மேலும்

பலம்மிக்க கூட்டணியை உருவாக்கிய வைகோ வாக்குச்சேகரிப்பில் வெற்றி காண்பாரா?

tamilnadu election1989 முதல் 2011 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் போன்றில்லாமல் தற்போதைய தேர்தல் களம் மாறு பட்டிருக்கிறது.  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி ஆட்சியைப் பிடிப்பதில், இந்த முறை நமக்கான வாய்ப்பு என்று கணக்கிட்டிருந்த திமுகவிற்கு தற்போதைய தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி கடும் சேதத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையுள்ளவர்களின் வாக்குகள் திமுகவிற்கே வந்து சேரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இடையில் புகுந்திருக்கும் தேமுதிக மக்கள்நலக்கூட்டணி, திமுகவிற்குக் கடும் சவாலாக இருக்கும் .

திமுக காங்கிரசுக்கு எதிரான மனநிலை உள்ளவர்கள், ஈழ ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள் வாக்குகளைக் கடந்த தேர்தலில் அதிமுக அறுவடை செய்திருந்தது.  ஆனால்  இந்த முறை அந்த வாக்குகளை முழுமையாகப் பெற முடியாது. அந்த வாக்குகள் தேமுதிக, தமாகா மக்கள்நலக் கூட்டணிக்குச் செல்லக் கூடும்.  ஆளுங்கட்சியினர் இது வரை சம்பாதித்தது போதும் கொஞ்ச நாள் பாவம் அடுத்தவர்  சம்பாதிக்கட்டுமே என்று நினைத்து வாக்களிக்கிற வாக்காளர் பெருந்தகைகளும் தமிழகத்தில் இருக்கிறார்கள். இதுவும் அதிமுகவிற்குப் பாதகமான அம்சமே ஆகும்.

திமுக அதிமுகவின் வெற்றியைப் பாதிக்கப் போகிற காரணியாக இந்த அறுபடையை ஒருங்கிணைத்ததில் வெற்றி கண்டிருக்கிறார் வைகோ.

திருமாவளவனின் கூட்டணி ஆட்சி முன்மொழிவும், மதுவிற்கு எதிரான போரட்டங்களும் மக்கள் நலக் கூட்டியக்கத்தை உருவாக்கின. மக்கள் நலக் கூட்டணி உருவான புதிதில் மனிதநேய மக்கள் கட்சி விலகியது.  விடுதலைச் சிறுத்தைகள் திமுகவிற்கும் இடதுசாரிகள் அதிமுகவிற்கும் சென்றுவிடுவார்கள்,  மதிமுக வழக்கம் போல் தனித்து விடப்படும் என்று பேசப்பட்ட நிலையில், இந்த மக்கள் நலக் கூட்டணியைக் கட்டிக் காப்பதில் பெரும்பங்காற்றினார் வைகோ.

தேமுதிகவின் வாக்குவங்கி தன்னுடன் இணைந்தால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கணக்குப் போட்டிருந்த திமுகவிற்கும், பாமக  மற்றும் தேமுகதிவுடன் இணைந்து போட்டியிடலாம் என்று கணக்குப் போட்டிருந்த பாஜகவிற்கும் எதிராகக் காய் நகர்த்திய வைகோ விஜயகாந்தை மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்த்துவிட்டார். அதிமுகவுடன் சேர்ந்துவிடும் என்று பேசப்பட்ட தமாகாவையும் இந்தக் கூட்டணியில் கொண்டு வந்ததில் வைகோ அதிகமாகவே உழைத்தார் என்று சொல்லப்படுகிறது. குறைந்தது 35 முதல் 40 தொகுதிகள் மதிமுகவிற்கு இடங்களைப் பெற திட்டமிருந்த வைகோ, 6 கட்சிகளையும் ஒருங்கிணைப்பதற்காக 29 தொகுதிகளை மட்டுமே பெற்று, விட்டுக் கொடுத்து தனது மெகா கூட்டணியை உருவாக்கி விட்டார் என்று சொல்லப்படுகிறது.

கடந்தகால வரலற்றை இன்னும் கொஞ்சம் உற்று நோக்கினால் 1996 தேர்தலிலிருந்து 2014 தேர்தல் வரை,  வெற்றி தோல்வியை நிர்ணயித்த காரணிகளில் வைகோவும் ஒரு முக்கிய காரணியாகத் திகழ்ந்திருக்கிறார்.

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா ஊழல் செய்தார் என்று கூறி நடைபயணம் மேற்கொண்ட வைகோ தமிழகம் முழுவதும் அதிமுகவிற்கு எதிரான அலை உருவாகக் காரணமாக அமைந்தார். ஆனால் அதற்கான பலன் மதிமுகவிற்குக் கிடைக்கவில்லை, திமுகவும் தமாகவும் பயனடைந்தன.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதற்காக பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த வைகோ, அதிமுகவிற்கு எதிரான மனநிலையை தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்தார். ஆனால் 2004 மக்களவைத் தேர்தலில் மதிமுகவை மட்டந்தட்டுவதற்காக பாமகவிற்குத் தாராளமாக 7 இடங்களும், மதிமுகவிற்கு 4இடங்களையும் ஒதுக்கி மீதி இடங்களைக் காங்கிரசுடன் அறுவடை செய்து கொண்டது திமுக.

2001 சட்டமன்றத் தேர்தலில் கடைசி நேரத்தில் திமுகவிடமிருந்து மதிமுக விலகியதால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 47 இடங்களுக்கும் மேலாக திமுக தனது வெற்றியை இழந்தது.

2006 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் மதிமுக கூட்டணி அமைத்ததால் ஆட்சியமைக்கப் போதுமான இடங்களைத் திமுகவால் பெற முடியாமல் போனது. மதிமுகவின் வாக்குவங்கி காரணமாக குறைந்த வாக்கு எண்ணிக்கையில் 40 இடங்களுக்கும் மேலாக திமுக தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இந்தத் தேர்தலில் வலிமை மிக்க எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதற்கு மதிமுகவின் வாக்குவங்கி பயன்பட்டது.

2011ல் திமுக ஆட்சியில் நிலவிய மின்சாரத் தட்டுப்பாடு, திமுக காங்கிரஸ் சுமத்தப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஊழல், ஈழத் தமிழர் படுகொலை போன்வற்றை மையப்படுத்தி தமிழகம் முழுவதும் வைகோ பிரச்சாரம் செய்தார். ஆனால் அவரைக் கழற்றி விட்ட அதிமுக ஆட்சியைப் பிடித்தது.

2014 மக்களவைத் தேர்தலில் மோடிக்கு ஆதரவாக பாஜகவுடன் முதலில் இணைந்த மதிமுக தோல்வியையே சந்தித்தது. ஆனால் பாஜகவும் பாமகவும் ஒவ்வொரு இடங்களில் வென்று பயனடைந்தனர்.

இவ்வாறு 1996 முதல் 2014 வரை தமிழகத்தின் அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத ஆற்றலாக வைகோ இருந்தாலும் வெற்றி பெறுவதில் மட்டும் தோல்வியையே சந்தித்து வந்திருக்கிறார்.

ஆனால் முதன்முறையாக ஒரு மெகா கூட்டணியை ஒருங்கிணைத்த வைகோ தனது அரசியல் வாழ்க்கையில் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கறார் என்றே சொல்லலாம்.

ஒருங்கிணைத்ததில் வெற்றி கண்ட வைகோ, வாக்குச் சேகரிப்பில் வெற்றி காண்பாரா என்பதை இனி பார்ப்போம்.

தற்போதைய சூழலில் திமுக, அதிமுகவிற்கு மாற்று என்று சொல்லிக் கொண்டு பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் நிற்கின்றன. எனவே நடுநிலையாளர்களின் வாக்குகளும் புதிய வாக்காளர்களின் வாக்குகளும் யாருக்கு விழும் என்ற குழப்பமான சூழல் தற்போது நிலவுகிறது.

தேமுதிக மக்கள் நலக் கூட்டணி வாக்குவங்கி 15 லிருந்து 20 சதவிகிதம் இருக்கலாம் என்று கணக்கடப்படுகிற நிலையில் தேர்தல் களத்தில் வெற்றி பெற 35 முதல் 40 சதவிகிதம் வரை வாக்குகள் தேவைப்படுகின்றன. எனவே இன்னும் 15 சதவிகிதம் முதல் 20 சதவிகித வாக்குகளைப் பெறுவதற்கு இந்த மாற்று அணி என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான் இப்போதைய கேள்வி.

தமிழகத்தில் உள்ள நடுநிலையாளர்களின் வாக்குகள் 10லிருந்து 15 சதவிகிதம் வரை இருக்கலாம். புதிய வாக்காளர்கள் 15 சதவிகிதம் பேர் உள்ளனர். ஆனால் இந்தப் புதிய வாக்காளர்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோர் சார்ந்த கட்சிக்கே வாக்களித்து வருகின்றனர் என்பது தான் கடந்த கால தமிழகத் தேர்தல் வரலாறு சொல்லும் பாடமாக உள்ளது.

தேமுதிகவுடன் திமுக 500 கோடி பேரம் என்ற பேச்சு, அதிமுகவுடன் 1500 கோடி பெறப்பட்டதா என்ற கேள்விக்குப் பதில் அளிக்காமை, சிறுதாவூர் பங்களாவில்   பணம் பதுக்கல் என்ற பேச்சு, கோடிகள் கொடுத்துத் தேமுதிகவை உடைக்கப் பார்க்கிறது திமுக, வேறு தொழில் செய்யலாம், நாதஸ்வரம் வாசிக்கச் செல்லலாம் போன்ற பேச்சுகள் யாவும் வைகோவை எதிர் அரசியலாளராகவே காட்டி வருகின்றன.  வைகோ தன்னிலை மறந்து பதற்றத்தில் பேசுகிறார் என்றே திமுகவினர் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆனால் வைகோவிற்கு இன்னொரு முகம் உண்டு. அவர் நேர் அரசியல் செய்ய தகுதியானவர் தான். அவரின் கடந்த வரலாறு இந்த உண்மையைப் பறைசாற்றிச் சொல்லும்.

1970ல் திமுக இளைஞர் அணியின் அமைப்பாளர் பொறுப்பின் மூலம் அரசியல் வாழ்வில் நுழைந்த வைகோ தனது ஆழம் நிறைந்த கருத்துச் சொல்லாற்றல் காரணமாக 1978ல் திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.

தமிழகத்தின் பிரச்சினைகள், தமிழுக்கான பிரச்சினைகள், இலங்கைத் தமிழருக்கான பிரச்சினைகள், தமிழகத்தின் நீராதாரப் பிரச்சினைகள், இடஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இவர் பேசிய பேச்சுகள் யாவும் எல்லா அரசியல் தலைவர்களாலும் கட்சிப்பாகுபாடின்றிப் பாராட்டப்பட்டன.

1977ல் திமுகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி தமிழகத்தில் அசைக்க முடியாத தலைவரான உருவான எம்ஜியாருக்கு எதிராகத் திமுகவின் கொள்கைப் பீரங்கியாகச் செயல்பட்டவர் வைகோ.

பேரறிஞர் அண்ணா,  மு கருணாநிதி, மக்கள்திலகம் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா,  தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் யாவரும் திரைத்துறை மூலமாக மக்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்ட நிலையில் தனது பேச்சாற்றல் மூலமாகவே மக்களின் மனம் கவர்ந்தவர் வைகோ. தங்களின் பாரம்பரிய சித்தாந்தங்கள் மூலமாக இடதுசாரிகளும், தேசிய அளவிலான சக்திகள் என்கிற முறையில் காங்கிரஸ் மற்றும் பாஜகவும், ஜாதி அடையாளம் மூலம் பாமகவும் தங்களை நிலைநிறுத்திய நிலையில் பொதுமக்கள் மையத்தில் ஊடுருவ வழியே இல்லாத வைகோ தனது பேச்சாற்றல் மூலம் தான் மக்களுக்கு அடையாளம் தெரியப்பட்டார் என்பது தான் உண்மை.

அந்த ஆயுதத்தைத் தான் அவர் மீண்டும் கையில் எடுக்க வேண்டும்.  மக்கள் நலன் சார்ந்த, இயற்கை நலன் சார்ந்த, மொழி நலன் சார்ந்த அவரின் பேச்சுகள் யாவும் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அவரின் பேச்சில் மேலோங்கியிருக்கும் வரலாற்று நிகழ்ச்சிகளும், இலக்கியச் சான்றுகளும், வாழ்க்கைப் பதிவுகளும் அவரின் சொற்பொழிவின் மீது ஈர்ப்பை உருவாக்க வல்லன. எந்தவிதமான முக்கிய வெற்றிகளைப் பெற முடியாவிட்டாலும், எத்தனை முறை சிதைக்கப்பட்டாலும் மதிமுக இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் இதற்கு வைகோவின் பேச்சாற்றல் தான் காரணம்.

இடதுசாரிகளின் கொள்கைப் பேச்சு, வாசனின் மரபுப் பேச்சு, திருமாவின் கருத்துப் பேச்சு, விஜயகாந்தின் ஈர்ப்புத் திறன் இவைகள் ஒன்று சேர்ந்திருக்கின்ற நிலையில் வைகோ மீண்டும் தனது நேர் அரசியல் பேச்சாற்றலை வெளிபடுத்த வேண்டும். மூன்றாந்தர அரசியல் வாதிகளைப் போல் எதிர்அரசியல் பேசுவதை அவர் தவிர்க்க வேண்டும்.

வைகோவின் பலமும் பலவீனமும் எது என்று கலைஞரிடம் வினா எழுப்பப்பட்ட போது அவர் சொன்ன பதில்,” வைகோவின் பேச்சு தான் அவரின் பலமும் பலவீனமும்”.

கலைஞர் சுட்டிக்காட்டிய உண்மையைப் புரிந்து கொண்டால், கட்சிகளை ஒருங்கிணைத்ததில் வெற்றி கண்டது போல் வாக்குச் சேகரிப்பிலும் வைகோ வெற்றி பெறக்கூடும்.

-சி.சரவணன்
வழிமூலம் – தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *