மேலும்

ட்ரம்ப்பின் ஆட்சி சிறிலங்காவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

donald-trumpஒரு சில மாதங்களுக்கு முன்னர் இது ஒரு வேடிக்கையான விடயமாக நோக்கப்பட்டிருக்கலாம், ஆனால் தற்போது டொனால்ட் ட்ரம்ப் உலகின் அதிகாரம் மிக்க ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இவரது வெறுப்பு மிக்க, முரண்பாடான தேர்தல் பரப்புரையானது அமெரிக்காவில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வடுக்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். டொனால்ட் ரம்ப்பின் வெற்றிச் செய்தி உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அமெரிக்கா எதிர்காலத்தில் நம்பகமான ஆதரவாளராக இருக்கும் என்கின்ற நம்பிக்கை தற்போது உலகத் தலைவர்களின் மத்தியில் குறைந்து செல்கின்றது. திரு.ரம்பின் வெளியுறவுக் கோட்பாடானது புதுடில்லியில் குழப்பத்தைத் தோற்றுவித்துள்ளது. அதாவது இவரது வெளியுறவுக் கோட்பாடானது பனிப்புகார் போன்று தெளிவற்றதாகக் காணப்படுகிறது.

திரு.ரம்பின் வெளியுறவுக் கோட்பாடானது ருவிற்றர் மூலமும் ஊடகங்கள் மூலமும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. நேட்டோ அமைப்பின் கூட்டுப் பாதுகாப்புப் பொறுப்பைக் கைவிடப்போவதாகவும், தென்கொரியா மற்றும் யப்பான் போன்ற நாடுகள் கட்டணம் செலுத்தாவிட்டால் அங்கு நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவேன் எனவும் புதிய அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

பூகோள மேலாதிக்கம் என்பது அமைதி, நிலைத்தன்மை மற்றும் இயல்புநிலை போன்றவற்றை வழங்குவதைக் குறிக்கின்றது. எனினும், அனைத்துலக முறைமையின் கீழ் ஆட்சி மாற்றத்தை சீனாவில் மாற்றத்தை ஏற்படுத்துவதை விட சீனாவிற்கு தொழில்களை இடம்மாற்றுவது தொடர்பாக அதிக கவனம் செலுத்தும் திரு.ட்ரம்ப் காலத்திற்கு ஏற்ற கருத்தைத் தெரிவிக்கவில்லை என நோக்கலாம். எனினும், திரு.ட்ரம்ப்பைப் போன்ற கர்வம் மிக்க மனிதர் கூட  அமெரிக்க அரசியல் முறைமையின் கட்டமைப்பால் கட்டுப்படுத்தப்படுவார் என்பது சுட்டிக்காட்டத்தக்கதே.

ஏற்கனவே செயற்பட்டுக் கொண்டிருக்கும் கூட்டமைப்புக்கள் மற்றும் ஒப்பந்தக் கடமைகள் போன்றன ட்ரம்ப்பின் ஆட்சியில் இல்லாதொழிக்கப்படுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுமா என்கின்ற அச்சமும் நிலவுகிறது. இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அவை ஜெனரல்கள் மற்றும் இராணுவத் துறையால் எதிர்க்கப்படலாம்.

தென்கொரியா மற்றும் யப்பான் போன்றவற்றுடனான நம்பகமான நட்பை அமெரிக்கா தனது சொந்தப் பாதுகாப்பிற்காக முறித்துக்கொண்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

எதுஎவ்வாறெனினும்,சிறிலங்கா போன்ற நாடுகளுடனான ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் உறவானது மிகவும் வேறுபட்டதாகவே இருக்கும். அமெரிக்காவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையில் அண்மையில் நல்லதொரு உறவைக் கட்டியெழுப்பியதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவது, சிறிலங்கா மீதான இராஜதந்திர நலன்கள் மற்றும் வோசிங்டனுடன் இணங்கிச் செல்லக்கூடிய அரசாங்கம் தற்போது நாட்டில் ஆட்சிசெய்வது என்பதாகும்.

இரண்டாவது, சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் நகர்வில் சிறிலங்கா கேந்திர முக்கியத்துவம் மிக்கதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதாகும்.

அமெரிக்காவின் சிறிலங்கா மீதான எதிர்பார்ப்பானது முன்னாள் ராஜபக்ச அரசாங்கத்தின் சீனாவுடனான அதிகரித்த உறவாலும் சிறிலங்காவில் சீனா அதிக செல்வாக்குச் செலுத்தியதாலும் சீர்குலைந்தது. ஆனால் ராஜபக்சவைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமானது அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணுவதில் முக்கியத்துவம் காண்பித்தது.

தற்போது, முஸ்லீம்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடைவிதிப்பதுடன், சட்டரீதியற்ற வகையில் அமெரிக்காவில் குடியேறியுள்ள 11 மில்லியன் இலத்தினீயர்களை வெளியேற்றுவேன் எனவும் வாக்குறுதி வழங்கியுள்ள திரு.ட்ரம்ப் ஜனநாயக ஆட்சியை மேற்கொள்வார் என்றோ அல்லது போதியளவு உந்துதலை வழங்குவார் என்றோ எதிர்பார்க்க முடியாது.

சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவானது முன்னர் இருந்த அளவுக்கு உறுதிமிக்கதாக இருக்கமாட்டாது என்பது முதலாவது விடயமாகும்.

ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒப்பந்தக் கடப்பாடுகளில் திரு.ட்ரம்ப் கட்டுப்பாடுகளை இடலாம் என்பது இரண்டாவது விடயமாகும்.

குறிப்பாக பூகோள அரசியல் போன்று கூட்டு ஒப்பந்தங்களை விரிவாக்குவதில் திரு.ட்ரம்ப் ஈடுபாடு காட்டமாட்டார். இவ்வாறான பூகோள அரசியல் கூட்டு ஒப்பந்தங்களுக்குக் ஹிலாரி கிளின்டனே ஆதரவு வழங்கியிருந்தார்.

11 ஆசிய பசுபிக் நாடுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான Trans Pacific Partnership  என்கின்ற கூட்டு ஒப்பந்தத்தை இல்லாதொழிப்பேன் என திரு.ட்ரம்ப் ஏற்கனவே வாக்குறுதி வழங்கியுள்ளார். இது ஒரு பொருளாதார வளர்ச்சியை நோக்கிய ஒப்பந்தமாகும். திரு.ட்ரம்ப் அரசாங்கமானது தனது நிர்வாக முன்னுரிமைகளை மாற்றியமைத்தால் அமெரிக்காவைத் தனது பயனுள்ள நட்பு நாடாகத் தக்கவைத்துக் கொள்வதென்பது சிறிலங்காவிற்கு கடினமான பணியாகும்.

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினரை விட குடியரசுக் கட்சியுடனேயே அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் நல்லுறவைக் கட்டியெழுப்பியிருந்தது. 2000 இன் ஆரம்பத்தில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமானது அமெரிக்காவின் அப்போதைய  உதவி இராஜாங்கச் செயலர் றிச்சார்ட் ஆர்மிரேஜ்ஜுடன் நல்லுறவைப் பேணியது. இத்தனிப்பட்ட உறவானது புஷ் நிர்வாகத்துடன் சிறிலங்காவின் அப்போதைய அரசாங்கம் பயனுள்ள மூலோபாய உறவைக் கட்டியெழுப்ப உதவியது.

அமெரிக்காவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு சிறிலங்கா ஆதரவை வழங்கியிருந்தது. அமெரிக்கா தலைமையிலான கூட்டணிக்கு உதவும் முகமாக சிறிலங்காவிலிருந்து ஒரு பற்றாலியன் பொறியியலாளர்களை அனுப்புவதாக ஐ.தே.க அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. ஆனாலும் இது செயலுருப்பெறுவதற்கு முன்னரே அதிபர் குமாரதுங்கவின் சதி முயற்சியால் விக்கிரமசிங்க அரசாங்கம் ஆட்சிக்கவிழ்ப்பிற்கு முற்றுகையிட்டது.

எனினும், குடியரசுக் கட்சியின் நடைமுறைகளை திரு.ட்ரம்ப் பின்பற்றவில்லை. இந்த நடைமுறைகள் தனது பரப்புரையைக் குழிதோண்டிப் புதைப்பதாக திரு.ட்ரம்ப் குற்றம் சுமத்தியிருந்தார். பொப் டோல் தவிர குடியரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் எவரும் திரு.ட்ரம்பின் இந்தக் கருத்தை ஆதரிக்கவில்லை. இந்நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் ஐ.தே.க மற்றும் அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் பழைய உறவானது எவ்வாறு உதவும் என்பது தெளிவற்றதாகவே காணப்படுகிறது.

அமெரிக்காவின் பிரசன்னத்தைக் குறைப்பதென திரு.ட்ரம்ப் தீர்மானித்தால், சிறிலங்கா மட்டும் பாதிக்கப்படமாட்டாது.   ஒபாமா நிர்வாகத்தின் அண்மைய நட்பு நாடாக விளங்கும் இந்தியாவும் இதனால் பாதிக்கப்படும். இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான மூலோபாய நட்புறவானது எப்போது உச்சளவிலேயே காணப்படுகிறது. அத்துடன் இந்த உறவு தற்போது மேலும் நெருக்கமடைந்துள்ளது.

குறுகிய வெளிப்படையான இராணுவக் கூட்டணி தவிர அனைத்து மூலோபாயப் பங்காளி கூட்டுச் செயற்பாடுகளிலும் அமெரிக்காவும் இந்தியாவும் ஈடுபடுகிறது. இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதே இதற்கான காரணமாகும். இந்தப் பிராந்தியத்தில் சீனாவுடன் போட்டி போடக் கூடிய சமவலுவுடன் இந்தியா மட்டுமே உள்ளது.

புஷ் நிர்வாகத்தின் போது இந்தியாவுடன் அமெரிக்காவால் சிவில் அணுவாயுத ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும், இந்தியாவுடன் எவ்வளவு தூரம் மூலோபாய உறவை வளர்த்துக் கொள்ள திரு.ட்ரம்ப் ஆர்வம் காண்பிப்பார் என்பது தெளிவற்றதாகும்.

அமெரிக்காவின் கடல்சார் ஒத்துழைப்பு இந்தியாவிற்குக் கிடைக்காவிட்டால், பொருளாதார மற்றும் இராணுவத்துறைகளில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை எதிர்த்து நிற்கமுடியாத நிலை உருவாகும். சீனப் பொருளாதாரமானது இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தியின் ஐந்து மடங்காகும்.

இந்தியாவை அமெரிக்கா  கைவிட்டால் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கும். இந்தியாவின் அயலிலுள்ள சிறிலங்கா போன்ற சிறிய நாடுகள் அமெரிக்காவின் இத்தகைய நிலைப்பாட்டால் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் உறவைப் பேணவேண்டிய தெரிவுக்கு வழிவகுக்கும். பாதுகாப்பற்ற நிலையை எதிர்நோக்கும் இந்தியா, பனிப்போர்க் காலப்பகுதியில் செய்ததைப் போன்று தனது போட்டியாளர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஏமாற்றுத்தனமான செயல்களில் இறங்கும்.

இதனால் பொருளாதார செழுமைக்காக சீனா மற்றும் இந்தியாவுடன் உறவைப் பேணும் சிறிலங்காவின் உறவானது சிக்கலுக்குரியதாக மாறும். இவ்விரு நாடுகளுடனும் சிறிலங்கா தனது பொருளாதார செழுமைக்காக உறவைப்பேண வேண்டிய தேவையுள்ளது. சிறிலங்காவின் நலனுக்காக அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் ஒரு நிலைப்பாட்டைக் கைக்கொண்டாலும் அது சிறிலங்காவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

எனினும், அமெரிக்காவின் அரசியலானது கொள்கை ரீதியானது என்பதற்கப்பால் தனிப்பட்ட ஒருவர் சார்ந்ததாக மாறியுள்ளது. திரு.ட்ரம்ப் சிறிலங்காவுடனான உறவை முறித்துக் கொள்வதில் ஆத்ம திருப்தி அடைவாரானால், சிறிலங்காவும் அவருடனான தொடர்பை முறித்துக் கொள்ள முடியும். இருப்பினும் இவர் கொழும்பில் ட்ரம்ப் சூதாட்ட விடுதி ஒன்றைத் திறக்க விரும்பலாம்.

வழிமூலம்      – Daily mirror
ஆங்கிலத்தில் – Ranga Jayasuriya
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *