மேலும்

கோத்தாவின் திடீர் அமெரிக்கப் பயணத்தின் இரகசியம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

gotaதான் அமெரிக்காவிற்குச் சென்றால் அங்குள்ள புலி ஆதரவு அமைப்புக்கள் தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் என ஒருதடவை கோத்தபாய தெரிவித்திருந்தார். அமெரிக்கச் சிறையில் அடைக்கப்படுவதை விட சிறிலங்காவில் இருப்பது சிறந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

கோத்தபாய ராஜபக்ச சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார். நோயுற்ற தனது மாமியாரைப் பார்ப்பதற்காகவே கோத்தபாய அமெரிக்காவுக்குச் சென்றுள்ளதாக மகிந்த தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

போர்க் குற்றங்களில் ஈடுபட்ட கோத்தபாயவைக் கைதுசெய்யுமாறு ‘ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு’ கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அமெரிக்காவிற்கான கோத்தபாயவின் பயணம் தொடர்பாகவோ அல்லது கோத்தபாய கைதுசெய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாகவோ ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பின் இணையத்தளத்தில் குறிப்பிடப்படவில்லை.

தான் அமெரிக்காவிற்குச் சென்றால் அங்குள்ள புலி ஆதரவு அமைப்புக்கள் தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் என ஒருதடவை கோத்தபாய தெரிவித்திருந்தார். அமெரிக்கச் சிறையில் அடைக்கப்படுவதை விட சிறிலங்காவில் இருப்பது சிறந்தது எனவும் கோத்தபாய குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு தெரிவித்த கோத்தபாய தற்போது அமெரிக்காவிற்குப் பயணம் செய்துள்ளமைக்கான காரணம் என்ன என்பதை அறிவது ஆவலான விடயமாகும். அத்துடன் கோத்தபாய அமெரிக்காவில் தங்கியுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் என்ன என்பதும் இங்கு அறியப்பட வேண்டிய விடயமாகும்.

2009ல், ‘படுகொலைக்கு எதிரான தமிழர்கள்’ என்ற அமைப்பு அமெரிக்கக் குடிமகனான கோத்தபாயவிற்கு எதிராகவும் அமெரிக்க கிறீன் அட்டையை வைத்திருக்கும் பொன்சேகாவிற்கும் எதிராகப் போர்க்குற்றங்கள் அடங்கிய முறைப்பாட்டு மனுவொன்றை அமெரிக்க பிரதம வழக்கறிஞர் திணைக்களத்திடம் சமர்ப்பித்திருந்தது.

அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதன் பொருட்டு சரத் பொன்சேகாவால் சமர்ப்பிக்கப்பட்ட நுழைவுவிசை அனுமதிப் பத்திரத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக 14 டிசம்பர் 2015 அன்று வெளியிடப்பட்ட ‘சண்டே ரைம்ஸ்’ ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போர்க் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே பொன்சேகாவிற்கான நுழைவுவிசையை அமெரிக்கா மறுத்ததாக பொன்சேகாவின் கட்சிப் பேச்சாளர் தெரிவித்தார். பொன்சேகாவின் நுழைவுவிசைவானது அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட போர்க் குற்றச்சாட்டின் காரணமாக மறுக்கப்பட்டிருந்தால் கோத்தபாய அமெரிக்காவுக்குச் செல்வதற்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டிருக்கும் என்பது இங்கு கேள்விக்குறியே.

கோத்தபாயவிற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு முறைப்பாட்டை முன்வைத்துள்ள ‘படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பானது’ இன்னமும் கோத்தபாய அமெரிக்காவிற்குப் பயணம் செய்தமை தொடர்பாகத் தனது எதிர்ப்பு அறிக்கையை வெளியிடவில்லை. கோத்தபாய ஒரு அமெரிக்கக் குடிமகன் என்பதால் இவருக்கு எதிராக அமெரிக்காவால் நிதி மோசடி விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். இது உண்மையா அல்லது இல்லையா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடந்த காலத்தில் கோத்தபாய சில விடயங்களில் அமைதி பேணிவருகிறார். குறிப்பாக சாவகச்சேரியில் தற்கொலை அங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் கோத்தபாய எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. கோத்தபாய பத்து ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்புச் செயலராகப் பதவி வகித்த போது இவருடன் நெருக்கமாக இருந்த புலிகளின் தலைவர்களில் ஒருவரான கேணல் ராம் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட ஏனைய முக்கிய புலி உறுப்பினர்கள் தற்போது கைதுசெய்யப்பட்ட போதிலும் கோத்தபாய இது தொடர்பாக தனது வாயைத் திறக்காது அமைதி பேணி வந்துள்ளார்.

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவே ராம் உட்பட புலி உறுப்பினர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கோத்தபாய பாதுகாப்புச் செயலராக இருந்த காலத்தில் கேணல் ராமுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியிருந்தமை தொடர்பாகப் பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ராம் இந்த நாட்டை விட்டு இரகசியமான முறையில் வெளியேறியிருந்தார் என ஒரு தடவை கருணா அம்மான் குறிப்பிட்டிருந்தார்.

‘போரின் பின்னர் உயிருடன் வாழும் புலிகளின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவர் தற்போது சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளார் என தமிழ் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். தயாமோகன் மலேசியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக ‘கேணல்’ கருணா என அறியப்படும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பி.பி.சி சந்தேசய சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார். அம்பாறைக் காடுகளில் தங்கியிருந்த கேணல் ராம் மற்றும் தயா மோகன் ஆகியோர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என அமைச்சர் முரளிதரன், பி.பி.சி சந்தேசியவிடம் குறிப்பிட்டுள்ளார்’ என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கேணல் ராம் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். தனக்கு  ஆதரவாகச் செயற்படும் சரத் பொன்சேகா மற்றும் ஏனைய தலைவர்களை ஆத்திரமூட்டும் வகையில் மகிந்த மற்றும் அவரது அரசாங்கத்தால் கேணல் ராம் உட்பட மூன்று புலிகள் அமைப்புத் தலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என 2010 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சுட்டிக்காட்டியிருந்தார்.

‘கே.பி என அறியப்படும் குமரன் பத்மநாதன் மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கையை அடுத்து தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களை சிறிலங்கா அரசாங்கம் தற்போது விடுவித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். விடுவிக்கப்பட்டவர்களில் கேணல் ராமும் ஒருவராவார்.

ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கும் முக்கிய உறுப்பினர்களுக்கு ஊறுவிளைவிக்கும் நோக்குடனேயே சிறிலங்கா அரசாங்கமானது புலிகள் அமைப்பின் தலைவர்களைத் தற்போது விடுவித்துள்ளது என ரணில் குற்றம் சுமத்தினார். செல்லக்கிரி, கிரிதரன் ஆகிய இரண்டு புலி உறுப்பினர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க சண்டே ஐலண்ட் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிடப்பட்டுள்ளார். கடற்படை அதிகாரி ஒருவரைக் கொலை செய்தார் என்கின்ற குற்றச்சாட்டில் செல்லக்கிரியும் டயற்ற கிருள்ள கண்காட்சியின் போது சிறிலங்கா அதிபரைக் கொலை செய்ய முயற்சித்தார் என்கின்ற குற்றச்சாட்டின் பேரின் கிரிதரனும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

வன்னியிலுள்ள இடம்பெயர்ந்த சாதாரண தமிழ் மக்களை அவர்களது இடங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்காத அரசாங்கம் தற்போது தன்னைக் கொலை செய்ய வந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளபோதிலும் இவ்வாறான புலி உறுப்பினர்களை விடுவித்து வருகிறது. இது கே.பி மற்றும் சிறிலங்கா அதிபர் ஆகிய இருவருக்கும் இடையிலான இரகசிய உடன்படிக்கையின் ஒரு பகுதியாகும் என நாங்கள் நம்புகிறோம்’ என ரணில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரணிலால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பை இராணுவப் பேச்சாளர் மறுத்ததுடன், கேணல் ராம் ஒருபோதும் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்தச் செய்தியுடன் தொடர்புபட்ட செய்தி ஒன்று 16.01.2010 அன்று வெளியிடப்பட்ட டெய்லி மிறர் பத்திரிகையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

‘புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கேணல் ராம் ஒருபோதும் தடுத்து வைக்கப்படவில்லை எனவும் ஜெனரல் சரத் பொன்சேகா தரப்பால் கூறப்பட்டது போன்று ராம் ஒருபோதும் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்படவில்லை எனவும் இராணுவத் தரப்பு கூறுகிறது. கேணல் ராம் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டே விடுவிக்கப்பட்டார் என ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகம் உறுதிப்படுத்துகிறது. கேணல் ராம் முன்னாள் புலி உறுப்பினர்களை ஒன்றிணைத்து தேர்தல் நடவடிக்கைகளை மட்டுமல்லாது, பொதுமக்களின் உடைமைகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் தலைமை தாங்குவதற்கான வாய்ப்புக் காணப்படுவதாக பொன்சேகாவின் அலுவலகம் தெரிவித்தது.

ஆகவே தொடர்புபட்ட அதிகாரிகள் இது தொடர்பில் அவசியமான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், கேணல் ராம் ஒருபோதும் கைதுசெய்யப்படவில்லை எனவும் இவர் கிழக்கில் மறைந்து வாழ்வதாகவும் நம்பப்படுகிறது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார,  டெய்லி மிறர் இணையத்தளத்திற்கு வழங்கிய செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்.“

எனினும், ராம் இராணுவத்தின் தடுப்பில் வைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டார் எனத் தற்போது கூறப்படுகிறது. ராஜபக்சவின் புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து புலிகள் அமைப்பின் முக்கிய இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் பணியாற்றுவதாக அண்மையில் இடம்பெற்ற முஸ்லீம் ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பொன்றில் ரணில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து கேணல் ராம் பணியாற்றுகிறார் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்வாறான பின்னணியில், கோத்தபாயவின் அமெரிக்காவிற்கான திடீர் பயணமானது தற்போதும் ஒரு புதிராகவே உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *