மேலும்

சீனாவுடனான சிறிலங்காவின் உடன்பாட்டுக்கு எதிர்ப்பை வெளியிடவுள்ளது இந்தியா

india-chinaசீனாவிடம் சிறிலங்கா பெற்றுள்ள கடன்களை, பங்கு முதலீடாக மாற்றுவது தொடர்பாக, சீனாவிடம் சிறிலங்கா முன்வைத்துள்ள திட்டத்துக்கு இந்தியா தனது கவலையை தெரிவிக்கவுள்ளது.

விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவிடமும், இதுபற்றி இந்தியா பேசவுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் முன்னைய ஆட்சிக்காலத்தில் சீனாவின் நிதியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்களினால், சீனாவுக்கு சிறிலங்கா 8 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டியுள்ளது.

இதற்குப் பதிலாக, தற்போது செயற்பாடுகளற்றிருக்கும், சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில், அந்த நாட்டைப் பங்காளியாக்கும் யோசனை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்திருக்கிறது.

இந்தக் கடன் பங்கு மாற்ற யோசனையை, இந்திய தனது மூலோபாய நலனுக்கு ஆபத்தானதாக இருக்கும் என்று அச்சமடைந்துள்ளது.

விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவிடம், இந்த விவகாரத்தை புதுடெல்லி எழுப்பவுள்ளது.

அத்துடன், வரும் மே அல்லது ஜூன் மாதம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், புதுடெல்லிக்கு அழைத்து, இந்திய அரசாங்கம் இதுகுறித்துப் பேசவுள்ளது.

கடன்-பங்கு மாற்ற திட்டத்துக்குள் சிறிலங்கா நுழைவதால், அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் போன்றன, சீனாவின் கைக்குச் செல்லும் என்றும்,  அவற்றை சீனா தனது இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடும் என்றும் இந்தியா அஞ்சுகிறது.

இதனாலேயே சிறிலங்காவிடம் தமது கரிசனையை வெளிப்படுத்தவுள்ளது. அத்துடன் சீனாவைப் பங்காளியாக்குவதற்குப் பதிலாக, இந்த சொத்துக்களை  மூலோபாய நடுநிலை அனைத்துலக அமைப்பின் மூலம் இயக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறு சிறிலங்காவிடம் இந்தியா கோரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *