மேலும்

தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சிவகரன் கைது

sivakaranஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளரான சிவகரன், நேற்று மன்னாரில் வைத்து, தீவிரவாத விசாரணைப் பிரிவினரால், கைது செய்யப்பட்டார்.

மன்னாரில் உள்ள, தனது பதிப்பகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே, சிவகரன் நேற்று பிற்பகல் 3 மணியளவில், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டது தொடர்பான பற்றுச்சீட்டு, தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள போதும், என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டார் என்று கூறப்படவில்லை.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளரான, சிவகரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில்,  வட மாகாணசபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, சிவகரன் கைது செய்யப்பட்டது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்திலிருந்து, வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட,  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சிவகரன், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பதை அறிந்து, நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.

இந்தக் கைது மாத்திரமல்லாமல், கடந்த சில நாட்களில் பல கைதுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பல அதிகாரபூர்வமான கைதுகளாக இல்லாமல், கடத்தப்பட்டுப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றமையானது, மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகக் காணப்படுகிறது.

சிவகரன் கைது உட்பட இவ்வாறு முறைகேடான விதத்தில் இடம்பெறும் கைதுகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்குக் கொள்ளும் அதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்பினர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *