மேலும்

தீபாவளிக்கு முன்னர் இந்தியா- சிறிலங்கா இடையே எட்கா உடன்பாடு

எதிர்வரும் ஒக்ரோபர் 30ஆம் நாள் கொண்டாடப்படவுள்ள தீபாவளிக்கு முன்னதாக, இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், எட்கா எனப்படும், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது.

சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுக்கும்,  இந்தியாவின் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் புதுடெல்லியில் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் எசல வீரக்கோன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தீபாவளிக்கு முன்னதாக எட்கா உடன்பாட்டைச் செய்து கொள்வதில் இரண்டு அமைச்சர்களும் அக்கறை காட்டியதாகவும், எனினும், இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயமாக உட்கா உடன்பாடு கையெழுத்திடப்பட்டு விடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்பாட்டை விரைவுபடுத்தும் நோக்கில், இந்திய அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் 20ஆம் நாள் கொழும்பு செல்லவுள்ளது.

இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சின் இணைச்செயலர் புபிந்தர் பல்லா தலைமையிலான இந்தக் குழுவில் பல்வேறு தி்ணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இடம் பெறுவர்.

இதன் பின்னர், இரண்டாவது கட்டப் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்காவில் இருந்து குழுவொன்று புதுடெல்லிக்கு வரும்.  அதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பேச்சு கொழும்பில் இடம்பெறும்.

அதேவேளை, சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுடன் மீண்டும் பேச்சுக்களை நடத்துவதற்காக, இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் ஓகஸ்ட் மாதம் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *