மேலும்

மாரடைப்பு ஏற்பட்ட ஜெயலலிதாவுக்கு இன்று அதிகாலை சிறு அறுவைச்சிகிச்சை

jayalalithaaதமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்றுமாலை ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து, அவருக்கு இன்று அதிகாலை சிறு அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்ரெம்பர் 22ஆம் நாள், உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, கடந்த 72 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஜெயலலிதாவின் உடல் நிலை சீரடைந்து வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்ட நிலையில், நேற்றுமாலை 5 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அதிதீவிர சிகிச்சைப்பிரிவுக்கு ஜெயலலிதா மாற்றப்பட்டு,சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு ஏற்கனவே மருத்துவ சிகிச்சை அளித்த பிரித்தானிய மருத்துவரின் ஆலோசனையும் பெறப்பட்டது.

நேற்றிரவு தொடக்கம் ஜெயலலிதாவின் உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் சிறு அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதயத்தில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கி, இரத்தஓட்டத்தை சீராக்கும் வகையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அடுத்த 24 மணிநேரம் அவரது உடல் நிலை தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் வெளியானதும், அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக தொண்டர்களும், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களும் கூடினர்.

appollo-1appollo-2

இரவிரவாக அவர்கள் அங்கேயே தங்கி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். இன்னமும், அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

அதேவேளை, தமிழ் நாடு ஆளுனர் வித்தியாசாகர்ராவ் நேற்றிரவு மும்பையில் இருந்து அவசரமாக சென்னை வந்து, அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து ஆராய்ந்தார்.

இதையடுத்து, இன்று காலை 7 மணிக்கு அனைத்து காவல்துறையினரையும் பணிக்குத் திரும்புமாறு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முதல்வரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு எங்கும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை, சமூக வலைத்தளங்களில் பெருமளவு வதந்திகள் பரவி வருகின்றன. இன்று தமிழ்நாட்டில் பாடசாலைகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதாக வதந்திகள் வெளியான போதும், அதனை ததமிழ் நாடு அரசு மறுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *