மேலும்

கேள்விக்குள்ளாக்கிய சிறிலங்கா நீதித்துறையின் நம்பகத்தன்மை

N.Ravirajதமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டமையானது சிறிலங்காவின் நீதிச்சேவை மீதான நம்பகத்தை மீண்டும்  சந்தேகத்திற்கு  உள்ளாக்கியுள்ளது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டமையானது இந்த நாட்டின் நீதிச்சேவை மீதான நம்பகத்தை மீண்டும்  சந்தேகத்திற்கு  உள்ளாக்கியுள்ளது

குறிப்பாக, சிறிலங்கா இராணுவத்தினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படுகொலை வழக்குகள் தொடர்பில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சிங்கள ஜூரிகள் சபையின் தீர்ப்பைத் தொடர்ந்து, 2006ல் கொல்லப்பட்ட ரவிராஜ் படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கடற்படை அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியப் பிரச்சினை தொடர்பாக சிங்களவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், தமிழ்த் தேசியப் பிரச்சினையை சிங்கள மொழியில் வெளிப்படுத்துவதில் அயராது பணியாற்றினார். 10 நவம்பர் 2006 அன்று கொழும்பு வீதி ஒன்றில் ரவிராஜ் அவர்களும் அவரது பாதுகாவலர் ஒருவரும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

ரவிராஜ் படுகொலையில் சிறிலங்கா அரச புலனாய்வுப் பிரிவினரே தொடர்புபட்டிருந்தனர் என்பதற்கான சாட்சியத்தை சிறிலங்கா குற்ற புலனாய்வுத் திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் கண்டறிந்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த மனித உரிமைகள் சட்டவாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதற்கும் அப்பால் குற்றம் சாட்டப்படாத வேறு பலரும் இக்கொலையுடன் தொடர்புபட்டுள்ளனர் என அரச சட்டவாளரால் அறிவிக்கப்பட்டது.

raviraj-murder-suspects

விடுவிக்கப்பட்ட கடற்படை புலனாய்வாளர்கள்

‘ஒரு சில இளநிலை கடற்படை அதிகாரிகள் மட்டும் ரவிராஜைப் படுகொலை செய்யவில்லை. இவர்கள் வேறு யாரிடமிருந்தோ கட்டளைகளைப் பெற்றே இப்படுகொலையை மேற்கொண்டனர். ஆனால் இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இக்கொலைக்குப் பொறுப்பாளிகல் அல்லர்.

இப்படுகொலையானது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றது. இப்படுகொலைக்கு கட்டளை வழங்கியவர்கள் யார் என்பதைக் கண்டறிய நாம் தற்போதும் காத்திருக்கிறோம்’ என சுமந்திரன் தெரிவித்தார்.

ரவிராஜைப் படுகொலை செய்வதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவினால் கருணா குழுவிற்கு 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக அரச தரப்பில் சாட்சி வழங்கிய முன்னாள் காவற்துறை வீரர் ஒருவர் விசாரணையின் போது தெரிவித்திருந்தார் என சிறிலங்கா அரச ஊடகமான ‘டெய்லி நியூஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் சாட்சிகளால் வழங்கப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட முடியாது என்பதால் அவர்களை விடுவிக்குமாறு சிங்கள ஜூரி சபை தெரிவித்தது.

இப்படுகொலை வழக்குத் தொடர்பான சட்ட நடவடிக்கையானது முரண்பாடுகளைக் கொண்டுள்ளதாக சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இரண்டு வகையான சட்டங்கள் தொடர்புபட்டுள்ளன.

அதாவது சிறிலங்கா பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகிய இரு சட்டங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கடற்படை அதிகாரிகள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.

அதேவேளையில் இவர்களுக்கான பிணையானது சாதாரண சட்டத்தின் அடிப்படையில் ஜூரி சபையால் அனுமதிக்கப்பட்டதாகவும் ஜூரி சபையின் விசாரணைக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அனுமதிக்காத போதிலும் சாதாரண சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்பட்டதாகவும்சுமந்திரன் தெரிவித்தார்.

‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜூரி சபையானது தீர்ப்பை வழங்க முடியாது. இது சட்டத்திற்கு முரணானது’ என படுகொலை செய்யப்பட்ட ரவிராஜின் மனைவிக்காக வழக்காடிய சட்டவாளர் சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பானது நீதிச்சேவையில் தமிழ் மக்களுக்கான நீதி புறக்கணிப்படுகிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தும் ஒரு சாட்சியாக உள்ளதாக சிலர் நோக்குகின்றனர்.

‘இது போன்ற வழக்குகளில் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் என்கின்ற இன வேறுபாடானது பிரதான காரணியாக உள்ளது. தமிழர் ஒருவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டதன் மூலம் மட்டும் நீதி முறைமைக்குள் காணப்படும் பாரபட்சங்களை நீக்கமுடியாது’ என மூத்த ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான குசல் பெரேரா தெரிவித்தார்.

2015ல் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதம நீதியரசராக தமிழரான கனகசபாபதி சிறிபவான் நியமிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வழி மூலம்      – The Hindu
ஆங்கிலத்தில்  – Meera Srinivasan
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *