மேலும்

மீன் ஏற்றுமதித் தடை நீக்கம் – அவசரப்பட்டு அறிவித்த சிறிலங்கா மீது ஐரோப்பிய ஒன்றியம் விசனம்

eu-flagசிறிலங்கா மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியிருப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் அவசரப்பட்டு அறிவிப்பை வெளியிட்டது குறித்து, ஐரோப்பிய ஒன்றியம், சிறிலங்கா அரசாங்கத்திடம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக. இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக, பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய் ஒன்றியத்தின், கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்பிடி தொடர்பான, பணிப்பாளர் நாயகம், சிறிலங்கா அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதாக,மீன் ஏற்றுமதி தடைநீக்கப்பட்டு விட்டதாக, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சு எவ்வாறு அறிவித்தது என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் தொடக்கம் மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருப்பதாக, கடற்றொழில் அமைச்சு வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

பின்னர், கடற்றொழில் அமைச்சு வெளியிட்ட இன்னொரு அறிக்கையில், சிறிலங்கா மீதான மீன் ஏற்றுமதி தடையை விலக்குவது குறித்து ஏப்ரல் 21ஆம் நாள் முடிவெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

மூன்றாவதாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஊடகங்கள் அடிப்படையற்ற தகவல்ககளை வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சிடம், சிறிலங்கா பிரதமர் செயலகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதனிடையே, 28 நாடுகளின் அமைச்சர்கள் அங்கம் வகிக்கும், ஐரோப்பிய ஒன்றிய அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னரே, சிறிலங்கா மீதான மீன் ஏற்றுமதி தடை நீக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஆணையம் கடந்த வாரம், மீன் ஏற்றுமதி தடையை நீக்குவதற்குப் பரிந்துரைத்துள்ளது.

இரண்டு மூன்று மாதங்களில், இந்தப் பரிந்துரை தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே இதுபற்றிய முடிவு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *