மேலும்

கடும் நிபந்தனைகள், கண்காணிப்புடன் சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை

eu-flagகடுமையான நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்புடன், சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது.

சிறிலங்காவின் மோசமான மனித உரிமைகள் நிலையினால், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் 2010ஆம் ஆண்டில் ரத்துச் செய்திருந்தது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அனைத்துலக சமூகத்துடன் கடைப்பிடிக்கப்பட்ட முரண்நிலை மற்றும் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகளினால் இதனை மீளப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும், 2015இல் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஜிஎஸ்பி பிளஸ்சலுகையைப் பெறுவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.

இதன் அடிப்படையிலேயே, நிபந்தனைகள் மற்றும் கண்காணிப்புடன், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்க இணங்குவதாக ஐரோப்பிய ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் அண்மையில் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் மற்றும் ஆட்சிமுறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், மனித உரிமைகள், தொழிலாளர் பிரகடனங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நல்லாட்சி உள்ளிட்ட 27 விடயங்களை நடைமுறைப்படுத்தும் முக்கியமான நிபந்தனைக்கு சிறிலங்கா இணங்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

எனினும், இந்த சலுகையை மீள வழங்குவதனால், சிறிலங்கா 27 அனைத்துலக பிரகடனங்களை முற்றிலும் திருப்தியளிக்கும் வகையில் மதித்துச் செயற்படுகிறது என்று அர்த்தமில்லை என்றும் ஐரோப்பிய ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் செல்லும். இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் இருந்தால், இந்தக் காலப்பகுதியில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மீள வழங்கப்பட்டாலும், நிலையான அபிவிருத்தி, மனித உரிமைகள், நல்லாட்சி போன்ற விடயங்களில் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் ஐரோப்பிய ஆணையம் எச்சரித்துள்ளது.

சிறிலங்காவின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தையாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு, சிறிலங்காவின் மொத்த ஏற்றுமதிகளில் மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

2015இல், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் 4.7 பில்லியன் யூரோவுக்கு இருதரப்பு வர்த்தகம் இடம்பெற்றது. இதில் சிறிலங்காவில் இருந்து 2.6 பில்லியன் யூரோவுக்கு ஏற்றுமதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஆடை உற்பத்திகள், இறப்பர் உற்பத்திகள், இயந்திரங்கள் என்பன ஐரோப்பிய சந்தைக்கு சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தற்போது, ஆர்மேனியா, பொலிவியா, கேப் வேர்டே, கிர்கிஸ்தான், மொங்கோலியா, பாகிஸ்தான், பரகுவே, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *