மேலும்

சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி

Dr. Indrajit Coomaraswamyசிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார்.  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சி்றிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளுடனும் கலந்துரையாடிய பின்னர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுனராக பணியாற்றிய அர்ஜுன மகேந்திரனின் பதவிக்காலம் கடந்த மாதம் 30 ஆம் நாளுடன் நிறைவடைந்ததை அடுத்தே, சிறிலங்கா அதிபர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

சிறிலங்காவின் பிரபல பொருளியல் நிபுணரான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, கொமன்வெல்த் செயலகத்தில், பொருளாதார விவகாரப் பணிப்பாளராகவும் முன்னர் பணியாற்றியுள்ளார்.

Dr. Indrajit Coomaraswamy

கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் பிரித்தானியாவின் ஹரோ பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளநிலைப்பட்டத்தையும், சூசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப்பட்டத்தையும் பெற்றவர்.

1973இல் சிறிலங்கா மத்திய வங்கியில் இணைந்த இவர், 1989ஆம் ஆண்டு வரை, பொருளாதார ஆய்வு மற்றும் புள்ளிவிபர, வங்கிகள் மேலாண்மைப் பிரிவில், அதிகாரியாக பணியாற்றினார்.

அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை, கொமன்வெல்த் செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவில் பல்வேறு முக்கிய பதவிகளில் பணியாற்றியிருந்தார்.

1971-72 காலப் பகுதியில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணியில், முதற்தர துடுப்பாட்ட வீரராகவும், இருந்த இந்திரஜித் குமாரசுவாமி, 1974ஆம் ஆண்டு ஆசியாட் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற சிறிலங்கா ரக்பி அணியின் தலைவராகவும் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *