மேலும்

சம்பந்தன், விக்கி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு

sampanthan- vigneswaranதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி,சிங்கள அடிப்படைவாத அமைப்புகளான, பொது பலசேனாவும், சிஹல ராவயவும், நேற்று சிறிலங்கா காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளன.

வடக்கு மாகாண முதலமைச்சரின் அண்மைய கருத்துக்கள்,  அரசியலமைப்பை மீறுவதாக உள்ளது என்று தெரிவித்து, சிஹல ராவயவின் பொதுச்செயலர் வண.மாகல்கண்டே சுதந்த தேரர், பொது பலசேனவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ஆகியோர் இந்த முறைப்பாட்டைச் செய்தனர்.

இதன் பின்னர் கருத்து வெளியிட்ட, வண.மாகல்கண்டே சுதந்த தேரர், ”வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, தனியான அரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது அரசியலமைப்புக்கு முரணானது. இது நாட்டின் இறைமை, ஒற்றையாட்சி, பூகோள ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதிக்கக் கூடியது. பிரிவினைவாதம், இனவாதத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது.

முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரன், வேண்டுமென்றே அரசியமைப்பு விதிமுறைகளை மீறுகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கூட,விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தை நியாயப்படுத்துகிறார்.

கொழும்பில், சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பௌத்த பிக்குகள், பொதுமக்களை மோசமாக படுகொலை செய்யப்பட்டதை எதிர்க்கட்சித் தலைவர் எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி முறைப்பாடு பதிவு செய்துள்ளோம்.

காவல்துறை மா அதிபர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், மனித உரிமை ஆணைக்குழு, காவல்துறை ஆணைக்குழு, நீதிமன்றத்துக்குச் செல்வோம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *