மேலும்

கப்பல்களை விடுவிக்குமாறு கடற்படைத் தளபதிக்கு உத்தரவிட்டது அரசாங்கமே – சிறிலங்கா பிரதமர்

ravindra-ranil-1அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல்களை விடுவிக்க சிறிலங்கா கடற்படைக்கு, அரசாங்கமே உத்தரவிட்டது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பணியாளர்களால், நான்கு நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வெளிநாட்டுக் கப்பல்களை, சிறிலங்கா கடற்படையினர் கடந்த சனிக்கிழமை தலையிட்டு விடுவித்தனர்.

இந்த நடவடிக்கையின் போது, ஊடகவியலாளர் ஒருவர் கடற்படைத் தளபதியினால் அச்சுறுத்தப்பட்டார். சில பணியாளர்கள் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமரைச் சந்தித்த கடற்படைத் தளபதி, அம்பாந்தோட்டைச் சம்பவம் தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார்.

ravindra-ranil-1

இதன் பின்னர் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தமது கப்பல்கள் ஆபத்தில் இருப்பதாகவும் அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இரு கப்பல் நிறுவனங்கள் என்னிடம் கேட்டுக் கொண்டன.

துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது எமது பொறுப்பு.

எனவே, இதுகுறித்து சிறிலங்கா அதிபருக்கும் பாதுகாப்புச் செயலருக்கும் தெரியப்படுத்தினேன். அதன் பின்னர், கடற்படைத் தளபதியை அனுப்பி கப்பல்களை விடுவிக்குமாறு கேட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

அனைத்துலக கடல்சார் போக்குவரத்துச் சட்டங்களின் படி கடற்படைத் தளபதியை அனுப்பி, கப்பல்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படைத் தளபதியால் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் ஊடகவியலாளர் அனுமதியின்றி எவ்வாறு  உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்தார் என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

துரிதமாகச் செயற்பட்டு கப்பல்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தச் சந்தர்ப்பத்தில் பாராட்டுத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *