அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பொருட்களை ஏற்றியிறக்கும் சிறிலங்கா கடற்படை
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பணியாளர்கள் ஒருவாரமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சிறிலங்கா கடற்படையினர், துறைமுகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, துறைமுகப் பணியாளர்கள் நேற்று 7 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தினால், அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கவோ, கப்பல்களில் பொருட்களை ஏற்றவோ முடியாத நிலை காணப்பட்டது.
இதனால், பாரிய கப்பல் நிறுவனங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தவிர்க்கப் போவதாக எச்சரித்திருந்தன.
இந்த நிலையில், நேற்று சிறிலங்கா கடற்படையினர் துறைமுகத்தில் கப்பல்களைப் கையாளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.
இதைடுத்து அம்பாந்தோட்டையில் தரித்து நின்ற ‘Glovis Phoenix’ என்ற வாகனங்களை ஏற்றும் கப்பலில், 1086 கார்கள் மற்றும் ஜீப்கள் கடற்படையினரால் ஏற்றப்பட்டன.
இந்த தென்கொரிய கப்பல் கடந்த 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்திருந்தது.
நேற்று துறைமுகத்துக்குள் கொண்டு வரப்பட்ட இந்தக் கப்பலில் வாகனங்கள் ஏற்றும் பணி இன்று முடிவுக்கு வந்ததும், தென்னாபிரிக்காவின் டர்பன் துறைமுகத்துக்கு புறப்பட்டுச் செல்லும்.
அத்துடன், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களால் சேதமாக்கப்பட்ட மின்பிறப்பாக்கிகள், மின் விநியோக கட்டமைப்பு, மற்றும் இயந்திரங்களையும் சிறிலங்கா கடற்படையினர் திருத்தியமைத்துள்ளனர்.
ஏற்கனவே பணியாளர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கப்பலையும் கடற்படையிரே விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.