மேலும்

சிறப்பு நீதிமன்றக் கட்டமைப்பை தீர்மானிக்க வேண்டியது சிறிலங்காவே – ரொம் மாலினோவ்ஸ்கி

Tom Malinowskiபோர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது, சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம்,  மனித உரிமைகள், மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா பிஸ்வாலுடன் இணைந்து சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவில் நேற்றிரவு கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதி்பதிகளை உள்ளடக்கும் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த ரொம் மாலினோவ்ஸ்கி,

“ஜெனிவா தீர்மானம் சிறிலங்காவின் இறைமையை முழுமையாக மதிக்கிறது. சிறப்பு நீதிமன்றத்தின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை தீர்மானிப்பது, சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுத்த விடயம்.

தமது இறைமைக்குட்பட்ட வரையறைக்குள் இருந்து கொண்டே, பல்வேறு மட்டங்களில் அனைத்துலக பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சிறிலங்கா வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறது.

சிறிலங்கா நீதிமன்றங்களின் மீதான அவநம்பிக்கைகளால் தான் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டது. மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது என்பதை இலக்காகக் கொண்டு தான், ஒட்டுமொத்த பொறுப்புக்கூறல் செயல்முறைகள் தொடர்பாகவும், இந்த வாக்குறுதி  புரிந்துணர்வு அடிப்படையில் கொடுக்கப்பட்டது.

நீதிமன்றங்களில் அனைத்துலக பங்களிப்பு  குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக இருக்கவில்லை.

ஏனைய நாடுகளுக்கு சிறிலங்கா தனது நீதித்துறை நிபுணத்துவப் பங்களிப்பை வழங்கியிருக்கிறது. ஒருவேளை சிறிலங்காவும் அதிலிருந்து பயன்பெறலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *