மேலும்

குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை – அனைத்துலக ஊடகம்

warcrimeஉண்மையில், மைத்திரிபால சிறிசேன தான் சார்ந்த சிங்கள சமூகத்தால் ‘துரோகி’ என்கின்ற முத்திரையைக் குத்த விரும்பவில்லை. இது இந்தியாவின் மத்திய அரசாங்கத்திற்கும் பொருத்தமானதாகும்.

இவ்வாறு Eurasia Review ஊடகத்தில், DR. ABDUL RUFF எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

குற்றங்கள் இழைத்தவர்கள் தமது தவறை உணரும் போது மட்டுமே மீளிணக்கம் என்பது வெற்றியளிக்கும். எந்தவொரு காரணங்களுக்காகவும் சிறுபான்மையினருக்கு எதிராக குறித்த நாட்டின் அரசாங்கத்தால் குற்றம் இழைக்கப்படும் போது அங்கு போலியான மீளிணக்கப்பாடு மேற்கொள்ளப்படுமிடத்து சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது. தென்னாசியாவின் தீவான சிறிலங்காவில் நல்லிணக்க முயற்சி இன்னமும் வெற்றி பெறவில்லை என்பதை இங்கு நோக்க முடியும்.

இந்தியா போன்று, சிறிலங்கா தனது சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராகக் குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த குற்றங்களுக்கு பொறுப்பளிப்பது போல் தெரியவில்லை. கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு பிரச்சினைகளை மறந்து சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கி அவர்களைப் பெரும்பான்மை சமூகமான சிங்களவர்களுடன் இணைத்து நாட்டை வழிநடாத்திச் செல்வதற்கான முயற்சியை சிறிலங்கா அரசு முன்னெடுக்கவில்லை.

சிறிலங்காவின் தொலைக்காட்சி சேவைகளைப் பார்க்கின்ற மற்றும் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை வாசிக்கின்ற எவரும் சிறிலங்காவின் அரசாங்கமும் பெரும்பான்மை சமூகமும் தமிழ் மக்களையும் சிறுபான்மை சமூகங்களையும் எவ்வாறு பார்க்கின்றனர் என்பதைத் தெட்டத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். அதாவது சிறிலங்கா அரசாங்கமும் பெரும்பான்மை சிங்களவர்களும் தமிழ் சமூகம் உட்பட சிறுபான்மை சமூகங்களை ஒரு பிரச்சினையாகவே நோக்குகின்றன.

ராஜபக்ச அரசாங்கத்தாலும் சிறிலங்கா இராணுவத்தாலும் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் சிறிலங்காவின் பெரும்பான்மை சமூகமும் அரசாங்கமும் எவ்வித அனுதாபத்தையும் காண்பிக்கவில்லை. இந்த அடிப்படையில் ‘பயங்கரவாதத்திற்கு’ எதிரான யுத்தம் என்கின்ற பெயரில் சிறிலங்காவின் பெரும்பான்மை அரசானது சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பல்வேறு மீறல்களை இழைத்த போதிலும் இவ்வாறான மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு முன்வரவில்லை.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதாபிமானத்திற்கு எதிரான போர்க் குற்றங்கள் மிகப் பாரியதொரு பிரச்சினையாகும். இவ்வாறான மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாகத் தண்டனை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் சிறிலங்காவைக் கோரியுள்ளன. சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்களுடனும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுடனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்த போதிலும், குற்றவாளிகளைக் கைது செய்து தண்டனை வழங்குவது தொடர்பில் எவ்வித முன்னேற்றகரமான நகர்வையும் எடுக்கவில்லை. ஏனெனில் ராஜபக்சவும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தவர்களும் தமது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் தண்டனை பெற்றுக் கொடுப்பதை விரும்பவில்லை.

உண்மையில், சிறிசேன தான் சார்ந்த சிங்கள சமூகத்தால் ‘துரோகி’ என்கின்ற முத்திரையைக் குத்த விரும்பவில்லை. இது இந்தியாவின் மத்திய அரசாங்கத்திற்கும் பொருத்தமானதாகும். அதாவது வரலாற்று முக்கியத்துவம் மிக்க பாபர் மசூதியை அழித்த இந்துத்துவக் குற்றவாளிகளைக் கைதுசெய்தால் இந்து மதத்தவர்கள் மத்தியில் ‘துரோகி’ என்கின்ற அவப் பெயரைச் சந்திக்க வேண்டி வரும் என இந்திய மத்திய அரசாங்கம் கருதுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்கும் அதேவேளையில் தமிழ் மக்களை அதிகளவில் கொன்று குவித்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்காவிடின் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்கின்ற உண்மையை சிறிசேன அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ராஜபக்ச அரசாங்கத்தால் தமது இரத்த உறவுகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை தமிழ் மக்களால் அவ்வளவு இலகுவாக மறக்கவோ அல்லது மன்னிக்கவோ முடியாது. ஆகவே போர்க் குற்றங்களை இழைத்த முன்னாள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தற்போதைய அதிபர் சிறிசேன தண்டனை வழங்க முன்வருவதுடன், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள்.

சிறுபான்மையினருக்கு எதிராக குறித்த நாட்டு அரசாலோ அல்லது தனிப்பட்டவர்களாலோ இழைக்கப்படும் குற்றங்கள் தண்டனைக்குரியவையாகும். ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை என்பதே உண்மையாகும். சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய நிலைப்பாடானது தமிழர் எதிர்ப்புக் கொள்கையை இது இன்னமும் கைவிடவில்லை என்பதையும் இந்திய எதிர்ப்புக் கொள்கை இன்னமும் வலுவாக உள்ளதையும், தாம் விரும்புகின்ற வேளையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்காவின் இராணுவமானது யுத்தத்தை மீண்டும் ஆரம்பிக்கும் என்பதையுமே சுட்டிநிற்கின்றது.

பல்வேறு அமைப்புக்களினதும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய-அமெரிக்க யுத்தம் போன்றவற்றின் ஆதரவுடனும் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களை மகிந்த அரசாங்கம் இழைத்தது. தற்போது ஐ.நாவின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிறிசேன அரசாங்கம் தயக்கம் காண்பித்து வருவதுடன், போர்க் குற்றங்கள் தொடர்பாக உள்நாட்டு நீதிப்பொறிமுறையை மட்டுமே மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறிவருகிறது.

சிறிசேன அரசாங்கத்தின் நற்சான்றுடன், ராஜபக்ச மீண்டும் சிறிலங்காவின் ஆட்சியைக் கைப்பற்ற முன்வரலாம். ஆனால் இது நடக்கக் கூடாது. போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி, தமிழ் சமூகமும் ஏனைய சிறுபான்மை சமூகத்தினரும் சிறிலங்காத் தீவில் சுதந்திரமாக வாழலாம் என்கின்ற நிலையை உருவாக்க வேண்டியது சிறிசேன அரசாங்கத்தின் கடப்பாடாகும்.

சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் விசாரணை செய்து போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதானது சிறிலங்காவின் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்துவதுடன், உலகமெங்கும் இடம்பெறும் போர்க் குற்றங்களைக் குறைப்பதற்கும் வழிவகுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *