மேலும்

ஒபாமாவின் ஏமாற்றமளிக்கும் சிறிலங்கா பற்றிய கொள்கை

mangala-nisha-tomஐ.நா மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா எவ்வளவு தூரம் நிறைவேற்றியுள்ளது என்பது தொடர்பாக யூன் 29 அன்று இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரின் போது ஆராயப்பட்டது.

குறிப்பாக, பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்களை ஆற்றுவதற்கேற்ற வகையில் கடந்த ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்திற்கு சிறிலங்கா இணைஅனுசரணை வழங்கியிருந்தது.

நீண்டகாலமாக சிறிலங்காவில் அதிகாரத்துவ ஆட்சியை மேற்கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரி 2015ல் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் எதிர்பாராத வகையில் தோல்வியைத் தழுவினார். இதன் பின்னர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது விரிசலடைந்திருந்த மேற்குலக நாடுகளுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் நட்புறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. கடந்த 18 மாதங்களாக சிறிலங்காவில் சில சாதகமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இன்னமும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.

சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது நாட்டில் நிலவிய அதிகாரத்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் விரிவாக்கப்பட்ட நாட்டின் நிறைவேற்று அதிபருக்கான அதிகாரங்களை 19வது திருத்தச் சட்டமானது தற்போது குறைத்துள்ளது. கடந்த மாதம், தகவல் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறான விடயங்களை வைத்து நோக்கும் போது சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது முன்னைய அரசாங்கத்தை விட மிகவும் சிறந்ததாகும். மறுபுறத்தே, சிறிலங்கா அரசாங்கமானது பாரிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை தன்வசம் வைத்திருக்கும் அதேவேளையில், இந்த நிகழ்ச்சித் திட்டமானது எவ்வளவு தூரம் நிறைவேற்றப்படும் என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகிறது. உதாரணமாக, ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைவதற்கான முக்கிய காரணம் ஊழல் மோசடியாகும். எனினும் தற்போது ஊழல் மோசடிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

mangala-nisha-tom

அத்துடன் சிறிலங்கா அரசாங்கமானது நீதிச் செயற்பாடுகளை மாற்றியமைப்பதாக உறுதியளித்த போதிலும், இதுவரையிலும் இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் எந்தவொரு விளக்கங்களையும் வழங்கவில்லை. இதற்கும் அப்பால், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்னமும் இராணுவ மயமாக்கல், மனித உரிமை மீறல்கள், சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் போன்றன தொடர்ந்த வண்ணமேயுள்ளன. புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை கொழும்பு மேற்கொள்கின்ற போதிலும், இதில் தமிழ் மக்களின் அவாக்களைத் திருப்திப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இவ்வாறான செயற்பாடுகள், தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நீதி சார் மாற்றங்கள் ஒரு மேலோட்டமான மாற்றமே அன்றி இது ஒரு ஆழமான சீர்திருத்தம் அல்ல என்கின்ற கவலையைத் தோற்றுவித்துள்ளது.

சிறிலங்காவில் தற்போது எவ்வாறான முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன என்பது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசேன் இராஜதந்திர ரீதியான விளக்கத்தை வழங்கியுள்ளார். உயர் ஆணையாளரின் இந்த விளக்கமானது மிகப் பலமானதொரு விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கலாம். சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கோ, போர் மீறல்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கு ஏற்றதாகவோ அல்லது மனித உரிமைகள் மற்றும் நிறுவக மறுமலர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகவோ அமையவில்லை எனவும் இவ்வாறான விடயங்களை இன்னமும் சிறிலங்கா அரசாங்கம் அமுல்படுத்தவில்லை எனவும் உயர் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் கெய்த் கார்ப்பர் சிறிலங்கா தொடர்பாகப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: சிறிலங்காவில் எவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பாக அறிக்கை தருமாறு கடந்த செப்ரெம்பரில் உயர் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்தமைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். ஆனாலும் இன்னமும் சிறிலங்கா இதனை முற்றுமுழுதாக நிறைவேற்றவில்லை. இது தொடர்பான முழுமையான அறிக்கை அடுத்த மார்ச் மாதத்தில் கையளிக்கப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களையும் சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் எனவும் இது தொடர்பில் தொடர்ந்தும் உறுதியான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் நாங்கள் எமது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். இதன்மூலம் சிறிலங்கா தனது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு மீறல்களுக்கும் நம்பகமான நீதித் தீர்வையும், பொறுப்புக்கூறலையும், மீளிணிக்கப் பொறிமுறைகளையும் உருவாக்க வேண்டும்’

சிறிலங்கா தொடர்பாக இந்தக் கருத்தை மட்டுமே கார்ப்பர் கூறியிருந்தமை ஒரு கெட்டவாய்ப்பாகும். இவற்றின் கருத்தை விட, கனடா, கானா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் உட்பட பல உலக நாடுகள் சிறிலங்கா தொடர்பில் கடும் தொனியில் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

சிறிலங்கா மீது கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர அழுத்தத்திற்கு அமெரிக்காவே தலைமை தாங்கியது என்பதை எவரும் மறந்துவிட முடியாது. போர் மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா பதிலளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 2012 -2014 வரையான காலப்பகுதியில் அமெரிக்காவின் தலைமையில் சிறிலங்காவிற்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் தற்போது சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா எவ்வித அழுத்தமுமற்ற கருத்தை முன்வைத்துள்ளது.

இவ்வாண்டு மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக அமெரிக்கா இல்லாவிட்டாலும் கூட, அமெரிக்காவானது சிறிலங்கா தொடர்பான தனது கருத்துக்களை மேலும் உறுதியுடனும், அழுத்தத்தை வழங்கும் வகையிலும் முன்வைக்கும் போதே இது வரவேற்பைப் பெற்றுக் கொள்ளும்.

சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர யூன் 29 அன்று மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றியிருந்தார். இவர் வழமை போன்றே, இம்முறையும் தனது அரசாங்கம் இதுவரை முன்னெடுத்த விடயங்கள் தொடர்பாக சாதகமான கருத்துக்களை எடுத்துக்கூறியிருந்தார்.

யூன் 28 அன்று சிறிலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கொழும்பு வர்த்தக சம்மேளனத்தில் உரையாற்றியிருந்தார். தனது உரையின் போது சிறிலங்காவுடனான அமெரிக்காவின் இரு தரப்பு உறவுநிலை தொடர்பாக தூதுவர் புகழ்ந்துரைத்தார்.

அவரது உரையின் சிறு பகுதி வருமாறு: ‘அன்பிற்குரிய பெண்மணிகளே, ஆண்களே, சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவுநிலையானது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்கது என்பதைக் கூறிக்கொள்வது மிகவும் சந்தோசமாக உள்ளது. நாட்டில் அரசியல் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வேண்டியதன் தேவையை உணர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபையிடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாகவும் சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர் தமது அரசாங்கத்தைத் தலைமை தாங்கி நடத்துகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவானது சிறிலங்காவின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும், நல்லாட்சியை நிலைபெறச் செய்வதற்கும், அனைத்து சிறிலங்கர்களும் சம உரிமைகள், சம வாய்ப்புக்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கும், போருக்குப் பின்னான அபிவிருத்தி மற்றும் செழுமையின் முழுமையான நலன்களை இன வேறுபாடுகளின்றிப் பெற்றுக் கொள்வதற்கும் துணைநிற்கும்’ என கெசாப் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

சிறிலங்காவானது ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்குகொள்வதற்கு ஒரு நாளுக்கு முன்னரே கெசாப் இவ்வாறு உரைநிகழ்த்தியிருந்தார். இவரது இந்த உரையானது ஜனவரி 2015லிருந்து சிறிலங்காவில் ஏற்பட்டு வரும் முன்னேற்ற முயற்சிகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவால் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய சிறிலங்கா தொடர்பான மனித உரிமை மீறல்கள், பொறுப்புக்கூறல் போன்றவற்றில் தற்போது அமெரிக்காவானது போதியளவு அக்கறை காண்பிக்கவில்லை. கெசாப் இதுபோன்றே அமெரிக்காவின் சுதந்திர தினமான யூலை 04 அன்று விடுத்த அறிக்கையிலும் சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவுநிலை தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார்.

‘வர்த்தகம், உதவி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, முதலீடு போன்றன சிறிலங்கா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும். போருடன் தொடர்புபட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாகவும் நாம் ஆராயவுள்ளோம். சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது தனது நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்கான கால அவகாசத்தை நாம் வழங்க வேண்டும். ஆனால் சாதகமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஊழல் எதிர்ப்பு முதல் நிலையான நீதிப் பொறிமுறை வரையான அனைத்து சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டமும் இன்னமும் முழுமைப்படுத்தப்படவில்லை என நாம் வருத்தப்படத் தேவையில்லை எனக் கருதினாலும் இதில் பெரும்பாலானவை இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டும். இது தொடர்பாக ஒபாமா அரசாங்கத்திடம் முழுமையான ஆதரவைத் தருமாறு சிறிலங்கா கோரிக்கை விடுக்கும்’ என அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இந்த வாரம் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார். இவருடன் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் விவகாரத்திற்கான அமெரிக்காவின் உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கியும் வருகை தந்திருந்தார். இவ்விரு அமெரிக்க அதிகாரிகளின் சிறிலங்காவிற்கான வருகையானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஜனநாயக நல்லாட்சி மற்றும் மீளிணக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது’ என ஊடக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல், விரிவான நீதிப் பொறிமுறையை உருவாக்குதல் உட்பட போர் மீறல்கள் தொடர்பாக ஒபாமா அரசாங்கமானது வெளிப்படையாகவும் நேர்மையானதாகவும் செயற்படுவதற்கான தக்க தருணம் இதுவாகும்.

ஆகவே சிறிலங்கா அரசாங்கத்தைப் புகழ்ந்துரைப்பதற்குப் பதிலாக, சிறிலங்காவில் அதிகரித்து வரும் இராணுவ மயமாக்கல் தொடர்பாக அமெரிக்காவானது அழுத்தம் கொடுக்க வேண்டும். அத்துடன் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதையும் அமெரிக்கா தனது கவனத்திற் கொள்ள வேண்டும்.

ஆனால் சிறிலங்காவிற்கு வருகை தந்த அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகளான பிஸ்வால் மற்றும் மாலினோவ்ஸ்கி போன்றோர் சிறிலங்கா மீது போர் மீறல் குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிப்பதற்கான அழுத்தத்தை வழங்கவில்லை என்பது ஒரு கெட்டவாய்ப்பாகும்.

வழிமூலம்         – The wire
ஆங்கிலத்தில்   – TAYLOR DIBBERT
மொழியாக்கம்  – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *