மேலும்

பரவிப்பாஞ்சான் விவகாரம்: சிறிலங்கா இராணுவம் மீதே விசாரணை நடத்த வேண்டும் – சுமந்திரன்

sumanthiranபரவிப்பாஞ்சான் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதானால், பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர் மீதே விசாரணை நடத்த வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமுக்குள் அத்துமீறி நுழைந்ததாக தவறான அர்த்தப்படுத்தல்கள் அண்மைய நாட்களில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

பரவிப்பாஞ்சான் பிரதேசமானது ஏ-9 வீதியின் கிழக்காக கிளிநொச்சி நகரின் மத்தியில் காணப்படும் பகுதியாகும். இந்தப் பகுதியில் இராணுவத்தினர் தற்போது இருக்கின்றனர். அவர்கள் மக்களுக்கு சொந்தமான பகுதியை ஆக்கிரமித்துள்ளனர்.

அவர்கள் ஆக்கிரமித்துள்ள மொத்த நிலப்பரப்பின் அளவு தற்போதைக்கு முழுமையாக கூற முடியாது விட்டாலும், இந்தப் பிரதேசத்தில் 88 குடும்பங்களுக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளும், வீடுகளும் காணப்படுகின்றன.

கடந்த 16ஆம் நாள்  கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அங்கு சென்றிருந்தார்.

அறிவகம் வளாகத்திலிருந்து கூட்டம் நிறைவடைந்து எதிர்க்கட்சித் தலைவர் வெளியேறும் போது கிளிநொச்சி மாவட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனுக்களை கையளித்தனர்.

இதன்போது பரவிப்பாஞ்சான் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களும் அங்கு வருகை தந்திருந்து தமக்கு சொந்தமான உறுதிக்காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துள்ளனர்.

34 குடும்பங்களுக்கு மட்டுமே மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளன. 54 குடும்பங்கள் மீள்குடியேற முடியாது அவலநிலையில் உள்ளன. எம்மை எமது சொந்தக்காணிகளில் மீண்டும் குடியேறுவதற்கு அனுமதியளியுங்கள். எமது வீடுகள் சில பூட்டப்பட்டுள்ளன. பூட்டப்பட்ட வீடுகளை இராணுவம் கூட பயன்படுத்துவதில்லை என்று சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன் எமது வீடுகளும் நிலங்களும் வீதிக்கு மறுபக்கத்தில் தான் இருக்கின்றன. நேரில் வந்து நிலைமைகளை பார்த்தால் எமது கோரிக்கைகளின் நியாயத்தை புரிந்து கொள்வீர்களெனக் கூறி அழைப்பு விடுத்தனர்.

இந்தச் சமயத்தில் தான் எதிர்க்கட்சித்தலைவர், நாடாமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் குறித்த பிரதேசத்திற்கு சென்றிருந்தனர்.

அவர்களின் வாகனங்கள் சென்றபோது அங்கு காணப்பட்ட வாயிற்தடையை நீக்கி உள்ளே செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதனையடுத்தே எதிர்க்கட்சித் தலைவர் மக்களுக்கு சொந்தமான பகுதியினை பார்வையிட்டிருந்தார்.

அங்கு மக்களும் எதிர்க்கட்சித்தலைவரோடு சென்று தமது இடங்களை அடையாளம் காட்டினார்கள். தமது மீள்குடியேற்றத்தை உறுதி செய்யுமாறு கோரினர். குறித்த விடயத்தை கொழும்பு சென்றதும் சிறிலங்கா அதிபர், பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வொன்றை பெற்றுத்தருவேன் எனக் கூறினார்.

இருப்பினும் எதிர்க்கட்சித்தலைவர் அப்பகுதிக்குச் செல்லும்போது எந்தவொரு நபரும் தடுக்கவோ அல்லது யாரிடமாவது அனுமதி பெறவேண்டும் என்றோ கூறவில்லை.

அவ்வாறு கூறியிருந்த பின்னர் அதனை மீறிச் சென்றிருந்தால் தவறாகும். ஆகவே எதிர்க்கட்சித்தலவைர் எவ்விதமான அத்துமீறலிலும் ஈடுபடவில்லை. சட்டத்திற்கு முரணாக நடக்கவுமில்லை.

பரவிப்பாஞ்சான் மக்கள் தமக்கு சொந்தமான காணிகளை பார்வையிடுமாறு விடுத்த அழைப்பின் பேரிலேயே எதிர்கட்சித்தலைவர் அங்கு சென்றிருந்தார்.

பரவிப்பாஞ்சான் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான 30 ஏக்கரில் 5ஏக்கரை மட்டுமே இராணுவம் தமக்கு தேவையெனக்கூறி அதனை சுவீகரிப்பதற்கு சில படிமுறைகள் எடுக்கப்படுகின்றன.

எனினும் அவைகூட முழுமையாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

இராணுவம் தான் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை சட்டத்திற்கு முரணாக பலாத்காரமாக கைப்பற்றி வைத்திருக்கின்றது.

யாருக்காவது விசாரணைகள் தேவைப்படுமாகவிருந்தால் அப்பகுதியில் சட்டவிரோதமாக, பலாத்காரமாக பொதுமக்களை மீள்குடியேறவிடாது காணிகளை, வீடுகளை ஆக்கிரமித்து தடுத்துக்கொண்டிருக்கின்றமைக்காக இராணுவத்தினரையே விசாரணை செய்யவேண்டும்.

அதேநேரம் அரசாங்க நிலமொன்றில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தால், உயர்பாதுகாப்பு வலயம் காணப்பட்டிருந்தால் அதனுள் பிரவேசித்திருந்தால் அதனை பலாத்கார பிரவேசமெனக் கூறமுடியும். ஆனால் இந்த நிலங்கள், கட்டடங்கள் மக்களுக்கு சொந்தமானவை.

அவை முன்னர் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டவை என்று நியாயம் கூற முடியாது. புலிகள் அதனைக் கைப்பற்றி வைத்திருந்தார்கள் என்பதற்காக, சிறிலங்கா இராணுவமும் அதே தவறைச் செய்ய முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *