மேலும்

சுவாமிநாதனை வைத்து இழுத்தடிக்க முயன்ற சிறிலங்கா அரசு – கடைசி நேரத்தில் மாறிய முடிவு

vavuniya hunger strike ruwanவவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை அனுப்பும் முடிவு கடைசி நேரத்திலேயே எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 14 பேர் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களின் உடல் நிலை மோசமடைந்து வந்த நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் கேள்விகளை எழுப்பினர்.

அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, வியாழக்கிழமை அமைச்சர் சுவாமிநாதன் சந்தித்துப் பேசுவார் என்று தெரிவித்திருந்தார்.

முதலில் அமைச்சர் சுவாமிநாதனை அனுப்பி, இந்தப் போராட்டத்தை முடித்து வைக்கவே அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

எனினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் உடல் நிலை மற்றும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுத்த அழுத்தங்களாலேயே, அமைச்சர் சுவாமிநாதனை அனுப்பும் முடிவு மாற்றப்பட்டு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன அனுப்பி வைக்கப்பட்டார்.

vavuniya hunger strike ruwan

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நேற்றுமுன்தினம் சிறிலங்கா அதிபருக்கு அனுப்பிய அவசர கடிதத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தில் இருப்போரின் உயிர்களை காப்பாற்றுமாறு கோரியிருந்தார்.

மூத்த அமைச்சரை அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சு நடத்துமாறும் அவர் கேட்டிருந்தார்.

அதுபோன்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் சிறிலங்கா அரசாங்கத்திடம் முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் சுவாமிநாதனை வவுனியாவுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, சிறிலங்கா அதிபரும் பிரதமரும் இந்த விடயத்தில் பொருத்தமான வேறொரு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்தே, சுவாமிநாதனை அனுப்பும் முடிவு மாற்றப்பட்டு, ருவான் விஜேவர்த்தன வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல் நிலை மோசமடைந்து வந்ததாலும், பரவலான போராட்டங்கள் இடம்பெறத் தொடங்கியதாலும், அவசர வாக்குறுதிகளை வழங்கி இந்தப் போராட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரியவருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *