குமார் குணரட்ணம் விடுதலை
முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான குமார் குணரட்ணம், இன்று அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை கட்சி உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் சிறைச்சாலைக்கு வெளியே வரவேற்று அழைத்துச் சென்றனர்.
ஜேவிபி கிளர்ச்சிக்குப் பின்னர் அவுஸ்ரேலியாவுக்குத் தப்பிச் சென்ற குமார் குணரட்ணம், அங்கிருந்து கடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடு திரும்பியிருந்தார்.
அவுஸ்ரேலிய குடியுரிமை பெற்ற அவர், நுழைவிசைவு காலாவதியான பின்னர், மறைந்து வாழ்ந்த நிலையில், கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் காவல்துறையினரால் கேகாலையில் கைது செய்யப்பட்டார்.
நுழைவிசைவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், குமார் குணரட்ணத்துக்கு கேகாலை நீதிமன்றம், ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருந்தது. இதையடுத்து அனுராதபுர சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இவரது ஒரு ஆண்டு சிறைத்தண்டனைக் காலம் இன்றுடன் முடிவடைகின்ற நிலையில், அனுராதபுர சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இவரை நாடு கடத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.
விடுதலையாகிய குமார் குணரட்ணம், தனது குடியுரிமை கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுமானால், அவுஸ்ரேலிய குடியுரிமையை கைவிடத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.