மேலும்

மன்னார் மீனவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்தும் பேராசிரியர் சூரியநாராயணின் முயற்சி தோல்வி

prof-v-suryanarayanபாக்கு நீரிணையில் இந்திய- சிறிலங்கா மீனவர்கள் கூட்டாக மீன்பிடிப்பது தொடர்பாக இந்தியப் பேராசிரியர் வி.சூரியநாராயண், முன்வைத்த யோசனையை மன்னார் மீனவர்கள் நிராகரித்துள்ளனர்.

சிறிலங்கா கடற்படை நடத்திய காலி கலந்துரையாடல் எனப்படும், கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, தெற்கு, மற்றும் தென்கிழக்காசிய கற்கைகள் நிலையத்தைச் சேர்ந்த முன்னணி பேராசிரியரான வி.சூரியநாராயண், கொழும்பு வந்திருந்தார்.

சிறிலங்கா கடற்படையின் ஏற்பாட்டில், தலைமன்னார் கடற்படைத் தளத்தில், மன்னார் பிரதேச மீனவர்களை அவர் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.

பள்ளிமுனை, தலைமன்னார், பேசாலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், 37 பேர் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அடிமடிவலைகளைப் பயன்படுத்தி, இழுவைப்படகுகளில் மீன்பிடிப்பதை கைவிட்டு, இரண்டு நாட்டு மீனவர்களும் பாரம்பரிய முறையில் பாக்கு நீரிணையில்  கூட்டாக மீன்பிடிப்பது குறித்து பேராசிரியர் சூரியநாராயண், மன்னார் மீனவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

இந்த யோசனையை மன்னார் மீனவர்கள் நிராகரித்திருப்பதுடன், இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்ட முறை குறித்தும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள மன்னார் மீனவர் கூட்டுறவுச்சங்க தலைவர் ஆலம், கடற்படையினர் இந்தக் கூட்டத்தை எதற்காக கடற்படைத் தளத்தில் நடத்தினர் என்று எமக்குத் தெரியவில்லை.

சிறிலங்கா கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதிப்பதில்லை என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.

மூன்று பத்தாண்டுகளாக நீடித்த போரினால், பொருளாதார தாக்கங்களில் இருந்து மீள்வதற்கு வடபகுதி மீனவர்கள் இன்னமும் போராடி வரும் நிலையில், இந்திய மீனவர்களை இனிமேலும் அனுமதிக்க முடியாது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *