மேலும்

நவிபிள்ளையை எச்சரித்து விட்டு போரைத் தீவிரப்படுத்திய மகிந்த – கனடாவில் வெளிவந்த உண்மை

தமது நாட்டில் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டும் பாரிய நடவடிக்கையை தாம் முன்னெடுப்பதாகவும், அதற்காகத் தன்னை நான் விமர்சனம் செய்யக் கூடாது என்றும், சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச தன்னிடம் தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை.

கனடாவின், ரொரொன்ரோவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 07), என்.சிவலிங்கம் நினைவுப் பேருரை ஆற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு உரையாற்றிய நவநீதம்பிள்ளை மேலும் குறிப்பிடுகையில்,

“ நான் 2008 செப்ரெம்பரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளராகப் பதவியேற்றேன். அப்போது,  ஐ.நா பொதுச்சபையின் உயர்மட்டக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். அது எனக்கு முதலாவது கூட்டம்.

அப்போது, சிறிலங்கா அதிபர் என்னைச் சந்திக்க விரும்புவதாக, ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அப்போது சிறிலங்கா அதிபராக இருந்தவர் மகிந்த ராஜபக்ச.

அவர் என்னிடம், தனது நாட்டில் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பாரிய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், தன் மீது நான் விமர்சனங்களை முன்வைக்கக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்.

navi-pillay

சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐ.நா தவறிவிட்டது.

போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஒன்றை ஆரம்பிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவும் ஐ.நா தவறிவிட்டது.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் உள்ள சில நாடுகள், குறுகிய பூகோள அரசியல் நலன்களுக்காக, இந்த விடயத்தில் கூட்டு ஆர்வத்தைக் காண்பிக்கத் தவறிவிட்டன.

பொதுமக்களைப் பாதுகாக்கும் தமது கடப்பாட்டை ஐ.நா நிறைவேற்ற வேண்டுமானால், அதன் நோக்கங்களில் உறுதியாகவும், பிளவுபடாமலும் இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீதியைப் பெற்றுக் கொடுக்க புலம்பெயர் தமிழர்கள், தமது அரசாங்கங்கள் மீது அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *