மேலும்

தமிழ்மக்கள் மீது எந்தத் தீர்வையும் திணிக்கமாட்டோம் – இரா.சம்பந்தன்

sampanthan-rஎமது மக்கள் மீது எந்தவொரு தீர்வையும் திணிக்கமாட்டோம், அவர்கள் விரும்பாத எந்த தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

யாழ்ப்பாணத்தில், நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு இரா. சம்பந்தன் வழங்கிய பதில்களும்-

கேள்வி:- வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- அது சம்பந்தமாக முதலமைச்சருடன், அமைச்சரவையுடன், அவைத் தலைவருடன், ஏனைய உறுப்பினர்களுடன் பேசப்படும். அது தேவையா? இல்லையா? தேவையென்றால் என்ன விதமாக கையாளப்பட வேண்டும் என்ற விடயங்கள் பற்றி ஆராயப்படும். இரண்டரை வருடங்கள் முடிந்துள்ளபடியால் மீதி இரண்டரை வருடங்களுக்கு அமைச்சரவை மாற்றியமைக்கலாம் என்ற கருத்தை முன்வைத்திருக்கின்றார்கள். அதில் 16 பேர்தான் கையெழுத்திட்டிருக்கின்றார்கள். அது அவர்களுடைய ஜனநாயக உரிமை. அது பரிசீலிக்கப்படும். அதுக்கு மேலதிகமாக அந்த விடயம் சம்பந்தமாக கூறுவதற்கு எதுவுமில்லை.

கேள்வி:- பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவரான தங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இதற்கு தங்கள் பதில் என்ன?

பதில்:- தினேஸ் குணவர்த்தன பொது எதிர்க்கட்சி உறுப்பினர் என்று தன்னை வர்ணித்துக் கொள்கின்றார். அவர் கூறுகின்ற ஒவ்வொரு கருத்துக்கும் நான் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை; தேவையும் இல்லை. அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்கும் நான் பதில் சொல்லவும் மாட்டேன். வடக்கு – கிழக்கு இந்த நாட்டைச் சேர்ந்த பிரதேசம். இந்த நாட்டின் ஒரு பகுதி. வடக்கு – கிழக்கு சம்பந்தமாக நான் நாடாளுமன்றத்தில் பேசினால் அல்லது வெளியில் பேசினால், இந்த நாட்டினுடைய ஒரு பகுதியைப் பற்றி நான் பேசுகின்றேன். அதிலே அர்த்தம் என்னவென்றால், இந்த நாட்டைப் பற்றி நான் பேசுகின்றேன். தினேஷ் குணவர்த்தன வடக்கு – கிழக்குப் பற்றி பேசுகின்றாரா? தினேஷ் குணவர்தன பேசுவது தன்னுடைய சொந்தப் பகுதியைப் பற்றி. நாங்கள் எமது நாட்டைப் பொறுத்தவரையில் – எமது நாட்டில் வாழ்கின்ற சகல மக்களையும் பொறுத்த வரையில் நாங்கள் மிகவும் அக்கறையாக இருக்கின்றோம். பேச வேண்டிய நேரங்களில் பேசுகின்றோம். இனிமேலும் பேசுவோம். எங்களை வழி நடத்துவதற்கு தினேஸ் குணவர்த்தனவுக்கு எதுவிதமான உரித்தும் இல்லை. தகுதியும் இல்லை.

 கேள்வி:- முன்னாள் போராளிகள் கண்டபடி கைதுசெய்யப்படுகின்றனர். அது தொடர்பாக தங்கள் நடவடிக்கை என்ன?

பதில்:- அது சம்பந்தமாக பரிசீலிக்க வேண்டும். அது எந்த மட்டத்தில் நடைபெறுகின்றது?, எந்த அளவுக்கு நடைபெறுகின்றது?, ஏன் நடைபெறுகின்றது? என்பதைப் பற்றி பரிசீலிப்போம்.

கேள்வி:- வடக்கில் அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ள பொருத்து வீடு தொடர்பில் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்:- அது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய ஆட்சேபனை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது. என்னுடைய கருத்தும், பொருத்து வீடுகள் எமது மக்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. எமது மக்கள் பரம்பரையாக கல்லால் மண்ணால் கட்டப்பட்ட வீடுகளில்தான் வாழ்ந்த வந்துள்ளார்கள். அது அவர்களுடைய கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த விடயம். இவ்விதமான பொருத்து வீடுகள் நாட்டில் எங்கும் கட்டப்படவில்லை.  பிரேமதாச அதிபராக இருந்த காலத்தில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நாட்டின் பல பகுதிகளில் நிறைவேற்றப்பட்டன. அந்தப் பகுதிகள் எதிலும் பொருத்து வீடு கட்டப்படவில்லை. ஏன் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட வேண்டும். அதுவும் சாதாரண வீடு கட்டுவதைப் போல் இந்த வீட்டைக் கட்டுவதற்காக இரண்டு மடங்கு பணம் செலவு செய்ய வேண்டியிருக்கின்றது. கடந்த தடவை அமைச்சரவை கூடியபோது மறுபரிசீலிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் கூறியதாக நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருக்கின்றோம். அது சம்பந்தமாக நாங்கள் எங்கள் கருத்துக்களை முன்வைத்து நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி:- நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது 2016இல் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று கூறினீர்கள். இவ்வருடத்தில் தீர்வு கிடைக்கக்கூடிய சாத்தியம் உள்ளதா?

பதில்:- அது என்னுடைய கணிப்பு. தீர்வுத் திட்டத்தை ஏற்படுத்துவது நான் அல்ல. தீர்வுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளுவதில் ஒரு ஒழுங்கு இருக்கின்றது. சில கருமங்கள் நடைபெற வேண்டும். என்னுடைய கணிப்பு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. மகிந்த ராஜபக்ச வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார். மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்துள்ளார். அவர் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு விரும்புகின்றார் என்பது எனது கணிப்பு. அவருக்கு உதவியாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வந்திருக்கின்றார். அவருக்கும் அதே சிந்தனை இருக்கின்றது என்பது எனது கணிப்பு. இந்த இரண்டு பகுதிகளும் ஒரு பெரும்பான்மையை தாங்கள் அடையாவிட்டாலும் கூட எங்களுடைய உதவியுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடையக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள். ஆனபடியால் இந்தக் கருமத்தில் தாமதம் ஏற்படவில்லை. விசுவாசமாக எல்லோரும் செயற்பட்டால் இந்தக் கருமம் இந்த வருடத்துக்குள் முடிவடைய வேண்டும் என்பது என்னுடைய கணிப்பு. அவ்விதமாக முடிவடைவது நல்லது என்று நான் நினைக்கின்றேன். அவ்விதம் முடிவடைந்தால் பிரச்சினை நீடிக்கப்படாமல், குழம்பாமல் நாங்கள் தீர்க்கலாம். ஊடகங்கள் இதைக் குழப்பக் கூடாது. ஊடகங்களின் சில கேள்விகளும், கருத்துக்களும் இதைக் குழப்புவதற்காக கேட்பது போன்று இருக்கின்றது. அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

கேள்வி:- காணிகள் மற்றும் அரசியல் கைதிகள் விடுவிப்புக்கு தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி முட்டுக்கட்டை போடுகின்றார்கள். அவ்வாறான நிலையில் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கும் காரணம் காட்டி முட்டுக்கட்டை போடமாட்டார்களா?

பதில்:- உங்களுடைய கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஓரளவு உண்மை இருக்கின்றது. ஒன்றும் நடைபெறவில்லை என்று நீங்கள் கூற முடியாது. பல கருமங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், எமது மக்கள் நீண்ட காலமாக கஷ்டப்பட்டிருக்கின்றார்கள். போர் முடிந்து 7 ஆண்டுகளாகின்றன. போர் முடிந்த பின்னரும் மக்கள் பல இடங்களில் மீளக்குடியேறவில்லை. இராணுவத்தினர் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும். இராணுவம் தங்களுடைய மேற்பார்வையில், தங்கள் பாதுகாப்புக்கூட பயன்படுத்தாத காணிகளைக் கூட வைத்திருக்கிறார்கள். அந்தக் காணிகளை மக்களும் பயன்படுத்த முடியாத நிலைமையில் தாங்களும் பயன்படுத்தாமல், பாதுகாப்பு தவிர்ந்த ஏனைய கருமங்களுக்கு பாவிக்கிறார்கள். அந்த நிலைமை தொடரக் கூடாது. ஆனால், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசினால் ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொல்லமாட்டேன். மகிந்த ஆட்சி இருந்திருந்தால் இது நடந்திருக்காது. இதைப் போல நிலைமை பத்து மடங்கு அல்ல நூறு மடங்கு மோசமடைந்திருக்கும். இதனை எமது மக்கள் உணர வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு குந்தமாக இந்த அரசு செயற்படுகின்றது என்று மஹிந்த அணியினர் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இன்று குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள். ஆனபடியால் இந்த அரசு கவனமாகச் செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது. இருப்பினும் எமது மக்களின் கஷ்டங்கள் தொடர முடியாது.

கேள்வி:- ஜெனிவா தீர்மானம் நடைமுறைக்கு வரவில்லையே?

பதில்:- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இங்கு உடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். உண்மை கண்டறியப்பட வேண்டும். உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும். நடைபெற்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறக் கூடாது. அதற்கு தக்க நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட வேண்டும். தக்க உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும். இவை எல்லாம் ஏற்படுவதற்கு முக்கியமான வழி – முக்கியமான முடிவு ஒரு நிரந்தரமான நியாயமான அரசியல் தீர்வு காணப்படவேண்டும். ஜுன் மாதம் 13 ஆம் நாள் தொடக்கம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 32 ஆவது அமர்வு நடைபெறவுள்ளது. இதில் ஆணையாளர் செயிட் வாய்மூல அறிக்கை சமர்ப் பிக்க வேண்டியுள்ளது. ஆனபடியால் சிறிலங்கா அரசு, கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தியிருக்கின்றது என்ற விடயம் சம்பந்தமாக தெரிவிக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் அடுத்த ஆண்டு எழுத்து மூலமான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனபடியால் இந்தக் கருமங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். நாங்கள் நிறைவேற்றுவோம் என்று சிறிலங்கா அரசு சொல்கின்றது.

கேள்வி:- சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தமிழ் – முஸ்லிம் மக்கள் இணைந்து போராடுகின்றார்கள். இது தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- எமது மக்கள் நீண்ட காலமாக போராடியிருக்கின்றார்கள்; போராடுகின்றார்கள். நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் போராடியிருக்கின்றார்கள். போராட்டங்களால் நானும் சிறை சென்றவன். போராட்டம் புதுவிடயம் அல்ல. சரித்திரத்துடன் பின்னிப் பிணைந்த விடயம். சம்பூர் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றது. 818 ஏக்கர் காணி இலங்கை அரசினால் உயர்நீதிமன்ற வாக்குறுதிகளை மீறி – நாடாளுமன்ற வாக்குறுதி மீறி முதலீட்டுச் சபையில் ஒப்படைக்கப்பட்டு முதலீட்டுச் சபையினால் தனியார் நிறுவனத்துக்கு கொடுத்து அந்தத் தனியார் நிறுவனம் வேலை ஆரம்பிப்பதற்கு ஒழுங்கு செய்து கொண்டிருந்தார்கள். மகிந்த காலத்தில் அது நடந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இவை அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டது. அந்தக் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்ற ஆண்டு ஆவணி மாதம் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஒரு வாரத்தினுள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சம்பூருக்கு வந்து காணிகளைத் திருப்பி ஒப்படைத்தார். அந்தக் காணிகளில் மக்கள் குடியமர்கின்றார்கள்.

238 ஏக்கர் காணியில் நிரந்தரமாக கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த கடற்படை முகாம் அகற்றப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதுக்கு மேலதிகமாக 500 ஏக்கர் காணி அனல் மின்நிலையத்துக்கு ஒதுக்கப்பட்டது. அதில் இற்றை வரையில் ஒரு மாற்றமும் இல்லை. அந்தக் காணியில் வசித்தவர்கள் 7 பேர். அவர்களுக்கு வேறு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பூர் மக்கள் கூறுகின்றார்கள் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டால் தங்களுக்கு சில பல பாதிப்புக்கள் ஏற்படும் என்று. அதில் உண்மையில்லை என்று எவரும் கூற முடியாது. அதில் ஓரளவு உண்மை உண்டு. நான் விசாரித்த அளவில் கரிய தூசி, பறக்கும் சாம்பல் என இவ்விதமான பொருட்கள் வெளியேற்றம் காரணமாக மக்களுக்கு சில பாதிப்புக்கள் ஏற்படலாம். இவை பரிசீலிக்கப்பட வேண்டிய விடயங்கள். நுரைச்சோலையை மக்கள் எதிர்த்தார்கள். ஆனால், இன்றைக்கு மக்கள் எதிர்க்கவில்லை. எதிர்த்த பலர் அனல் மின்நிலையத்தில் வேலை பெறுகின்றனர். எனவே, சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம். இலங்கை – இந்திய அரசுடன் பேசுவோம். நிபுணர்களுடன் பேசுவோம். மக்களுடன் பேசுவோம். எல்லோருடனும் பேசி கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணக்க அரசியல் செய்கின்றது என்று கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மையில் கூறியிருக்கின்றாரே?

பதில்:- தினேஸ் குணவர்த்தன போல் அவரும் கண்டபடி உளறுகின்றார். குழம்பின குட்டையில் அவர்கள் மீன்பிடிக்கப் பார்க்கின்றனர். அதை விடுங்கோ. உங்களுக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் எங்கேயோ போறம். நாங்கள் ஒரு பாதையில் இலக்கோட போறம். நாங்கள் போய்ச் சேர வேண்டும். நாங்கள் எடுக்கும் அந்த முயற்சிகளை பலர் தடை செய்கின்றனர். அவ்வாறானவர்கள் எங்கள் பகுதியிலும் இருக்கின்றார்கள். எங்களுக்குத் தெரியும் எங்கள் மக்களுக்கு என்ன தேவை என்று. எமது மக்களுக்கு ஒரு நிரந்தரமான – நியாயமான – நடைமுறைப்படுத்தக் கூடிய – நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். அது எங்களது மக்களின் இறைமையின் அடிப்படையில் பெறப்பட வேண்டும். அது அவர்களின் பிறப்புரிமை. எங்கள் மக்கள் மீது நாங்கள் ஒருபோதும் தீர்வைத் திணிக்க மாட்டோம். மக்களைச் சந்தித்து மக்களின் சம்மத்துடனேயே தீர்வை ஏற்றுக்கொள்வோம். எமது மக்களைக் கைவிட மாட்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *