மேலும்

கொழும்புத் துறைமுகத்தில் பிரெஞ்சு போர்க்கப்பல் – புதிய உறவுகள் துளிர்க்கின்றன

french-warship (1)சிறிலங்காவுடன் உறுதியான கடற்படை கூட்டு ஆரம்பிக்கப்படுவதற்கான தருணம் இதுவேயாகும் என்று, பிரெஞ்சுக் கடற்படை தெரிவித்துள்ளது.

பிரெஞ்சுக் கடற்படையின் ஆகோனிட் போர்க்கப்பல் நேற்று ஒருவார காலப் பயணமாக, கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தப் போர்க்கப்பலுக்கு, சிறிலங்கா கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தது.

இதன் பின்னர், சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன ஆகியோர், பிரெஞ்சுப் போர்க்கப்பலுக்குச் சென்று பார்வையிட்டதுடன், அதன் கட்டளை அதிகாரியான, கப்டன் லோரன்ட் மாசார்ட் டி கிரமொன்ட்டைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

french-warship (1)

french-warship (2)french-warship (3)

இதற்கிடையே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த பின்னர் பி ரஞ்சுப் போர்க்கப்பலின் கட்டளை அதிகாரியான கப்டன் லோரன்ட் மாசார்ட் டி கிரமொன்ட் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஆரம்பிக்கப்படுவதற்கு இது நல்ல நேரம் என்று குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சிறிலங்காவும் பிரான்சும் ஒரே கரிசனையைக் கொண்டுள்ள நாடுகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான பிரெஞ்சுத் தூதுவர் ஜுன் மரின் சூ, ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் பிரெஞ்சுப் போர்க்கப்பல் ஒன்று சிறிலங்கா வந்திருப்பதாகவும், இதனையடுத்து, மேலும் பல பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள் வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரெஞ்சுப் போர்க்கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் போது இருதரப்பு கடற்படை உறவுகளை வலுப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் எதிர்வரும் மே 5ஆம் நாள் கொழும்புத் துறைமுகத்தை விட்டுச் செல்லும் போது கூட்டுப் பாதைப் பயிற்சியிலும் இருநாடுகளின் கடற்படைகளும் ஈடுபடவுள்ளன.

கொழும்பில் தரித்திருக்கும் பிரெஞ்சுப் போர்க்கப்பலான ஆகோனிட், 34 ஏவுகணைகளைக் கொண்ட, நவீன போர்க்கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *