மேலும்

பங்களாதேஸ் விடுதியில் ஆயுததாரிகள் தாக்குதல் – இரு இலங்கையர்களும் சிறைபிடிப்பு

hostage-crisis-dhakaபங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு இலங்கையர்களும் பணயக் கைதிகளாகச் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாக்காவில், அமெரிக்கா, ஜேர்மனி, ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள குல்சால் பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில், ஹொலே ஆர்டிசன் விடுதிக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அங்கு குண்டுகளை வெடிக்க வைத்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து. அந்த விடுதிக்குள் இருந்தவர்களை அவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.

இந்த விடுதிக்கு பொருளாதார ரீதியாக உயர்மட்டத்தில் உள்ளவர்களும், வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அதிகளவில் வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

hostage-crisis-dhaka

பணயக் கைதிகளாக சுமார் 20 பேருக்கு மேல் பிடிக்கப்பட்டுள்ளனர். எனினும் சரியான எண்ணிக்கை விபரம் வெளியாகவில்லை.

துப்பாக்கிதாரிகளுடன் நடந்த சண்டைகளில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர்.

பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு இலங்கையர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

டாக்கா விடுதியில் இரண்டு இலங்கையர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தமக்குத் தகவல் அளித்திருப்பதாகவும், அதனைத் தாம் உடனடியாக கவனத்தில் எடுத்திருப்பதாகவும், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது ருவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டாக்காவில் உள்ள சிறிலங்கா தூதுவர் காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பணயக் கைதிகளாகச் சிக்கிய இலங்கையர்கள் யார் என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும், அவர்கள் உயர்மட்ட இராஜதந்திரிகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதனிடையே இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளதுடன் இதில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனை பங்களாதேஸ் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *