மேலும்

போர்க்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே நீதி விசாரணை – மங்கள சமரவீர

mangala-samaraweeraபோர்க்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே, விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தச் செவ்வியில் அவர்,

“சிறிலங்கா போர்க்குற்ற தீர்ப்பாயங்களையோ, கலப்பு நீதிமன்றத்தையோ உருவாக்கவில்லை. இந்த இரண்டு சொற்பதங்களுமே தவறானவை. பிழையாக வழிநடத்தப்படுபவை.

இங்கு தீர்ப்பாயங்கள் எதுவும் கிடையாது. போர்க்குற்றச்சாட்டுகள் மாத்திரமே உள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று உறுதியானால், மாத்திரமே நம்பகமான விசாரணைக்கு பொறிமுறைகள் அமைக்கப்படும்.

கலப்பு நீதிமன்றங்களை ஐ.நாவே நியமிக்கும். கலப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இல்லை. சிறிலங்காவில் இத்தகைய வழக்கமும் இல்லை.

போர்க்குற்றச்சாட்டுகளை முன்னைய அரசாங்கத்தைப் போல நான் மறுக்கப் போவதில்லை. குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்றால், அப்போது அதனைக் கூறுவேன்.

போர்க்குற்றங்களுக்கு நம்பகமான சான்றுகள் இருந்தால், கீழ் நிலை அதிகாரிகளைத் தண்டிக்க முனையாமல், உயர்மட்ட இராணுவக் கட்டளை அமைப்பை சிறிலங்கா அரசாங்கம் அடையாளம் காணும். அவர்கள் மேலிட உத்தரவுகளைத் தான் செயற்படுத்தியிருப்பார்கள்.

எல்லாத் தரப்பினதும், அனைத்துலக சமூகத்தினமும் நம்பிக்கையைப் பெறத்தக்க ஒரு நம்பகமான செயல்முறையை கொண்டு வருவதே அரசாங்கத்தின் எண்ணமாகும்.

இந்த பொறிமுறையானது, எதிர்காலத்தில் இடைமாற்று நீதிப் பொறிமுறைகளுக்கு முன்மாதிரியாக அமையும்.

வடக்கில் இராணுவ முகாம்களை வைத்திருப்பதால் மாத்திரம், விடுதலைப் புலிகளின் மீள்எழுச்சியைத் தடுத்து விட முடியாது.

தமிழர்களின் மனங்களை வெற்றி கொள்வதன் மூலமே அது சாத்தியமாகும்” என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *