மேலும்

நல்லிணக்கச் செயல்முறைகளில் சிறிலங்காவின் பங்காளராக இணைந்திருப்போம் – நிஷா பிஸ்வால்

nisha-biswalபோருக்குப் பிந்திய நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா முன்நோக்கி நகர்த்துவதற்கு, அதன் பங்காளராக இணைந்திருப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

”சிறிலங்காவில் இன்னும் அதிகமான பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. இதற்கு சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை அமெரிக்கா வரவேற்கிறது. அமெரிக்காவும், சிறிலங்காவும் பொதுவான இலக்குகளை கொண்டுள்ளன. பங்காளர்களான எமக்கிடையில், எல்லாக் காலத்திலும் உயர்ந்த மட்டத்திலான உறவு இருந்து வருகிறது.

ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகளுக்கு கூடுதல் மதிப்பளித்தல், நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் போன்ற தமது மக்களின் கரிசனைகளுக்குப் பதிலளிக்க சிறிலங்கா மேற்கொள்ளும் அர்த்தமுள்ள, உறுதியான நகர்வுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.

nisha-biswal

சிறிலங்காவில் நாம் பல்வேறு துறைகளில் குறிப்பாக, விவசாயம் தொடக்கம், தொழிற்துறை வரை முதலீடுகளை மேற்கொள்வதுடன், கல்வி, சுகாதாரம், மின்சாரம், இயற்கை வளங்கள், மனிதாபிமானச் செயற்பாடுகளிலும் தொடர்ந்து ஈடுபடுவோம்.

எல்லா இலங்கையர்களையும் முன்னேற்றுவதற்கு பொருளாதார அபிவிருத்தியை விரைவு படுத்தவும், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கவும், சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா பங்களாராக இணைந்து செயற்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

நேற்றைய சந்திப்பின் போது, சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், இரண்டு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அனைத்துலக மற்றும் பிராந்திய  விவகாரங்கள் மற்றும் நிகழ்வுகள், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் வொசிங்டனில் வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள, சமுத்திரங்களின் பாதுகாப்புத் தொடர்பான, “எமது சமுத்திரங்கள்” என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கில், சிறிலங்காவின் பங்களிப்புத் தொடர்பாகவும், இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *