மேலும்

மகிந்தவின் அறிக்கை சட்டஆட்சி மீதான மோசமான தாக்குதல் – ஆசிய மனித உரிமை ஆணையம்

asian-human-rights-commissionகாணாமற்போனோர் செயலகம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கை சட்டஆட்சியின் மீது தொடுக்கப்பட்டுள்ள மோசமான தாக்குதல் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கவுள்ள காணாமற்போனோர் தொடர்பான செயலகம்,  சிறிலங்கா படையினரைப் பழிவாங்கும், அவர்களைக் காட்டிக் கொடுக்கும் செயல் என்றும், இந்த சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக ஆசிய மனித உரிமைகள் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

“அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மோசமான குற்றச்செயலான- பலவந்தமாக காணாமற்போகச்செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தக் கூடாது என்று மகிந்த ராஜபக்சவின் அறிக்கையில் நேரடியாகவே கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா படையினர் சிலர் இதில் தொடர்புபட்டிருக்கலாம் என்பதாலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் எவராக இருந்தாலும், குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்பது நாகரீக சமூகத்தின் அடிப்படை விதியாகும்.

குற்றச்செயல்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒரு அரசின் கடமையாகும். ஆனால் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இந்தக் கடப்பாடு நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

ஊடகவியலாளர்கள் படுகொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் தொடர்பாக எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

ஆயுதப்படைகளின் மீட்பர் என்று மகிந்த ராஜபக்ச தன்னை வெளிப்படுத்த முனைகிறார் என்பதை அவரது அறிக்கை காட்டுகிறது.

ஆனால் இந்த அறிக்கை பொதுமக்கள் மத்தியில் ஆயுதப்படைகளின் மதிப்பை மோசமாகப் பாதிக்கின்ற வகையில் அமைந்துள்ளது.” என்றும் ஆசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *