மேலும்

அடுத்த ஐ.நா பொதுச்செயலர் யார்?

un-logoஐக்கிய நாடுகள் சபையின் ஒன்பதாவது செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐ.நா சபையின் தற்போதைய செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவிக் காலம் 31 டிசம்பர் 2016 அன்று முடிவுறவுள்ள நிலையிலேயே அடுத்த செயலாளர் நாயகத் தெரிவிற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

புதிய செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்யும் போது பால்நிலைச் சமத்துவமும் தற்போது கவனத்திற் கொள்ளப்படுகிறது. இத்தெரிவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளாக உள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், சீனா மற்றும் ரஸ்யா போன்றன முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபைக்கான செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான அதிகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபையே கொண்டுள்ளது என ஐ.நா சாசனம் வலியுறுத்துகிறது. இதில் P5 உறுப்பினர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். அடுத்த செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதில் P5 உறுப்பு நாடுகள் மத்தியில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டால் இத்தெரிவானது மிகவும் இலகுவாக மேற்கொள்ளப்பட முடியும்.

இந்த இடத்தில் 1972-1981 வரை ஐ.நா சபையின் நான்காவது செயலாளர் நாயகமாகப் பதவி வகித்தவரும் 1986-1992 வரை ஒஸ்ரியாவின் ஒன்பதாவது அதிபராகவும் பதவி வகித்த கேற் வால்ஹெய்ம் தொடர்பான வழக்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். வல்டேய்ம் மூன்றாவது தடவையாகவும் ஐ.நா சபையின் செயலாளர் நாயகமாகப் பதவி வகிக்க முற்பட்ட போது அது சட்டத்திற்கு முரணானது என சீனா அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து பெரு நாட்டைச் சேர்ந்த ஜேவியர் பெரேஸ் டீ கியூலர் ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது செயலாளர் நாயகமாகப் பதவியேற்றார். எனினும், பான் கீ மூன் செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்ட போது சீனாவானது அதே நடைமுறையைப் பின்பற்றவில்லை. கொரியாவைச் சேர்ந்தவரும் அமெரிக்காவின் கூட்டாளியுமான பான் கீ மூன் தெரிவு செய்யப்பட்ட போது சீனா அதனை எதிர்க்கவில்லை.

இக்காலப்பகுதியில் சிறிலங்காவுடனும் சிறிலங்காவின் இந்தியா மீதான எதிர்ப்புக் கொள்கையுடனும் சீனா தொடர்பைப் பேணிய போதிலும் பான் கீ மூன், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாகப் பதவி வகிப்பதற்கு சீனா தனது எதிர்ப்பைக் காண்பிக்கவில்லை.

எதுஎவ்வாறிருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த செயலாளர் நாயகம் யார் என்பதற்கான எவ்வித தெளிவான உடன்பாடுகளும் இன்னமும் எட்டப்படவில்லை.

பெண் வேட்பாளர்கள்:

ஆர்ஜென்ரினாவைச் சேர்ந்த சுசானா மல்கொராவை அடுத்த செயலாளர் நாயகமாக நியமிப்பதில் அமெரிக்கா அதிக ஆர்வங் காண்பிக்கின்றது. மல்கொரா 2008-2012 வரையான காலப்பகுதியில் ஐ.நா சபையின் களச் செயற்பாடுகளுக்கான கீழ்நிலைச் செயலராகப் பணியாற்றினார். அத்துடன் இவர் 2012-2015 வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் செயலகத்தின் நிறைவேற்று அலுவலகத்தின் தலைமை அதிகாரியாகவும் பதவி வகித்ததுடன் தற்போது ஆர்ஜென்ரினாவின் வெளிவிவகார அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்இலத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் அமைப்பின் உறுப்பினராக உள்ள மன்கொராவை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகப் பதவிக்கான வேட்பாளராக மே 23,1026 அன்று ஆர்ஜென்ரினா தெரிவு செய்தது.

இவரைப் போன்றே பல்கெரிய நாட்டைச் சேர்ந்த இரினா பொகோவாவும் தற்போது இப்பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் பல்கெரியா நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் தற்போது யுனெஸ்கோ நிறுவனத்தின் இயக்குனராகவும் பதவி வகிக்கின்றார். இவர் 11 பெப்ரவரி 2016 அன்று கிழக்கு ஐரோப்பியக் குழுவால் ஐ.நா செயலாளர் நாயகப் பதவிக்கான வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் இப்பதவியை வகிப்பதற்கு ரஸ்யாவும் தனது ஆதரவை வழங்கியுள்ளது.

இதேபோன்று நியுசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் (1999 – 2008) செயலாளர் நாயகம் பதவிக்கான வேட்பாளராக நியுசிலாந்து நாட்டினால் ஏப்ரல் 05, 2016 அன்று பரிந்துரைக்கப்பட்டார். இவர் 2009 தொடக்கம் தற்போது வரை ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் அதிகாரியாகவும் மேற்கு ஐரோப்பா மற்றும் ஏனைய குழுவின் உறுப்பினராகவும் பதவி வகிக்கின்றார்.

அடுத்த ஐ.நா செயலாளர் நாயகத்தைத் தெரிவு செய்வதற்கான போட்டிக்காகக் களமிறங்கியுள்ள பெண் வேட்பாளர்களில் குறோசியாவின் வெளிவிவகார மற்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர் வெஸ்னா புசிக்கும் உள்ளடங்குகிறார். இவர் கிழக்கு ஐரோப்பியக் குழுவால் 14 ஜனவரி 2016 அன்று வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டார்.

ஆண் வேட்பாளர்கள்:

அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பதவிக்காகக் களத்தில் இறங்கியுள்ள ஆண் வேட்பாளர்களில் போத்துக்கல்லின் முன்னாள் பிரதமரும் (1995-2002) 2002-2015 வரை அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையாளராகவும் பதவி வகித்த அன்ரோனியா கெற்றெறஸ் மற்றும் சுலோவேனியாவின் முன்னாள் அதிபரும் (2007 -2012) 1991-2000 வரை சுலோவேனியாவின் ஐ.நாவிற்கான தூதராக கடமையாற்றியவரும் 2000-2005 வரை அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலராக இருந்தவருமான டனிலோ ரேக் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இவர்களை விட மேலும் இரண்டு ஆண் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மோல்டோவாவின் வெளிவிவகார மற்றும் ஐரோப்பிய ஒத்துழைப்பிற்கான அமைச்சர் (2013-2016) நற்றாலியா ஜேர்மன் மற்றும் மொன்ரநீக்ரோவின் முன்னாள் பிரதமர் (2010-2012) இகோர் லுக்சிக் ஆகியோரும் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த வேட்பாளர்களில் அடுத்த செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்படவுள்ளார் யார் என்பது இன்னமும் தெளிவாகவில்லை. ஒக்ரோபரில் ஐ.நா பாதுகாப்புச் சபையைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் ஒன்றுகூடும் போது முன்வைக்கப்படலாம் என எதிர்வுகூறப்படுகிறது. இச்சந்திப்பின் போது தற்போது வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டவர்களில் யார்யாரெல்லாம் தொடர்ந்தும் வேட்பாளராக நிற்கலாம் அல்லது அதிலிருந்து பின்வாங்கலாம் என்பது முடிவெடுக்கப்படும்.

 கிழக்கு ஐரோப்பியக் குழுவிலிருந்து அடுத்த செயலாளர் நாயகப் பதவிக்காகப் போட்டியிடப் போவது யார்?

கிழக்கு ஐரோப்பியக் குழுவிலிருந்தே அடுத்த செயலாளர் நாயகம் தெரிவு செய்யப்படுவர் என்கின்ற கருத்தும் நிலவுகிறது.  எனினும் ரஸ்யாவிற்கும் மேற்குலக நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் இடையில் உக்ரேய்னில் இடம்பெற்று வரும் முறுகல்நிலையானது கிழக்கு ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் அடுத்த செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்படுவதற்கான சாத்தியத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அதாவது மேற்குலக ஐரோப்பாவின் உறுப்பினரல்லாத நாட்டைச் சேர்ந்த மற்றும் இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த வேட்பாளர்களில் ஒருவரே அடுத்த செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்கின்ற கருத்தும் நிலவுகின்றது.

செயலாளர் நாயகப் பதவிக்கு ஆட்களைத் தெரிவு செய்வது தொடர்பாக வெளிப்படையான முறையில் பாதுகாப்பு சபை மற்றும் பொதுச் சபை போன்றன நகர்வுகளை முன்னெடுத்து தமது உறுப்பு நாடுகளுக்கு கடிதங்களை அனுப்பின. அத்துடன் வேட்பாளர்களின் பெயர்களையும் வழங்குமாறும் குறிப்பிடப்பட்டது. நடைமுறையில், முன்னைய செயலாளர் நாயகர்கள் பாதுகாப்புச் சபையால் இரகசியமான முறையிலேயே தெரிவு செய்யப்பட்டு பின்னர் அவர்களது பெயர்கள் அனுமதிக்காக பொதுச் சபையிடம் கையளிக்கப்பட்டன.

இதுவரையில் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் பொதுச் சபையால் ஒருபோதும் நிராகரிக்கப்படவில்லை. ஐ.நா பொதுச் சபையின் தலைவர் மொகென்ஸ் லைக்கெற்றொப்ற் ஏப்ரல் 12 தொடக்கம் 14, 2016 வரை வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பான பொதுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தி நடத்தியிருந்தார்.

வழிமூலம்        – சிலோன் ருடே
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *