சிக்கலில் இந்தியாவின் உண்மை முகம் அம்பலமானது போல் அமெரிக்கா இன்னமும் அம்பலமாகவில்லை என்பதில் உண்மையில்லை. இலங்கைத் தமிழர்கல் மத்தியில் அமெரிக்க சார்பு அணியினர் இன்னமும் பலமுடன் திகழ்வதுதான் அதற்கான காரணமாகும். இது யாழ்-தமிழ் மேட்டுக்குடியின் ஒரு மரபியல் நோயாகிவிட்டது. இந்நோய்க் கிருமிகல் தற்போது கிழக்குற்கும் பரவுகிறது.

Leave a Reply to Gowrikanthan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *