மேலும்

இந்தியாவின் முக்கிய வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் குறித்த சிவ்சங்கர் மேனனின் நூல்

shivshankar-menonசிறிலங்காவில் இடம்பெற்ற போர் உள்ளிட்ட ஐந்து முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் தொடர்பான உள்ளகத் தகவல்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை, இந்தியாவின் முன்னாள்  சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் வெளிவிவகாரச் செயலராக 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை பதவி வகித்த சிவ்சங்கர் மேனன், அந்தப் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், 2010 ஜனவரி தொடக்கம் 2014 மே மாதம் வரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியிருந்தார்.

இவர் இந்திய வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும் செயல்முறைகள் தொடர்பான உள்ளகத் தகவல்கள் அடங்கிய நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

“Choices: Inside the Making of Indias Foreign Policy”,( வாய்ப்புகள் – இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை உருவாக்கத்தின் உள்ளே) என்ற தலைப்பிலான இந்த நுல் நேற்று வெளியாகியுள்ளது.

எனினும், இந்த நூல் அதிகாரபூர்வமாக எதிர்வரும் டிசெம்பர் 2ஆம் நாள் புதுடெல்லியில் உள்ள இந்திய அனைத்துலக நிலையத்தில் வெளியிடப்படவுள்ளது.

choices-inside-the-making-of-india-s-foreign-policy-by-shivshankar

இந்த நூலில், தற்போது இந்தியாவில், அண்மைய வரலாற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஐந்து முக்கியமான தருணங்கள் தொடர்பான சிவ்சங்கர் மேனன் விபரித்துள்ளார்.

வெளிவிவகாரச் செயலராக இருந்த காலப்பகுதியில், தாம் நேரடியாகவோ, இணைந்தோ எடுத்த சில முக்கியமான இந்திய வெளிவிவகாரக் கொள்கை முடிவுகள் குறித்தும் அவர் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

2009இல் தோற்கடிக்கப்பட்ட, சிறிலங்காவின் உள்நாட்டுப் போர், இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன்பாடு, இந்திய- சீனா இடையிலான முதலாவது எல்லை தொடர்பான உடன்பாடு, மும்பையில் நடந்த 26/11 தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்துவதில்லை என்று இந்தியா எடுத்த முடிவு, அணுவாயுதங்களை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற இந்தியாவின் முடிவு ஆகிய ஐந்து பிரதான விடயங்கள் குறித்து இந்த நூலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் துறைசார் இராஜதந்திரியான சிவ்சங்கர் மேனன், இஸ்ரேல், சீனா பாகிஸ்தானுக்கான தூதுவராகவும் பணியாற்றியவர்.

இந்திய வெளிவிவகாரச் செயலராகப் பதவியேற்பதற்கு முன்னர் அவர், 1997 தொடக்கம், 2000ஆம் ஆண்டு வரை, சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *