மேலும்

பிரான்ஸ் ‘புலம்பெயர் தமிழர் திருநாள் 2017’ – பண்பாட்டு அடையாள நிகழ்வு

paris-pongal (1)பிரான்ஸ் ‘சிலம்பு’அமைப்பின் ‘புலம்பெயர் தமிழர் திருநாள்’ஒருபண்பாட்டு விழாவிற்குரிய அடையாளப்படுத்தலுடன் (14-01-2017) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தைப்பொங்கலென்பது இயற்கையுடன் இணைந்த வாழ்வை நினைவுகூரும் கூட்டுநிகழ்வு, இயற்கைக்கு நன்றி செலுத்தும் பண்பாட்டின் வெளிப்பாடு.இதற்குள் மதம் இல்லை. வேறெந்தப் பாகுபாடுகளுக்குமுரிய கூறுகளும் இல்லை.

கடந்த 2007ம் ஆண்டிலிருந்து மக்களரங்கு நிகழ்வாக சிலம்பு அமைப்பினரால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தப் புத்தாண்டில் 11வது தடவையாக‘பாரிஸ்-20’பெருநகரசபை மண்டபத்தில் (Gambetta) இந்நிகழ்வு இடம்பெற்றது.

அன்றைய நாளின் நிகழ்வுகள் வெளியரங்கில் கூட்டுப்பொங்கலிடுதல், கண்காட்சி, நிகழ்வரங்கு, அரங்காற்றுகை என்ற தளங்களில் நிகழ்த்தப்பட்டிருந்தன. அதற்கு முந்தைய நாளில் ஆய்வரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மொழி, சமூகம், கலை, இலக்கியம், புலம்பெயர் வாழ்வியல் சார்ந்த அக்கறையின்பாற்பட்ட அறிவுசார் செயற்பாடாக பார்க்கக்கூடியது இந்த ஆய்வரங்க முன்னெடுப்பு.

அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி மையத்தில் பாரம்பரிய உணவு, பாரம்பரிய கலை மற்றும் பயன்பாட்டுப் பொருட்கள், சமூகம் சார்ந்த பிரக்ஞையை வெளிப்படுத்தும் ஓவியர் மருதுவின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இங்கு புலம்பெயர் சிறார்களது சிறுகரங்களைப் பற்றி‘அகரம் எழுதல்’நிகழ்வை மிகுந்த நெகிழ்வோடு ஓவியர் மருது அவர்களும் பேராசிரியர் மௌனகுரு அவர்களும் மேற்கொண்டதைக் காணக்கூடியதாகவிருந்தது.

பறைமுழங்க, பாடல்கள் ஒலிக்க, கும்மிகொட்டியபடிகொண்டாட்ட உணர்வுடன் மாநகர சபை வெளிவளாகத்தில் கூட்டுப்பொங்கலிடல் இடம்பெற்றது. பால் பொங்கிச் சரித்தவுடன் இன்னிய வாத்தியங்களான பறை, கொம்புமுழங்க, கரகாட்டம், காவடியாட்டத்துடன் மண்டபத்திற்குள் பொங்கல் பானை கொண்டு வரப்பட்ட நிகழ்வு உணர்வுபூர்வமானதாகவும் புதுமையானதாகவும் அமைந்தது.

paris-pongal (1)paris-pongal (2)paris-pongal (3)

தாயகத்திலிருந்து பேராசிரியர் மௌனகுரு, தமிழகத்திலிருந்து ஓவியர் மருது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றிருந்தனர். பிரித்தானியாவிலிருந்து சொல்லிசைக் கலைஞர் சுஜித்ஜி, இசையமைப்பாளர் சந்தோஸ் ஆகியோரும் சிறப்பு பங்கேற்பாளர்களாக வருகை தந்திருந்தனர்.

நோர்வேயிலிருந்து கலாசாதனா கலைக்கூட நடனக் கலைஞர்களும், கவிஞரும் நடனநெறியாளருமான கவிதா அவர்களும் பங்கேற்றிருந்தனர். சிலப்பதிகாரம், புறநானூறு, கனகிபுராணம் கவிதாவின் நெறியாள்கையில் நடனங்களாக வழங்கப்பட்டன. இலக்கியத்தை பரதக்கலையினூடு வெளிப்படுத்துவதன் மூலம் கவிதாதனித்துத் தெரிகிறார் என பேராசிரியர்  மௌனகுரு விதந்துரைத்தமை பதிவு செய்யத்தக்கது.

இந்நிகழ்விற்கு நானும் அழைக்கப்பட்டிருந்தமையும் நிகழ்வரங்கத்தினைத் தொகுத்தளித்தமையும் என்னளவில் மனநிறைவிற்குரிய அனுபவம்.

சுஜித்ஜி வரிகளில் சந்தோஸ் இசையமைப்பில் உருவான‘தமிழ் வெல்லும் –  பொங்கல் திருநாளுக்கான புதியபாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரான்ஸ் கலைஞர்களின் நாடகஆற்றுகை, கூத்து உட்பட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மொழிசார்ந்தும், பண்பாடு, தொன்மம் சார்ந்தும் தமிழ் அடையாள விழுமியங்களைப் பிரதிபலிக்கக்கூடிய பேசுபொருள்களையும், கலைத்துவ அழகியல் வெளிப்பாடுகளையும் கொண்ட கலைநிகழ்ச்சிகளைத் தரிசிக்க முடிந்தது.

‘நான் யார்’என்ற கேள்வியினை எழுப்பும் ஒரு சூழலில் தான், ‘நாங்கள் யாராக’ இருக்கலாம் எனும் உணர்வு கூட்டுநினைவாகப் பீறிட்டெழுகிறது, நாங்கள் யாரென்ற கேள்வி, எமதுஅடையாளம் என்ன, வரலாறு என்ன போன்ற தேடலுக்குரிய தூண்டுதலாக அமைகின்றது என்ற கருத்துத்துத் தொனிக்க தமிழர் திருநாளின் பண்பாட்டுப் பெறுமதி தொடர்பாக கவிஞர் கி.பி.அரவிந்தன் முன்னர் பதிவுசெய்த கூற்றொன்று நினைவில் வருகிறது. அந்தக் கூற்றினை மீட்டுப் பார்க்கும் போது புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்த இளையதலைமுறையினர் மத்தியில் தமிழர்களின் பண்பாட்டு அடையாள நாள் எதுவென்பது தொடர்பாக எழக்கூடிய கேள்விக்கான விடையாக இதனையே முன்னிறுத்த முடியும் என்ற முடிவுக்கும் வரமுடிகிறது.

paris-pongal (4)paris-pongal (5)paris-pongal (6)

பிரான்ஸ் தேசிய மற்றும் நகரசபை மட்டத்திலான அரசியல் பிரமுகர்களும் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர். தமிழரல்லாத வேறு சிலரும் பங்கேற்றிருந்தனர். புலம்பெயர் சூழலில் அந்நாடுகளைச் சேர்ந்தோருக்கு எமது பண்பாட்டு அடையாள நாள் பற்றி அறியச் செய்வது, அவர்களையும் பங்கேற்கச் செய்வது, அவர்களின் நிகழ்வுகளில் நாம் பங்கேற்பதும் தேவையானது. பல்லினப் பண்பாட்டு வாழ்வியல் பகிர்வு மற்றும் இணைவாக்கவாழ்வு என்ற அடிப்படைகளில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. புலம்பெயர் வாழ்வின் நீட்சியில் வாழ்வாதார இருப்பினை உறுதிசெய்ய இத்தோழமையும் புரிதலும் இன்றியமையாதது.

கோடுகளும் நிறங்களும் கொண்டு நவீன ஓவியத்திற்கு காத்திரமான பங்களிப்பினைச் செய்து வருபவர் ஓவியர் மருது. இதழியல், நூலியல், நிகழ்கலை மற்றும் திரைப்படத்துறைகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழின் தொன்மங்களையும், அடையாளங்களையும் அவரது ஓவியங்களில் தரிசிக்க முடியும். ஒரு பண்பாட்டு நிகழ்விற்குரிய வடிவத்துடனும் பெறுமதியுடனும் பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றமையை தனதுரையில் சிலாகித்துக் கூறினார்.

குறிப்பாக சுமார் 200 ஆண்டுகளின் முன்பு தமிழகத்தில் தமிழுடன் வாழ்ந்து மரித்த வெள்ளையின அதிகாரியான‘எலிசன்’பற்றிய விபரணத்தைக் கூறிச் சென்ற சிறாரின் வெளிப்படுத்தலின் நினைவலைகளுடனான பகிர்வாக இவரது உரை அமைந்தது.

தாயகத்தின் கல்வித்துறைக்கும் நாடக, அரங்கியல் துறைக்கும் பொக்கிசமெனக் கூறத்தக்கவகையிலான பங்களிப்புகளை வழங்கி வருபவர் பேராசிரியர் சி.மௌனகுரு. அனுபவத் தேர்ச்சிமிக்க நாடகவியலாளராக பாரம்பரிய கலைகளை நவீனப்படுத்தும் செயற்பாடுகளிலும் அரங்கியல் ஆய்வுகளிலும் அவரது நீண்ட பங்களிப்பு இருந்து வருகின்றது.

பேராசிரியர் மௌனகுரு அவர்கள், பண்பாடு பற்றிய கோட்பாட்டு ரீதியானதும், நடைமுறைசார்ந்த அம்சங்களை மிகஎளிமையான முறையில் தனதுரையில் விளக்கிக் கூறினார்.

பண்பாடு பற்றி அறியாமல், மரபுபற்றித் தெரியாமல் அவற்றைப் பற்றிப் பேசுபவர்கள் நம்மத்தியில் உள்ளனர். பழமை, தொன்மை என்பவற்றில் முற்போக்கான அம்சங்களும், பிற்போக்கான அம்சங்களும் உள்ளன. பகுத்தறிந்து முற்போக்கானவற்றை மட்டுமே பாரம்பரியமாக எடுத்துச் செல்ல வேண்டும். பண்பாடு என்பது ஒற்றைத்தன்மை கொண்டதல்ல. அதுபன்முகப்பட்டது. புறச் சூழல்களிலிருந்து உருவாகுவது, வாழ்நிலைக்கு ஏற்ப உருவாகுவது என்பதோடு காலம்தோறும் மாறிவருவது என்று விளக்கினார்.

paris-pongal (7)paris-pongal (8)paris-pongal (9)

அத்தோடு பண்பாடு என்பது தனித்துவமானது அல்ல. எல்லாவற்றிலிருந்தும் பொருத்தமானதை உள்வாங்கி இணைத்துக் கொண்டு உருவாகுவதுதான் பண்பாடு.  அது உணர்வுரீதியாக அல்ல. அறிவுரீதியாக அணுகப்பட வேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டார்.

புலம்பெயர் சூழலில் தலைமுறைகள் கடந்து தமிழ் நிலைக்குமோ என்ற கேள்விகள் இருப்பினும் கலைவாழுமென்பதற்குக் கட்டியம் கூறும் வகையில் கலைவெளிப்பாடுகளைக் காணமுடிகின்றது.

எனவே கலைக்கூடாக தமிழர்களின் பண்பாடு அழிவின்றி நிலைக்குமென்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் தம் பண்பாட்டைத் தக்கவைக்க நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தனது அவதானத்தையும் பதிவுசெய்தார்.

இன்றுநாடுகள் கடந்த வாழ்வினால் – மதங்களால் – சாதியங்களால் –  அரசியலால் எனப் பலவாகப் பிளவுண்டுள்ள தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணையக்கூடிய பொதுநாள் இந்த தைப்பொங்கல் நாள். இதற்குள் அறிவியல் இருக்கிறது. வாழ்வியல் இருக்கிறது. பண்பாடு இருக்கிறது. தத்துவம் இருக்கிறது. இயற்கை இருக்கிறது. அறிவுக்குப் புறம்பான நம்பிக்கைகள் எதுவும் இல்லை. எனவே இதனை பொதுவான தமிழ் அடையாளமாக வரித்துக்கொள்வதும், தலைமுறைகளுக்குக் கடத்திச் செல்வதும் இன்றியமையாதது

அதேவேளை இன்றைய தமிழர் வாழ்விற்குள்ளும் பிற்போக்குத் தனங்கள் கொஞ்சநஞ்சமல்ல. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், கலைகளின் பெயரால் எனஅடுக்கிச் செல்லலாம். ஆகவே இது பழம்பெருமை பேசி, உணர்ச்சிக் கூச்சலிடுவதற்கான நிகழ்வுமல்ல. புலம்பெயர் சூழலில் பல்லினக் கலாச்சார வாழ்வில் அவ்வாறான கூச்சல்கள் தனிமைப்படுத்தல்களுக்குள் தள்ளிவிடும்

இந்நிகழ்வு முற்றிலும் மாறுபட்டது. அறிவும் அறமும் மானிடவாழ்வியலின் அர்த்தமுள்ள பெறுமதிகளையும் முன்னிறுத்துகின்ற நிகழ்வு. இந்த அடையாளப்படுத்தல் சமய, சாதி அடையாளங்களைப் புறந்தள்ளி மொழியென்ற ஒரு அடையாளத்திற்குள் அதன் விழுமியங்களையும் பகுத்தறியப்பட்டஅதன் பண்பாட்டுக் கூறுகளையும், இலக்கியச் செழுமைகளையும், இயற்கையோடு இணைந்த வாழ்வியலையும் உயிர்ப்புமிக்க கலைகளையும் ஓரிடத்தில் தரிசிக்கச் செய்கின்ற நிகழ்வு.

மக்கள் குழுமங்கள் தமக்கான அடையாளங்களையும் பண்பாட்டினையும் அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன் நினைவுகூர்வதும் வழமை. வேர் தொடர்பான அறிதல், பிடிப்பு, தன்னையாரென்று அறிவதும் தனிமனிதனினது மட்டுமல்ல, சமூகத்தின் மேம்பாட்டுக்கும் சிந்தனைச் செழுமைக்கும் முக்கியமானது.

இந்நிகழ்வு -தமிழ்ப் பண்பாடு தொடர்பான அதீத புனிதப்படுத்தலுக்கானதும் அல்ல. வாழும் நாடுகளின் பண்பாட்டு வாழ்வியலை கறுப்புவெள்ளைப் பார்வைக்கு உட்படுத்தி அணுகுவதற்கானதும் அல்ல. இளையதலைமுறையினர் சிந்தனைத் தெளிவும் அணுகுமுறைத்  தெளிவும் செயலூக்கமும் கொண்டவர்களாக இருக்கின்றனர் – புலம்பெயர் வாழ்வும் அந்த வாழ்வின் அனுபவ நீட்சியும் கறுப்புவெள்ளை அல்ல- அவர்களுக்குள் தமிழ்ப் பண்பாட்டு, மொழி அடையாளம் சார்ந்த முற்போக்கான, ஆரோக்கியமான, அறிவுசார் விதைகளைத் தூவிவிடுதல் போதுமானது. அந்த விதைகள் காலநீட்சியில் நல்லவிளைவுகளைத் தரும்.

எதிர்வரும் காலங்களில் தமிழர் கால் பதித்திருக்கும் அனைத்திடங்களிலும் இப்பொங்கல் நாள் பெரும் ஒன்றுகூடல் நிகழ்வாக பரிணமிக்க வேண்டுமென்பது சிலம்பு அமைப்பினரின், பெருவிருப்பமாகும். அதுநிகழும். பலநாடுகளுக்கு உந்துதலாக இந்த தமிழ் அடையாள, பண்பாட்டுச் செயல் முன்னெடுப்பு திகழ்கின்றது. இதனை ஒரு பொதுப் பண்பாட்டு நாளாக வடிவமைத்துச் சிறப்பாக நடாத்துகின்ற சிலம்பு அமைப்பினரின் உழைப்பும் நோக்கமும் காத்திரமானது.

பொங்கலிட்டு உண்டு மகிழ்ந்திருக்கும் தருணமாகவும் அத்தோடு நிகழ்வரங்கம் – அரங்காற்றுகை என மொழி, பண்பாடு, கலைசார்ந்த அடையாளங்களை முன்னிறுத்துகின்றதும் மிளிரச் செய்கின்றதுமான வகையில் ‘புலம்பெயர் தமிழர் திருநாள்’வடிவமைக்கப்பட்டு நிகழ்த்தப்படுகின்றது. குடும்ப எல்லைகளைத் தாண்டி ஒரு சமூகமாக கூட்டுணர்வுடன் ஒன்றுகூடி முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வின் தொன்மமும் உள்ளடக்கமும் வடிவமும் சமூகப் பண்பாட்டுப் பெறுமதிமிக்கது.

– ரூபன் சிவராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *