மேலும்

அதீத நம்பிக்கையுடன் களமிறங்கும் அதிமுக

tamilnadu electionஅதிமுகவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக இந்த சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அந்த அணியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 227 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டார். தோழமை கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு பிரச்சார பயண திட்டத்தையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதி யில் 9-ம் தேதி அவர் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது என தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுகவில் கடந்த சில நாட்களாக வேட்பாளர் நேர்காணல் நடத்தப்பட்டு வந்தது. மேலும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், 227 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.

திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர், 1972-ல் அதிமுகவை தொடங்கினார். அதன்பிறகு, முதல்முறையாக 1977 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 200 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர்.

அதன் பிறகு 1980-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 177 தொகுதிகளிலும், 1984-ம் ஆண்டு தேர்தலில் 155 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் அதிமுக (ஜெ) அணி எனவும், ஜானகி எம்ஜிஆர் தலைமையில் அதிமுக (ஜா) அணி எனவும் அக்கட்சி பிளவுபட்டது. அதன்காரணமாக 1989 பேரவைத் தேர்தலில் அதிமுகவின் அதிகாரபூர்வமான இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதிமுக (ஜெ) அணி வேட்பாளர்கள் 198 தொகுதிகளில் சேவல் சின்னத்திலும், அதிமுக (ஜா) அணி வேட்பாளர்கள் 175 தொகுதிகளில் இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டனர்.

பின்னர் இரு அணிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து, அதிமுக ஒன்றுபட்டது. அதைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்கள் 168 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டனர். 1996-ம் ஆண்டு தேர்தலில் 168 தொகுதிகளிலும், 2001-ம் ஆண்டு 141 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக வேட்பாளர்கள் தேர்தலைச் சந்தித்தனர். 2006-ம் ஆண்டில் 188 தொகுதிகளிலும், கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 165 தொகுதிகளிலும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் களம் கண்டது.

இந்நிலையில், இந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டார். அந்தப் பட்டியலில் அதிமுக வேட்பாளர்கள் 227 பேர் இடம்பெற்றுள்ளனர். தோழமைக் கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவின் எல்லா தோழமைக் கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. இதனால், அதிமுகவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலேயே தேர்தலை சந்திக்கும் சிறப்பை அக்கட்சி பெற்றுள்ளது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஞானி கூறியதாவது:

ஏற்கெனவே 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாநிலக் கட்சி மேற்கொண்ட மிகவும் துணிச்சலான முடிவாக அது கருதப்பட்டது.

அந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றியால் பெரும் துணிச்சல் பெற்ற அதிமுக, வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி தேவையில்லை என்று கருதுகிறது. மேலும், தமிழகத்தில் தாங்கள்தான் மிகவும் பலமான கட்சி என்பதை மக்களுக்கு காட்ட அதிமுக விரும்புகிறது. அதன் வெளிப்பாடாகவே அதிமுக மட்டுமின்றி, அந்த அணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களையும் இரட்டை இலை சின்னத்திலேயே ஜெயலலிதா களத்தில் இறக்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான ஆர்.மணி கூறியதாவது:

தமிழகத்தின் 234 தொகுதிக ளிலும் இரட்டை இலை சின்னத்தில் தமது அணி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதன் மூலம் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கை வெளிப்படுகிறது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் எதிர்க்கட்சிகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அதிமுகவுக்கு எதிர் முகாமில் இருப்பவர்கள் பல அணிகளாக சிதறி நிற்கின்றனர். எதிர்க்கட்சிகளின் இந்த பலவீனத்தை ஜெயலலிதா மிகவும் துல்லியமாக புரிந்து வைத்துள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்த பலவீனமே அதிமுகவின் பலமாக மாறியுள்ளது.

அதிமுக வேட்பாளர் பட்டியலின் கவனிக்கத்தக்க அம்சங்கள்:

16 அமைச்சர்களுக்கு வாய்ப்பு

* வேட்பாளர் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 16 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

* ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். எம்.சி.சம்பத் (கடலூர்), பா.வளர்மதி (ஆயிரம் விளக்கு), எஸ்.கோகுல இந்திரா (அண்ணா நகர்), ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்த நாடு), சி.விஜயபாஸ்கர் (விராலி மலை), நத்தம் விஸ்வநாதன் (ஆத்தூர்), எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்), பி.தங்கமணி (குமாரபாளையம்), ஆர்.காமராஜ் (நன்னிலம்), கே.சி.வீரமணி (ஜோலார்பேட்டை), தோப்பு வெங்கடாச்சலம் (பெருந்துறை), எடப்பாடி பழனிச்சாமி (எடப்பாடி), செல்லூர் கே.ராஜூ (மதுரை மேற்கு), கே.டி.ராஜேந்திர பாலாஜி (சிவகாசி), ஆர்.பி.உதயகுமார் (திருமங்கலம்) ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

* கடந்த தேர்தலில் நத்தம் தொகுதியில் போட்டியிட்ட நத்தம் விஸ்வநாதன் ஆத்தூரிலும், சாத்தூரில் போட்டியிட்ட ஆர்.பி.உதயகுமார் திருமங்கலத்திலும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

* சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் கடந்த 2011-ல் ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டார். இந்த முறை அவினாசி (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். ஜெயலலிதா உட்பட 49 எம்எல்ஏக் களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

10 அமைச்சர்களுக்கு சீட் இல்லை

* தற்போதைய அமைச்சர்களில் பி.மோகன், பி.பழனியப்பன், எஸ்.சுந்தர்ராஜ், எஸ்.பி.சண்முகநாதன், என்.சுப்பிரமணியன், கே.ஏ.ஜெயபால், முக்கூர் சுப்பிரமணியன், எம்.எஸ்.எம். ஆனந்தன், டி.பி. பூனாட்சி, எஸ்.அப்துல் ரஹீம் ஆகிய 10 பேருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

* முன்னாள் எம்.பி.க்கள் 6 பேர், முன்னாள் எம்எல்ஏக்கள் 22 பேருக்கும், மாவட்ட ஊராட்சிக் குழு, ஊராட்சி ஒன்றியக் குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்களுக்கு கணிசமான தொகுதிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 150 பேர் புதுமுகங்கள்

அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள 227 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் ஜெயலலிதா உட்பட 49 பேர் தற்போது எம்எல்ஏக்களாக உள்ளனர். மீதமுள்ள 178 பேரில் 22 பேர் முன்னாள் எம்எல்ஏக்கள். இவர்களில், பண்ருட்டி ராமச்சந்திரன், கலையரசு, மாபா பாண்டியராஜன், பரிதி இளம்வழுதி ஆகியோர் மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்கள். மீதமுள்ளவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்.

தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம், வி.செந்தில்பாலாஜி, ராஜேந்திர பிரசாத் ஆகியோர் முன்னாள் அமைச்சர்கள். சிட்லபாக்கம் ராஜேந்திரன் உட்பட 6 முன்னாள் எம்.பி.க்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 150 பேர் புதுமுகங்கள். இவர்களில் பலர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

களம் காணும் 7 மாஜிக்கள்

* கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சராக இருந்து இடையில் விடுவிக்கப்பட்டவர்களில் கே.ஏ.செங்கோட்டை யன், கே.பி.முனுசாமி, வி.செந்தில் பாலாஜி, கே.டி.பச்சைமால், சி.த.செல்லப்பாண்டியன், சி.வி.சண்முகம், செல்வி ராமஜெயம் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

32 பெண் வேட்பாளர்கள்

* கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் 160 இடங்களில் அதிமுக போட்டியிட்டது. இதில் ஜெயலலிதாவுடன் சேர்த்து 13 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்தல்களில் சங்கரன்கோவில் – எஸ்.முத்துச்செல்வி, ஏற்காடு – சரோஜா, ஸ்ரீரங்கம் – எஸ்.வளர்மதி என 3 பெண்கள் நிறுத்தப்பட்டனர்.

* தற்போது 2016 சட்டப்பேரவை தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இதில் ஜெயலலிதா உட்பட 32 பெண் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் முதல்வர் ஜெயலலிதா, பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, செல்வி ராமஜெயம், மனோரஞ்சிதம் நாகராஜ், எஸ்.வளர்மதி ஆகியோர் தற்போது எம்எல்ஏவாக உள்ளனர். மற்றவர்கள் புதுமுகங்கள். வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வி.சரோஜா, நீலோபர் கபீல், எஸ்.தமிழரசி ஆகியோர் டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்ற சீனியர்கள்

* அதிமுகவைப் பொறுத்தவரை யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் என்பது சொல்ல முடியாது. கடந்த 1991-96 மற்றும் 2001-06 ஆகிய ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது தமிழக நிதியமைச்சராக இருந்தவர் சி.பொன்னையன். கடந்த 2006 மற்றும் 2011 தேர்தல்களில் இவருக்கு அதிமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் பொன்னையனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல தேமுதிகவில் இருந்து அதிமுகவுக்கு வந்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஆலந்தூர் தொகுதியே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர, கடந்த முறை வாய்ப்பு கிடைக்காத முன்னாள் அமைச்சர்கள் என்.தளவாய்சுந்தரம், கே.பி.ராஜேந்திர பிரசாத் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும் சீட்

* மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்து அதிமுகவில் இணைந்தவர்களில் சிலருக்கு தற்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏவான பரிதி இளம்வழுதிக்கு எழும்பூர் தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

அதிருப்தி தேமுதிக எம்எல்ஏக்களாக செயல்பட்டு வந்த மாஃபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், அருண் சுப்பிரமணியன், ஆர்.சாந்தி, ஆர்.சுந்தர்ராஜன், டி.சுரேஷ்குமார், கே.தமிழழகன், அருண்பாண்டியன் ஆகியோர் சமீபத்தில்தான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்தனர். இதே போல, பாமக எம்எல்ஏ கலையரசு, புதிய தமிழகம் கட்சி எம்எல்ஏ ஏ.ராமசாமி ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர். இவர்களில் க.பாண்டியராஜன் (ஆவடி), கலையரசு (அணைக்கட்டு) ஆகிய இருவருக்கு மட்டுமே இப்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக்கு 7 தொகுதிகள்

இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் (மதுராந்தகம் (தனி)), அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் (திருச்செந்தூர்), தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர் உ.தனியரசு (காங்கேயம்), எம்.தமிமுன் அன்சாரி தலைமை யிலான மனிதநேய ஜனநாயக கட்சிக்கு நாகப்பட்டினம், ஒட்டன் சத்திரம், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.ஷேக் தாவூத் (கடையநல்லூர்), முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் நடிகர் கருணாஸ் (திருவாடனை) ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மயிலாப்பூரில் முன்னாள் டிஜிபி

* காவல்துறை முன்னாள் இயக்குனர் ஆர்.நடராஜ், பணி ஓய்வுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அதிலிருந்த ஓய்வு பெற்றதும் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவருக்கு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால், கிடைக்கவில்லை. தற்போது, மயிலாப்பூர் தொகுதியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

* அதிமுக கூட்டணியில் சில தினங்களுக்கு முன்பு இணைந்த முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும், நடிகருமான கருணாஸுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் போட்டியிடுகிறார்.

அதிமுகவில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

வழிமூலம் – தி இந்து

தொகுப்பு – புதினப்பணிமனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *