மேலும்

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள – தமிழ் மாணவர்களுக்கிடையில் மோதல்

jaffna-university-clash (1)யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில், வழக்கத்துக்கு மாறாக கண்டிய நடனத்தை உட்புகுத்த முனைந்ததால், தமிழ்- சிங்கள மாணவர்களிடையே மோதல்கள் ஏற்பட்டன.

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்குத் தெரிவான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தவில்- நாதஸ்வர இசையுடன் வரவேற்பு இடம்பெறுவதே வழக்கமாகும். அதனை மீறி கண்டிய நடனத்துடன் வரவேற்பை நடத்த விஞ்ஞான பீட மாணவர்கள் முற்பட்டனர். இதற்கு விஞ்ஞான பீடாதிபதியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

ஆனால் தமிழ் மாணவர்களும், மாணவர் அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், வழமை போன்று தவில்- நாதஸ்வர இசையுடன் மட்டுமே வரவேற்பு நடைபெறும் என்று விஞ்ஞான பீடாதிபதி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் தவில் – நாதஸ்வர இசையுடன் புகுமுக மாணவர்கள் நூலகப் பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட போது,  இடையில் கண்டிய நடனக் கலைஞர்களை சிங்கள மாணவர்கள் உட்புகுத்தி குழப்பம் விளைவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழ் மாணவர்கள் அதனைத் தட்டிக் கேட்க முயன்ற போது, தமிழ் – சிங்கள மாணவர்களிடையே மோதல்கள் ஏற்பட்டன.

jaffna-university-clash (1)jaffna-university-clash (2)jaffna-university-clash (4)

பொல்லுகள், இரும்புக் கம்பிகள் கொண்டு மாணவர்கள் தாக்கிக் கொண்டனர். மாணவர்களின் மிதிவண்டிகளும், உந்துருளிகளும் தாக்கப்பட்டதுடன், விஞ்ஞான பீட கட்டமும் சேதமாக்கப்பட்டது. இதனால் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.

உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் சிங்கள, தமிழ் மாணவர்களை தனித்தனியாகப் பிரித்து மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

அதேவேளை, இந்த மோதலில் 10இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். ஆறு பேர் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலை அடுத்து, விஞ்ஞான பீடம் மூடப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அறிவித்துள்ளார்.

அத்துடன் விடுதிகளில் உள்ள சிங்கள மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் பல்கலைக்கழக சூழலில் பதற்றநிலை காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *