மேலும்

வலுவடைகிறது இந்திய – ஆசிய – பசுபிக் கடல்சார் கூட்டு – அமெரிக்கத் தளபதி பெருமிதம்

galle_dialogue_2016-2இந்திய ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் தமது உறவினைப் பலப்படுத்தி வரும் நிலையில், இலங்கைத் தீவானது பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான குறிப்பிடத்தக்க பங்காளியாக வளர்ச்சியடைந்து வருவதாக காலியில் இடம்பெற்ற கடல்சார் பாதுகாப்புக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி பி. ஹரிஸ் தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டு காலத்தில் சிறிலங்காவிற்கு முதன் முதலாகப் பயணம் செய்த அமெரிக்காவின் நான்கு நட்சத்திர கடற்படைக் கட்டளைத் தளபதியான அட்மிரல் ஹரிஸ், காலியில் ஆரம்பிக்கப்பட்ட கடல்சார் பாதுகாப்பிற்கான கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

சிறிலங்கா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் ஆழமான இராணுவ உறவு கட்டியெழுப்பப்பட்டுள்ளதை எண்ணி மகிழ்வடைவதாகவும் அமெரிக்கக் கடற்படைக் கட்டளைத் தளபதி தெரிவித்தார்.

‘இந்த உறவுநிலை மேலும் செழுமைமிக்க பாதையில் சென்றடைவதற்கு நாங்கள் எமக்கிடையிலான பங்களிப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும். அதாவது சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட பூகோள செயற்பாட்டு முறைமையை மேலும் விரிவுபடுத்துதல் போன்ற விடயங்களை இவ்விரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த வேண்டும். இது அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் அஸ்டன் காற்றர் கூறியது போன்று ‘கோட்பாட்டு பாதுகாப்பு வலைப்பின்னல்’ ஒன்று உருவாக்கப்படுவதற்கும் வழிவகுக்கும்’ என அமெரிக்கக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரிஸ் குறிப்பிட்டார்.

சகல நாடுகளும் கடல் சார் வளங்களை மட்டுமல்லாது வான், விண்வெளி மற்றும் இணையம் போன்ற அனைத்து வளங்களையும் ஒரு முறைமையின் ஊடாக சமமாக அதிகாரம் செலுத்துவதற்கான வழி உருவாக்கப்படுவதே இந்த வலைப்பின்னலின் நோக்காகும் எனவும் கடந்த ஏழு பத்தாண்டுகளாக இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் இது கட்டியெழுப்பப்படுவதாகவும் இது மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் ஹரிஸ் குறிப்பிட்டார்.

‘இவ்வாறான பூகோள செயற்பாட்டு முறைமையானது அனைத்து நாடுகளும் பல்வேறு வளங்களையும் தமக்கான உரிமையுடனும் அதிகாரத்துடனும் பெற்றுக் கொள்வதற்கான உரிமையை வழங்குகின்றது’ என அட்மிரல் தெரிவித்தார்.

இந்திய சமுத்திரத்தின் மையமாக உள்ள சிறிலங்காவானது அமெரிக்க கடற்படையின் கடல்சார் மாதிரிகளைப் பின்பற்றி வருவதாகவும், சிறிலங்காவின் மரைன் படைக்குத் தெரிவாகிய புதிய வீரர்களுக்கு அமெரிக்கக் கடற்படையின் 11வது மரைன் படைப் பிரிவு பயிற்சி வழங்கியதாகவும் அட்மிரல் தெரிவித்தார்.

‘இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியம் என்பது இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா, வடகிழக்கு ஆசியா, ஒசேனியா, அமெரிக்கா போன்றவற்றை பொருளாதார ரீதியாக ஒன்றிணைக்கும் மாக்கடல்களாக இந்திய மற்றும் பசுபிக் மாக்கடல்கள் உள்ளமையைக் குறிக்கின்றது. முன்னர் பௌதீக மற்றும் உளவியல் ரீதியாக நாடுகளைப் பிரித்து வைத்திருந்த இந்த மாக்கடல்கள் தற்போது எல்லா நாடுகளையும் ஒன்றிணைப்பதில் சிறந்த கடல்சார் நெடுஞ்சாலைகளாக மாறியுள்ளன’ என அட்மிரல் ஹரிஸ் குறிப்பிட்டார்.

ஆனால் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு போன்றன காணப்படாத பிராந்தியமானது வெறுமையானதாகும் எனவும் சமாதானம் மற்றும் செழுமை இங்கு நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் இவற்றை பூகோள செயற்பாட்டு முறைமையின் ஊடாகவே உருவாக்கப்பட முடியும் எனவும் அட்மிரல் தனது உரையில் தெரிவித்தார்.

அதாவது மாக்கடல்களில் அனைத்து நாட்டு கடற்கலங்களும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், அனைத்து சிவில் மற்றும் இராணுவ விமானங்கள் சுதந்திரமாகப் பறப்பதற்கும், முரண்பாடுகளைக் களைவதற்கும் இவ்வாறான பூகோள செயற்பாட்டு முறைமை தேவைப்பாடானதாக உள்ளதாக ஹரிஸ் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானப் படைகளால் லெபனான், மாலி, மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் தென் சூடான் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கடலில் கப்பல்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு வழிவகுத்துள்ளன எனவும் குறிப்பாக 2011 தொடக்கம் சிறிலங்கா துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் முதன் முதலாக தரித்து நின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க ஒரு எடுத்துக்காட்டாகும் என அமெரிக்கத் தளபதி தெரிவித்தார்.

‘இதன் மூலம் சிறிலங்கா – அமெரிக்க இருதரப்பு இராணுவ உறவானது வலுப்படுத்தப்பட்டுள்ளது’ எனவும் அட்மிரல் குறிப்பிட்டார். அடிப்படை இராணுவ அறிவை வலுப்படுத்துவதற்கும், சிறிய படகு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இதன்மூலம் சிறிலங்கா கடற்படையினர் மனிதாபிமான உதவிகள் மற்றும் இயற்கை அழிவுகளுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான ஆற்றலையும் வழங்குவதற்கு அமெரிக்கக் கடற்படை சிறிலங்கா கடற்படை வீரர்களுக்குப் பயிற்சி வழங்கியுள்ளதாக ஹரிஸ் தெரிவித்தார்.

‘இவ்வாறான இராணுவ சார் பயிற்சிகள் சிறிலங்கா மற்றும் இப்பிராந்தியத்திற்காக அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளாகும். ஆகவே அமெரிக்கா மற்றும் சிறிலங்காவிற்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் இவ்விரு நாடுகளும் முக்கியமான பயனுள்ள வழிகளில் நலன்களைப் பெற முடியும்’ எனவும் அட்மிரல் குறிப்பிட்டார்.

சிறிலங்கா, அமெரிக்கா, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்திய மாக்கடலின் பாதுகாப்பில் உரிமை தீவிர கரிசனை கொண்டுள்ளன எனவும் இதன்மூலம் இம்மாக்கடலில் கடற்கொள்ளை, பயங்கரவாதம், சட்டவிரோதக் கடத்தல்கள் போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்கக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரிஸ் குறிப்பிட்டார்.

‘குறிப்பாக இப்பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் ஐ.எஸ் தீவிரவாதம் தொடர்பாக நான் கவலை கொள்கிறேன். இப்பிராந்தியத்தின் கப்பற் பாதைகளில் சுதந்திரமாக நடமாடுவதற்கும், மனிதாபிமான உதவிகள் மற்றும் இடர் நிவாரணங்களை வழங்குவதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்’ என அட்மிரல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *